தோல்விக்குப் பின் வெற்றி

ஜனவரி 16

இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
(யோனா 3:1)

நம்பிக்கையையும், வாக்குறுதியையும் ஏந்தியவாறு, ஒளிவீசும் நற்செய்தியைக் காண்கிறோம். ஒரு மனிதனுடைய வீழ்ச்சியின் காரணமாக அவனை தேவன் அறைக்குள் வைத்துப் பு+ட்டிவிடுவதில்லை.

வன்மையான உண்மையோடு தாவீதின் குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை நாம் படிக்குங்கால், அவனோடு புழுதியில் அமர்ந்து, வெட்கத்தில் மூழ்கிப்போகிறோம். ஆனால், மனம் உடைந்த தாவீது மனந்திரும்பவேண்மென்ற வேட்கையோடு கர்த்தரின் பாதத்தில் வீழ்ந்தான். தேவன் அவனை மன்னித்து, கனிதரும் வாழ்வினைத் திரும்பக்கொடுத்தார்.

தேவனுடைய ஊழிய அழைப்பிற்கு இணங்காமல், மீனின் பெருவயிற்றினுள் சென்றடைந்தான் யோனா. உயிருள்ள நீர்மூழ்கிக் கப்பலாகிய அவ்விடத்தில் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டான். இரண்டாம் முறை தேவனுடைய அழைப்பினைப் பெற்ற யோனா, நினிவே பட்டணம் சென்று, சடுதியாய் வரவிருக்கும் ஆக்கினையை மொழிந்து, மக்கள் பெருங்கூட்டம் மனம் தாழ்த்தி துக்கத்தில் ஆழ்ந்ததைக் கண்டான்.

பவுலோடும், பர்னபாவோடும் பளிச்சிடும் வண்ணம் பணியினைத் தொடங்கிய மாற்கு, தொடர்ந்து செல்ல வகையறியாது வீடு திரும்பினார். எனினும், தேவன் அவரைக் கைவிடவில்லை. மீண்டும் போர்பொரு உறுதிப+ண்ட மாற்கு, நற்செய்திப் பணிவீரர் பவுலின் நம்பிக்கையைப் பெற்று, குறைவில்லாத ஊழியரின் நற்செய்தியை எழுதும் பேறுபெற்றார்.

சாகாத பற்றுடன் பதறிப்பேசிய பேதுரு, கர்த்தரை மும்முறை மறுத்துரைத்தார். சிறகொடிந்த பறவை மீண்டும் சீருடன் பறக்காது என்றே எண்ணுவர் மானிடர். பயனற்றவர் என்று பேதுரு கைவிடப்படவில்லை. எட்டாத உயரத்துக்கு தேவன் அவரைப் பறக்கச் செய்தார். பெந்தெகொஸ்தே பெருநாளில் 3000 பேருக்குப் பரலோகின் கதவைத் திறந்தார். அயராது, உழைத்து, பகைஞரின் சீற்றத்துக்கு ஆளாகிப் பாடுகளை அனுபவித்தார். இரண்டு மடல்கள் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கின்றன. மகிமைநிறை ஊழியத்தில் பேதுரு தன்னுயிரை மாய்க்கக் கொடுத்து, மன்னருக்கு முடிசூட்டினார்.

ஆகவே, பணியினைப் பொருத்தமட்டில், இறைவன் இரண்டாம் முறையும் இடமளிக்கிறார். ஒருமுறை தோல்வியுற்ற ஒருவன் ஒதுக்கித் தள்ளப்படுவதில்லை. நொறுங்குண்ட ஆவியும், நருங்குண்ட உள்ளமும் உடைய தோல்வியடைந்த வீரனின் தொங்கிய சிரசினை, கர்த்தர் தாமே இறங்கிவந்து தாங்கியே, உயர்த்திடுவார்.

பாவத்தையும், தோல்வியையும் பொறுத்துக் கொள்வதற்காக இச்செய்தி கொடுக்கப்படவில்லை. ஒருவருடைய தோல்வியினால் ஏற்படும் உள்ளம் கசப்பும், ஆழ்ந்த வருத்தமும் தொடர்ந்து அவர் தவறிழைக்காதபடி தடுத்து நிறுத்தும்.

மனந்திரும்பாத பாவி இப்புவி வாழ்விற்கு பிறகு இரண்டாவது சந்தர்ப்பத்தைத் தேவனிடத்திலிருந்து பெற்றிடுவான் என்பது இதன் பொருளன்று. அவன் பயங்கரமான மரணத்தை அடைவான் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. பாவத்தோடு மரணம் எய்துகிறவன், “மரம் விழுந்த இடத்திலேயே கிடக்கும்” என்னும் ஆக்கினையைப் பெறுவான் (பிர.11:3).