May

துரோகத்துக்கு உடந்தை

2024 மே 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,26 முதல் 27 வரை)

  • May 1
❚❚

“சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்” (வசனம் 27).

அதோனியாவின் சூழ்ச்சிக்கு ஆசாரியனாகிய அபியத்தார் உடந்தையாயிருந்ததினிமித்தம் சாலொமோனால் அவன் தண்டனை அடைந்தான். கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்தில் பணிபுரிகிற ஆசாரியன் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ராஜாவுக்கு விரோதமான சூழ்ச்சியில் பங்குபெற்ற செயலானது அவன் கர்த்தருக்கு மட்டுமின்றி, அந்தப் பதவிக்கும் உண்மையற்றவனாக இருந்தான் என்பதைக் காட்டுகிறது. முன்னொரு காலத்தில் அப்சலோம் தந்தைக்கு விரோதமாக எழும்பியபோது இந்த அபியத்தார் தாவீதின் பக்கம் நின்று தன்னுடைய உத்தமத்தை வெளிப்படுத்தினான். ஆனால் இப்பொழுதோ அப்சலோமின் தம்பிக்கு ஆதரவாக அவன் மனது மாறிப்போனது ஒரு துர்ப்பாக்கிய செயலே ஆகும். கடந்த கால வெற்றி தற்போதைய சோதனையை வெற்றிகொள்ள உதவாது. தொடர்ந்து விழிப்புடன் இருப்பதே வெற்றிக்கான வழி. “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்” (2 கொரிந்தியர் 11,3) என்ற பவுலின் அங்கலாய்ப்பை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். “உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்” (கலாத்தியர் 1,6) என்று பவுல் கலாத்தியா சபையாரைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்.

அபியத்தார் கர்த்தருடைய பெட்டியைச் சுமக்கிறவன் என்ற முறையில் சாலொமோன் அவனைக் கொல்லாமல், அவனுடைய பதவியைப் பறித்து, சொந்த ஊருக்கு நாடு கடத்தினான். அவனுடைய பழைய நன்மை அவனது தலையைக் காப்பாற்றினாலும், அது அவனுடைய பதவியைத் தக்கவைத்துக்கொள்ள உதவவில்லை. ஆரோனின் மகன் இத்தாமாரின் வழியில் வந்த, ஏலியின் குடும்ப வாரிசில் கடைசியாக ஆசாரியப் பதவி வகித்தவன் இவனே. முன்னோர்களின் பாவத்தின் விளைவாகவும் இவன் பதவியை இழந்தான் (1 சாமுவேல் 2,30 முதல் 36). மனிதர்கள் மாறினாலும், கர்த்தருடைய வார்த்தையோ ஒரு காலத்திலும் பொய்த்துப் போகாது என்பதற்கு, காலம் கடந்தும் (ஏறத்தாழ நூறு ஆண்டுகள்) ஏலியின் வாரிசான இந்த அபியத்தார்மீது விழுந்த தண்டனை ஒரு சாட்சியாகும்.

அபியத்தாரின் இடத்தில் சாதோக் ஆசாரியனாக நியமிக்கப்பட்டான். அபியத்தாரின் ஒரு சிறிய மனமாற்றம் அவனுடைய பதவியை மடைமாற்றம் செய்வதற்கு காரணமாகிவிட்டது. இந்த சாதோக் ஆரோனின் மூத்த மகன் எலெயாசாரின் வழிவந்தவன் ஆவான். இந்த சாதோக் தாவீதின் காலத்திலும், சாலொமோனின் காலத்திலும் கர்த்தருக்காக உண்மையாக உழைத்ததன் பயனாக இவனுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆயிரமாண்டு அரசாட்சியில் ஆலயத்தில் ஆசாரியப் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றார்கள். இதைக் குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசி இவ்விதமாகக் கூறுகிறான்: “இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியர் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனை செய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எசேக்கியேல் 44,15). பிதாவே, அதோனியாவைப் போல இருமனமுள்ளவனாயிராமல், சாதோக்கைப் போல ஒருமனதுடன் உமக்குச் சேவை செய்ய கிருபை அருள்வீராக, ஆமென்.