March

மெய்யான அன்பு

2024 மார்ச் 12 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,28 முதல் 33 வரை)

  • March 12
❚❚

“என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்” (வசனம் 33).

அகிமாசோ அல்லது கூஷியோ இவர்களுடைய செய்தி என்னவாயிருந்தது என்பதைக் காட்டிலும் அப்சலோம் எப்படி இருக்கிறான் என்பதைக் குறித்தே தாவீதின் எண்ணம் இருந்தது. நாட்டின் மீது பற்றுள்ளவனாக அப்சலோமை அழிக்கப் படையை அனுப்பினான். அதேவேளையில் மகன்மீது அன்புள்ளவனாக “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா” என விசாரித்தான். எந்தக் காலத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் தந்தை-மகன் என்னும் உறவு பிரிக்க முடியாதது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கிற ஒரு பாசப்பிணைப்பின் எடுத்துக்காட்டாகத் தாவீதைக் காண்கிறோம். பிதாவாகிய தேவனுக்கும் விசுவாசிக்கிறவர்களாகிய அவருடைய பிள்ளைகளுக்கும் இருக்கிற உறவு இதுபோன்றதுதான். நாம் பாவஞ்செய்யும்போது நம்மைச் சிட்சிக்கிறார். இது நாம் அவரிடத்தில் திரும்பி வருவதற்காகச் செய்யக்கூடிய ஓர் அன்பின் செயலே தவிர வேறல்ல. சிட்சையினால் நாம் அனுபவிக்கக்கூடிய எந்தவொரு தண்டனையையும் அவர் மனபூர்வமாகச் செய்கிறதில்லை.

அப்சலோம் இறந்துவிட்டால் உள்நாட்டுக் குழப்பம் தீர்ந்து, அமைதி திரும்பும் என்பது உண்மைதான். ஆயினும் ஒரு பாசமுள்ள தந்தையாக அப்சலோம் எவ்வளவு கெடுதி செய்திருந்தாலும் அன்பு திரளான பாவங்களை மூடி, பகையை மறக்கும் என்னும் உண்மையே இங்கு வென்றது. நம்முடைய பிள்ளைகள் மோசமாக நடந்து, தங்கள் அக்கிரமத்தால் நம் இருதயங்களை உடைக்கலாம். இதைக் கண்டு நாம் சந்தோஷமடைய முடியாது என்பது உண்மைதான். ஆயினும் நம்முடைய இருதயங்களிலிருந்து அவர்களை அழிக்கவோ நீக்கவோ முடியாது. அப்சலோமின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் தாவீது மிகவும் கலங்கி நிலைகுலைந்துபோனான். அப்சலோமின் இந்த முடிவுக்கு தானும் ஒரு காரணமாகிவிட்டேனே என நினைத்து அழுதான். பட்டயம் உன் வீட்டை விட்டு நீங்காது என்று சொல்லப்பட்ட கர்த்தருடைய வார்த்தையை நினைத்து அழுதான் (2 சாமுவேல் 12,10 முதல் 11).

பெற்றோர் பிள்ளைகளை ஆவிக்குரிய காரியங்களில் பயிற்றுவிப்பது மட்டும் போதாது, தாங்களும் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் என்னும் பாடத்தை தாவீதின் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்கிறோம். தாவீது ஐந்து முறை, “என் மகனாகிய அப்சலோமே” என்று அழுதான். ஆம் உண்மையிலேயே அப்சலோம் தந்தையிடமிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டான். தாவீதின் சுபாவம், இச்சை, பெலவீனம், சூழ்ச்சி, உணர்ச்சிகள், பாவம் ஆகியன எல்லாவற்றையும் மகன் பெற்றுக்கொண்டான். வருந்தத்தக்க காரியம் என்னவெனில், தாவீதின் மனந்திரும்புதலை அப்சலோம் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டான். ஆகவேதான், “அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்” என்று கூறி மகனின் இடத்தில் தாவீது மரிக்க விரும்பினான். ஒரு வாலிபனைப் சாவுக்குப் பறிகொடுத்த ஒரு வயதான தந்தையாக தாவீதின் அழுகையையும் வலியையும் இங்கே காணமுடிகிறது. தாவீதின் அழுகையில் உண்மையில் கடவுளின் அழுகையைக் காண்கிறோம். கலகக்கார மனிதர்களின் இடத்தில் அவர் மரிக்க விரும்பினார். தாவீது செய்ய முடியாததை அவர் நிறைவேற்றினார். ஒரு மனிதனாக அவதரித்து, பாவிகளான நம்முடைய இடத்தை அவர் எடுத்துக்கொண்டார். இதுவே மெய்யான அன்பு. “பிதாவே எங்களுக்காக ஜீவனைக் கொடுத்த உம்முடைய அன்பைப் புரிந்துகொண்டு வாழ உதவும், ஆமென்.