தேவதிட்டத்தில் முன்னேறுதல்

ஜனவரி 13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலி.4:13)

இத்தகைய வசனத்தின் உண்மையான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது இயற்கையே. இதனைப் படித்தவுடன், நாம் செய்ய முடியாத நூற்றுக்கணக்கான செயல்களைப்பற்றி எண்ணுகிறோம். நம்முடைய அளவிற்கு அப்பாற்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்கிறோம். இதன் காரணமாக, இவ்வசனம் நமக்கு ஆறுதலை அளிப்பதற்கு மாறாக இடர்ப்பாட்டினையே அளிக்கிறது.

நாம் என்ன செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறாரோ, அதனைச் செய்து முடிக்கும் திறனை அவர் தந்தருளுகிறார் என்பதே இவ்வசனத்தின் உண்மையான பொருளாகும். அவருடைய சித்தம் என்னும் வட்டத்திற்குள், முடியாதது என்று ஒன்றுமேயில்லை.

இந்த இரகசியத்தை பேதுரு அறிந்திருந்தார். அவர் தனது சொந்த பலத்தினால், நீரின் மேலே நடக்க இயலாது என்பதை அறிந்திருந்தார். மேலும் அவர் அதனைச் செய்ய வேண்டும் என்று கர்த்தர் கூறினால், தன்னால் அதைச் செய்ய முடியும் என்று அறிந்திருந்தார். “வா” என்று இயேசு கிறிஸ்து கூறிய உடனே, படகிலிருந்து இறங்கி நீரின் மேலே கர்த்தரை நோக்கிப் பேதுரு நடந்தார்.

என்னுடைய கட்டளையின்படி, பொதுவாக ஒரு மலையானது பெயர்ந்து கடலுக்குள் மூழ்கிவிடாது. கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதற்கும் எனக்கும் இடையில் அந்த மலையானது நிற்குமென்றால், அப்பொழுது அம்மலையை நோக்கி, “பெயர்ந்து போ” என்று நான் கூறும் வேளையில், அது அங்கிருந்து பெயர்ந்து போகும்.

சுருங்கக் கூறின், அவருடைய கட்டளைகள், அவரால் செயலாற்றக் கூடியவையே. ஆகவே, எல்லாவிதச் சோதனையையும் தாங்க அவர் பெலன் தருவார். ஓவ்வொரு, சோதனையை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு பழக்கத்தை வெற்றிகொள்ளவும் எனக்குத் தேவையான வலிமையைத் தருகிறார். தூய சிந்தனையோடு கூடிய வாழ்க்கையைக் கொண்டிருக்கவும், தூய்மையான நோக்கங்களை உடையவனாயிருக்கவும், அவருடைய உள்ளத்திற்குப் பிரியமானதைச் செய்யவும் அவர் எனக்கு வலிமையைத் தருகிறார்.

ஏதோ ஒன்றைச் செய்து முடிக்கத் திறன் அற்றுப்போவேனேன்றால், அதாவது சரீரத்திலும், மனதிலும், உணர்ச்சியிலும் செயலற்றுப்போவேனென்றால், அவருடைய சித்தத்தைத் தவறவிட்டு, என்னுடைய சுயவிருப்பத்தை நாடுகிறவனாகச் செயல்புரிகிறேனோ என்று என்னையே நோக்கிக் கேள்விகேட்கவேண்டும். தேவனுக்கென்று பணிபுரிகிறவனாகத் தோன்றினாலும் உண்மையில் தேவனுடைய பணியைச் செய்யாதவனாக நான் இருப்பேன். அவர் வாக்களித்த வல்லமையை அத்தகைய செய்கையில் காண இயலாது.

ஆகவே, அவருடைய திட்டங்களின் நீரோட்டத்தில் நாம் முன்னேறிச் செல்கிறவராக இருக்கிறோம் என்ற அறிவு நம்மைத் திடங்கொள்ளச்செய்து, பெருமகிழ்ச்சியின் நம்பிக்கையை நமக்களிக்கும்.