March

சரியானதும் தவறானதும்

2024 மார்ச் 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,15)

  • March 9
❚❚

“அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்” (வசனம் 15).    

அப்சலோம் அடித்துக் கொல்லப்பட்டான். யோவாப் மூன்று ஈட்டிகளை அவனுடைய மார்பில் பாய்த்தும் அவன் சாகவில்லை. அதன் பின்னர், அவனுடைய ஆயுததாரிகள் பத்துப் பேர் அவனை அடித்துக் கொன்றார்கள். ஆயினும் அப்சலோமைக் கொன்றதன் முழுப்பங்கும் யோவாபையே சாரும். அப்சலோம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததை ஒரு படைவீரன் முதன் முதலில் யோவாபுக்கு அறிவித்தான். நீ ஏன் அவனைக் கொல்லவில்லை. அப்படிச் செய்திருந்தால் உனக்கு வெகுமதியும் பதவி உயர்வும் (பத்து வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும், வசனம் 11) கொடுத்திருப்பேனே என்று யோவாப் கூறினான். நீர் ஆயிரம் வெள்ளிக் காசுகள் கொடுத்தாலும் ராஜாவின் கட்டளையை மீறி நான் அப்சலோமைக் கொல்லமாட்டேன் என்று கூறினான். தாவீது அப்சலோமை மெதுவாய் நடப்பியுங்கள் என்று எல்லாருடைய காதுகள் கேட்க போர்த் தளபதிகளுக்குக் கட்டளையிட்டிருந்தான்.

ராஜாவின் உத்தரவுக்கு முழுவதுமாகக் கீழ்ப்படிந்த பெயர் அறியாத இந்த வீரனின் உண்மையை பாராட்டுவதா? அல்லது இவனை விட்டு வைத்தால் ராஜாவுக்கும் ராஜ்யத்துக்கும் என்றென்றைக்கும் விரோதமாகவே இருப்பான் என்று அவனைக் கொன்ற யோவாபின் செயலை மெச்சிக்கொள்வதா? இரண்டு காரியங்களும் உண்மையாக இருக்க முடியாது. இருவரின் செயலில் ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க முடியும்? அப்சலோம் தான் செய்த குற்றத்திற்காக தண்டனை அடைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும், யோவாப் தன்னுடைய ராஜாவின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். இவன் சரியானதைச் செய்தான், ஆனால் சரியான முறையில் செய்யவில்லை. சவுல் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டபோது, ராஜ பதவி கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டது என்று அறிந்து தாவீது நேர்மையற்ற முறையில் நடந்துகொள்ளவில்லை. கர்த்தர் சவுலைப் பார்த்துக்கொள்வார் என்று பொறுமையுடன் காத்திருந்தான். “வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர் களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்” (1 பேதுரு 2,18).      

இந்த இடத்தில் யோவாப் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினான். இதுவரை தாவீதுக்காக உழைத்துப் பெற்ற வெற்றிகள், ராஜாவுடன் உள்ள நெருக்கம் தன்னை எதுவும் செய்யமுடியாது, யாரும் கேள்வி கேட்க முடியாது என்னும் தைரியத்தில் அப்சலோமைக் கொன்றான்.  கடவுள் இரக்க குணமுள்ளவராயிருக்கும்போது, நாம் வன்கண்களையுடையோராக இருக்க வேண்டாம். மகன் இறந்தால் அது தந்தையை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்சலோமும் தகுதியானதைப் பெற்றான், பின்னாட்களில் யோவாபும் கர்த்தராலும் தாவீதாலும் கணக்குக் கேட்கப்பட்டு, சாலொமோனால் தகுதியானதைப் பெற்றான் (1 இராஜாக்கள் 2,5 முதல் 6). இந்த நேரத்தில் கொல்கொதாவில் நடந்த மற்றொரு கொலையை நினைவுகூருவோம். தேவனுடைய நீதியின்படி கிறிஸ்து நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார். ஆயினும் யூதரும் அதற்குக் காரணமாக இருந்தனர். கிறிஸ்துவைக் கொலைசெய்ததற்காக இரத்தப் பழியின் தண்டனையை இதுவரை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். “பிதாவே காலத்திற்கு முன்னரே நாங்கள் யாதொன்றைக் குறித்தும் தீர்ப்புச் சொல்லாதிருக்க எங்களுக்கு உதவி செய்யும், ஆமென்.