January

பாவத்தை அறிக்கையிடுதல்

2024 ஜனவரி 29 (வேத பகுதி: 2 சாமுவேல் 12,1 முதல் 14 வரை) 

  • January 29
❚❚

“தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” (வசனம் 13).

நாத்தான் வாயிலாக தாவீதின் பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டது. ஏறத்தாழ ஓராண்டு காலம் அவன் பாவத்தை மூடிமறைத்தான். தேவனுடைய அன்புள்ள சிட்சையின் காரணமாக அது வெளியே தெரிந்தது. இந்தக் காலங்களில் தான் அடைந்த உணர்வுகளை சங்கீதம் 32 மற்றும் 51 இல் எழுதிவைத்திருக்கிறான். அவன் சரீரத்தில் பெலவீனமடைந்து நோயுற்றவனானன். அவன் தன் மகிழ்ச்சியை இழந்தான், தன் சாட்சியை இழந்தான், தன் வல்லமையை இழந்தான். தன் காரியங்களைச் சரிசெய்துகொள்ள தேவன் போதுமான நாட்களைக் கிருபையாக வழங்கினார். இவனோ அதை மூடிமறைப்பதில் தீவிரமாயிருந்தான். அவன் தனிப்பட்ட முறையில் தேவனோடு ஒப்புரவாகி பாவங்களை அறிக்கையிடாததால் கர்த்தர் நாத்தானை அனுப்பினார். நல்ல மேய்ப்பன் காணாமற்போன ஆடுகளைக் கண்டுபிடிக்குமளவும் தேடுகிறார். வேதனைகளின் ஊடாகக் கடந்துசென்ற அவனுடைய ஆத்துமாவைத் தேற்றினார், ஆனால் அது அறிக்கையிடுதல் ஒப்புரவாகுதல் மூலமாகவே சாத்தியமானது.

நாத்தான் கடந்த முறையைப்போல ஆசீர்வாதத்தின் வார்த்தைகளோடு அல்ல (அதிகாரம் 7), இந்த கண்டித்துணர்த்தும் வார்த்தைகளோடு வந்தான். கர்த்தர் வைத்த பொறியில் தாவீது மாட்டினான். பிறருடைய குற்றத்தைப் பொறுக்கமாட்டாமல், “இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன்” என்று தாவீது கொதித்தெழுந்தபோது, “நீயே அந்த மனிதன்” என நாத்தான் தைரியமாக உரைத்தான். தாவீது தன்னைத்தானே நியாயந்தீர்த்துக் கொண்டான். அவனுடைய வாயின் வார்த்தையினாலே கர்த்தர் அவனைப் பிடித்துக்கொண்டார். நாத்தானிடத்தில் எவ்வித முகதாட்சண்யமும் இல்லை, பாகுபாடும் இல்லை; உள்ளதை உள்ளபடி கூறினான். நாத்தானைப் போல ஓர் உண்மையுள்ள ஊழியக்காரனை இன்றைய நாட்களில் பார்ப்பது அபூர்வமாயிருக்கிறது. “அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்” என்று பாவத்தை உடனடியாக அறிக்கையிட்டான்.

“நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” என்ற வார்த்தையும் உடனடியாகவே வெளிப்பட்டது. கர்த்தர் நாம் அறிக்கையிட்ட உடனேயே பாவத்தை மன்னித்தார். ஆனால் விளைவை தாவீது நீண்ட நாட்களுக்கு அறுவடை செய்தான். நமக்கும் இதுவே. அவர் தம் கிருபையினால் பரலோகத்திலிருந்து நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார்; அவருடைய சத்தியத்தின்படி இந்த உலகத்தில் பாவத்தின் விளவுகளைச் சந்திக்க அனுமதிக்கிறார். அதுவும் கனிவான இருதயத்தோடும், ஆற்றித்தேற்றும் வல்லமையோடும் அவனை அரவணைத்துக்கொள்கிறார். தாவீது தன் பாவங்களுக்கு எவ்விதச் முகச் சாயமும் பூசவில்லை. எவ்விதப் பாவமும் எல்லாவிதப் பாவமும் கர்த்தருக்கு விரோதமாகவே செய்யப்படுகின்றன என்பதை உணர்ந்தான். ஆகவே உமக்கு விரோதமாக, உமக்கு விரோதமாக மட்டுமே பாவஞ்செய்தேன் என்றான். கர்த்தரும் உடனடியாக, நான் உன்னை மன்னித்தேன் என்றார். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1,9). “அறிக்கையிடாத எந்தப் பாவத்தையும் தேவன் மன்னிக்கிறதில்லை, அறிக்கையிட்ட எந்தப் பாவத்தையும் அவர் மீண்டும் நினைப்பதில்லை”.