March

வஞ்சகம் வேண்டாம்

2024 மார்ச் 22 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,8 முதல் 13 வரை)

  • March 22
❚❚

“யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, … தாடியைப் பிடித்து,.. வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்” (வசனம் 9 முதல் 10).    

மக்கள் பிளவுபட்டபோது, அந்த வாய்ப்பை பிக்கிரியின் குமாரன் சேபா தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொண்டான். ஆனால் மக்களோ கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தும் அதைத் தவறவிட்டுவிட்டார்கள். தாவீது, யோவாபுக்குப் பதிலாக அமாசாவை தளபதியாக நியமித்தான், ஆனால் இவனோ தாமதத்தால் அந்தப் பெரிய வாய்ப்பைத் தவறவிட்டான். யோவாபோ அமாசாவைக் கொன்று, அவனுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை உடைத்து, தான் மீண்டும் இராணுவத் தளபதியாக இருப்பதை உறுதி செய்துகொண்டான். யோவாப் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டாலும் இவன் செய்தது நேர்மையான செயல் அல்ல. முதலாவது அப்னேரைக் குறுக்கு வழியில் கொன்றான், பின்பு அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படியாமல் அப்சலோமைக் கொன்றான், இப்பொழுது அமாசாவை முத்தம் செய்யச் செல்வதுபோல் நடித்து, அவன் எதிர்பார்க்காத வேளையில் அவனைக் கொன்றான்.

தன் பதவிக்காக, எதிர்காலத்துக்காக பிறரைக் கொன்று வஞ்சகம் தீர்க்கும் தீய மனதுடையவனாகவே யோவாப் வலம்வந்தான். தன்னுடைய எல்லையைத் தாண்டிச் செயல்பட்டும் அவன் தாவீதினால் தண்டிக்கப்படாதது ஆச்சரியமே. ஒருவேளை மன்னரின் பலவீனங்கள், தவறுகள் போன்றவற்றை யோவாப் அறிந்து வைத்திருந்ததனாலேயோ தப்பித்துக்கொண்டான் போலும். இன்றைய நாட்களில் பலபேர் இந்த யோவாவைப் போலவே பதவியை அடைகிறார்கள், தாங்கள் செய்கிற தப்பிதங்களுக்கான தண்டனையை பெறாமல் தொடர்ந்து தப்பித்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆயினும் மனிதர் முன்பாக தப்பித்தாலும், இறுதிக் காலத்தில் இதற்குரிய தண்டனையை யோவாப் அடைந்தது போல, கர்த்தர் இதற்குரிய பலனை அனுபவிக்கும்படிச் செய்வார். நம்முடைய இருதயம் எல்லாவற்றைப் பார்க்கிலும் மிகவும் கேடுள்ளது. தேவன் மட்டுமே அதை அறிவார், அவர் மட்டுமே அதைச் சுத்தமாக்கவும் முடியும். தேவன் மட்டுமே நமக்குப் புதிய  இருதயத்தைச் சிருஷ்டிக்க முடியும், நேர்மையான வழியில் அதைக் கொண்டு செல்லவும் முடியும். ஆகவே நம்முடைய இருதயங்களை அவரிடம் ஒப்படைப்போம். “எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை” (1 தெசலோனிக்கேயர் 2,3) என்று பவுல் சொன்னதுபோல நாமும் சொல்லப் பிரயாசப்படுவோம்.

அமாசா கொல்லப்பட்டு வழியில் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். வழியில் வருகிறவர்கள் நின்று, இந்த அமாசா எப்படிச் செத்தான், ஏன் செத்தான் என்று விசாரித்தார்கள். எனவே யோவாப் அவனைத் தூக்கி வயல்வெளியில் போட்டு, துணியால் மூடினான். அவன் அமாசாவின் சரீரத்தை மட்டும் மூடவில்லை, தன் பாவத்தை, தன் கொலையை, தன் வஞ்சகத்தையும் சேர்த்து மூடினான். ஏனெனில் மக்கள் விசாரித்தால் உண்மை வெளியே தெரிந்துவிடும் அல்லவா. “யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதின் பட்சத்தில் இருக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போவானாக” (வசனம் 11) என்ற அழைப்பைக் கேட்டு, மக்கள் ஏதுமறியாதவர்களாக அல்லது உண்மை தெரியாதவர்களாக யோவாபைப் பின்பற்றிச் சென்றார்கள். பிதாவே, எங்களை வழிநடத்துகிறவர்களின் வஞ்சக வலையில் நாங்கள் சிக்கிக்கொள்ளாதிருக்கவும், அவர்களுடைய கபடநாடகத்தை அறிந்துகொள்ளச் செய்து, நேர்மையான வழியில் நடக்க உதவி செய்யும், ஆமென்.