மன்னித்து மறக்கிற தேவன்

ஜனவரி 20

அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை (எபி.10:17)

கிறிஸ்துவின் குருதியால் மூடப்பட்ட பாவங்களை, மறக்கிற இயல்பு உடையவராக தேவன் இருக்கிறார் என்னும் உண்மை, நமது ஆத்துமாவிற்கு மனநிறைவு அளிக்கக்கூடியதாகும். வேதத்தில் சொல்லப்பட்ட மிகச்சிறந்த உண்மைகளில் இதுவும் ஒன்றாகும்.

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் என்று நாம் படிக்கும்போது அது நமக்கு எத்தனை வியப்பளிக்கிறது (சங்.103:13). என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர் என்று எசேக்கியாவோடு சேர்ந்து நாம் கூறுவோமாயின் அது எத்தனை இன்பமாயிருக்கும் (ஏசா.38:17). உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன் என்னும் கர்த்தருடைய வாக்கு நம்முடைய உள்ளங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கச்செய்கிறது (ஏசா.44:22). நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன் என்பதை நாம் வாசிக்கும்போது, அது நமக்கு இன்னும் மிகுதியான வியப்பைத் தருகிறது (எரேமி.31:34).

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கைசெய்யும்போது, அவர் மன்னிப்பதோடு அதனை உடனடியாக மறக்கவும் செய்கிறார். அவருடைய மறதி என்னும் பெருங்கடலுக்குள், நமது பாவங்களை அறிக்கை செய்த உடனேயே மூழ்கடித்துவிடுகிறார் என்னும் உண்மை நம்முடைய கற்பனை வளத்தினால் உண்டாக்கப்பட்டதன்று. இதனை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சியால் விளக்கலாம். அவருடைய வாழ்க்கையில் அலைபாயும் பாவம் அவருக்குப் பெருந்தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தது. உடனே கர்த்தருக்கு முன்பாக ஓடிச்சென்று, கர்த்தாவே, அதனை நான் மீண்டும் செய்துவிட்டேன் என்று எதையும் சிந்திக்காமல் கூறுவார். எதனை நீ மீண்டும் செய்தாய்? என்று கர்த்தர் அவரிடம் கேட்பதாக எண்ணுவார். இங்கு சொல்லப்படுகிற உண்மை யாதெனில், பாவத்தை அறிக்கை செய்த அரைநொடியில், தேவன் அப்பாவத்தை மறந்துவிடுகிறார் என்பதேயாகும்.

சர்வ ஞானியான தேவன் மறக்கக்கூடியவர் என்பது முரண்பாடாகத் தோன்றுகிறது, எனினும் அது நமக்கு உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். விண்மீன்களை எண்ணி ஒவ்வொன்றையும் பெயர்சூட்டி அழைக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அலைக்கழிப்பையும், கண்ணீரையும் எண்ணி வைத்திருக்கிறார். சிட்டுக்குருவி மாய்ந்து வீழ்வதையம் அறிந்திருக்கிறார். நம் தலையில் எத்தனை முடிகள் உண்டு என்பதை அவர் அறிவார். என்றாலும் அறிக்கைசெய்து விட்டுவிட்ட பாவத்தை அவர் மறந்துவிடுகிறார். சர்வஞானி எவ்வாறு மறக்கமுடியும் என்பதை நான் அறியமாட்டேன். ஆனால் அவர் மறக்கிறார் என்று டேவிட் சீமன்ட்ஸ் என்பார் கூறியுள்ளார்.

கடைசியாக, தேவன் மன்னித்து மறந்துவிடுகிறபோது அங்கே, “தோண்டிப்பார்க்காதே” என்னும் அறிவிப்புப் பலகையை வைத்துவிடுகிறார். தேவன் மறந்துவிட்ட நம்முடைய முந்தின பாவங்களையும், பிறருடைய பாவங்களையும் நாம் தோண்டியெடுத்து அலசிப்பார்க்கக்கூடாது என்று தடைசெய்யப்பட்டிருக்கிறோம். இதில் நாம் கொஞ்சமாக நினைவுகூர்தலும், மிகுதியான மறதியும் உடையவர்களாயிருக்கவேண்டும்.