பாவத்தை அறிக்கையிடுதல்

ஜனவரி 19

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1.யோ.1.9)

இவ்வசனத்தைப் பற்றிக்கொள்ளாமல், கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும். கிருபையைப் பெற்றிருக்கும் நாம், முழுவதும் பாவமாயிருக்கிறோம் என்னும் உண்மையை மிகவும் கவனத்தோடு எப்பொழுதும் நினைவில் கொண்டிருக்கவேண்டும். அவ்வப்போது நம்முடைய பாவங்கள் உடனுக்குடன் கழுவப்படுதலுக்கு ஏதோ ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். இல்லையெனில் அதினிமித்தம் தொடர்ந்து நம்மைப் பற்றும் குற்றஉணர்வினாலும், தோல்வியினாலும் நாம் அழிந்தேபோவோம். விசுவாசிகளுடைய பாவம் கழுவுவதற்கான ஏற்பாடு பாவ அறிக்கை செய்வதால் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று யோவான் இங்கே எடுத்துக் கூறுகிறார். அவிசுவாசிகள் தங்களுடைய பாவங்களுக்கான ஆக்கினையிலிருந்து, நீதிமன்றம் வழங்குவதற்கொப்பாகப் பாவமன்னிப்பை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பெறுகிறார்கள். மாறாக விசுவாசிகளோ, தங்கள் பாவங்களை அறிக்கை செய்வதால், பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பெறுவது போன்று மன்னிப்பைப் பெறுகின்றனர்.

தேவனுடைய பிள்ளையானவன் தனது பாவத்தினால் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியத்தை இழந்து போகிறான். அந்தப் பாவம் அறிக்கை செய்யப்பட்டு விட்டுவிடப்படுகிறவரை, அந்த ஐக்கியம் முறிந்தே காணப்படும். நாம் அறிக்கை செய்கிறபோது, நம்மை மன்னிப்பதாக தேவன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உண்மையுள்ளவராக இருக்கிறார். கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய செயலின் அடிப்படையில் உண்டான நீதியால் அவர் நம்மை மன்னிக்கிறார்.

நாம் நம்முடைய பாவத்தை அறிக்கை செய்வதால், குற்றங்கள் நீங்கி, முற்றிலும்மாகக் கழுவப்பட்டு மகிழ்ச்சியுடைய முன்னிருந்த குடும்ப ஐக்கியத்தின் நிலைமைக்குக் கொண்டுவரப்படுகிறோம் என்றே இவ்வசனம் கூறுகிறது. ஆகவே, நமது மனச்சாட்சி நமது வாழ்க்கையில் பாவம் உண்டு என்று எடுத்துரைக்கும்போது, தேவனுடைய முன்னிலையில் சென்று, பாவத்தை அதனுடைய பெயர் சொல்லி அழைத்து, அறிக்கையிட்டு அதனைக் களைந்து, அது நம்மைவிட்டு அகற்றப்பட்டுவிட்டது என்பதை அறியவேண்டும்.

இதனை எவ்வாறு உறுதியாக அறிய முடியும்? மன்னிக்கப்பட்டாயிற்று என்று உணர்வதாலோ? அல்ல, இது உணர்ச்சியோடு சம்பந்தம் உடையது அன்று. தேவன் தம்முடைய திருமொழியில் அங்கனம் கூறியிருப்பதால், இதனை நாம் அறிகிறோம். உணர்ச்சிகளைச் சார்ந்திருப்பது சிக்கல் உடையது. தேவனுடைய திருமொழியோ உறுதிபடைத்தது.

தேவன் என்னை மன்னித்துவிட்டார் என்று நான் அறிவேன். ஆனால் என்னை நான் மன்னிக்கமுடியாது என்று ஒருவர் கூறலாம். இவ்வாறு கூறுவது பக்தி வேடம் அணிந்த ஒன்றாக இருப்பினும், தேவனைக் கனவீனப்படுத்துவதாகவே அமையும். தேவன் என்னை மன்னித்திருப்பதன் காரணம் யாதெனில், விசுவாசத்தினாலே அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதும், அதில் களிகூரவேண்டுமென்பதும், கழுவப்பட்ட பாத்திரமாக வெளியில் சென்று அவருக்குப் பணியாற்றவேண்டுமென்பதுமேயாகும். இதனை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.