May

பாராட்டுதல் பெற்ற ஜெபம்

 2024 மே 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,10 முதல் 15 வரை)

  • May 7
❚❚

சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது (வசனம் 10).

சாலொமோனின் வேண்டுகோள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தது. ஞானம், பகுத்தறிவு மற்றும் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் பெரும் தேவையை சாலொமோன் அறிந்திருந்தார். மேலும் இவன் தனக்காகச் செல்வத்தையோ, புகழையோ, அதிகாரத்தையோ கேட்காததைக் கண்டும் கர்த்தர் மகிழ்ச்சியடைந்தார். சாலொமோன் ஜெபத்தில் பொருட்களைக் கேட்கவில்லை, மாறாக தன்னுடைய குணத்தை மெருகேற்றும்படியான காரியத்தைக் கேட்டான். நம்மிடம் என்ன இருக்கிறது என்பதைக் காட்டிலும் நாம் யாராக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். இதுவே அவனது வேண்டுகோளை தேவனுடைய பார்வையில் பிரியமுள்ளதாக மாற்றியது. நம்முடைய ஜெபங்கள் கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்கிறதா என்று யோசித்துப் பார்ப்போம். மேலும் இன்றைய கிறிஸ்தவம் செல்வத்தை நோக்கியும், புகழைத் தேடியும், அதிகாரத்தை நாடியும் சென்றுகொண்டிருப்பது நிச்சயமாகவே கர்த்தருக்குப் பிரியமான ஒன்றாக இராது என்பதில் சந்தேகமில்லை. செல்வமும் புகழும் பரலோகத்தைப் பார்க்கிற நம்முடைய கண்களுக்கு முன்பாக ஒரு பெரிய திரையை விரித்துவிடும். ஞானமும், உணர்வுள்ள இருதயமும் நம்மை கர்த்தரோடு நெருங்கிச் சேர்க்கும், இதுவே நம்முடைய குணத்தையும் சிறந்த முறையில் கட்டியெழுப்பும்.

“உன் வார்த்தைகளின்படி செய்தேன்” (வசனம் 12),  இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்” (வசனம் 13) என்று கர்த்தர் கூறினார். கர்த்தர் சாலொமோனின் எதிர்பார்ப்பை மட்டுமின்றி, அவன் கேளாததையும் செய்தார். சாலொமோன் கேட்காத ஐசுவரியத்தையும், கனத்தையும் அவனுக்குக் கொடுத்தார். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு” (எபேசியர் 3,20) என்று பவுல் கூறுகிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் கூடக் கொடுக்கப்படும் என்று ஆண்டவரும் உரைத்திருக்கிறார் (மத்தேயு 6,33). தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கிறார்கள். ஆகவே நாம் கர்த்தருக்கும், அவருடைய காரியங்களுக்கும் முன்னுரிமை அளிப்போம். அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.

நாம் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட கிருபைக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிற நாம் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று எபேசியர் நிருபத்தில் பவுல் மீண்டும் வலியுறுத்துகிறார்.  “உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன்” (வசனம் 14) என்று கர்த்தர் நிபந்தனையையும் விதித்தார்.  ஐசுவரியத்தையும் கனத்தையும் போல ஆயுளை ஆண்டவர் நிபந்தனையின்றி தரவில்லை. நாம் கர்த்தருடைய வழியில் நடந்து, நமது பெற்றோரைக் கனம்பண்ணும்போது நம்முடைய ஆயுள் நீண்டதாக மாறும் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார். பிதாவே, எங்களுடைய ஜெபங்கள் இரட்சிப்படைந்த புதிய மனிதனின் குணத்தை வளர்ப்பதற்கேற்றதாக இருக்கும்படி ஞானமுள்ள இருதயத்துடன் கேட்க உதவி செய்தருளும், ஆமென்.