January

ஆவிக்குரிய போரை எதிர்கொள்ளுதல்

2024 ஜனவரி 27 (வேத பகுதி: 2 சாமுவேல் 10,6 முதல் 19 வரை) 

  • January 27
❚❚
 

“அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்” (வசனம் 7).

தாவீது அம்மோனியர்களுடன் சமாதானமாக இருக்க எண்ணினான். அவர்களோ போருக்கு வந்தார்கள். தாவீதால் அனுப்பப்பட்ட தூதுவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டதன் காரணமாக அவர்கள் துணிகரங்கொண்டார்கள். ஆனால் இந்த முறை தாவீது சமாதானத்தின் தூதுவர்களை அல்ல, யோவாப் தலைமையில் நன்கு பயிற்சி பெற்ற பராக்கிரமசாலிகளாகிய சிறப்புப் படையை அனுப்பினான். இந்த பராக்கிமசாலிகள் தாவீதுடன் அதுல்லாம் குகையில் இருந்தவர்கள். கடன்பட்டவர்களும், வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களும், சரிவரக் கவனிக்கப்படாமல் திருப்தியற்றவர்களுமாயிருந்த மனிதர்கள் இவர்கள் (1 சாமுவேல் 22,1 முதல் 2). இவர்களே இப்பொழுது தாவீதின் வலிமைமிக்க போர்வீரர்கள். இவர்கள் உபத்திரவத்தின் குகையில் புடமிடப்பட்டு வெள்ளியைப் போல ஜொலிப்பவர்கள். பாடுகளின் வழியாகக் கடந்துவந்தாலும் விசுவாசத்தைக் காத்துக்கொண்ட தீரமிக்கவர்கள். இவர்கள் எல்லா நேரத்திலும் தங்கள் எஜமானனை உத்தமமாய்ப் பின்பற்றியவர்கள். சபையில் மாம்சத்துக்குரியவர்கள் சிலர் இருந்தாலும், பிசாசினால் வஞ்சக வலையில் சிக்குண்டு அவனால் அவமானத்தை சிலர் அடைந்திருந்தாலும், ஆவிக்குரியவர்களும், விசுவாசத்தில் சிறந்தவர்களுமாகிய மக்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இத்தகைய மக்களின் வாயிலாக கிறிஸ்து மகிமைப்படுகிறார். தாவீதின் பலம் என்பது இந்த பராக்கிரமசாலிகளைச் சார்ந்தது; இந்த பராக்கிரமசாலிகளின் பலம் என்பது தாவீதைச் சார்ந்தது. தாவீது இல்லாமல் இவர்கள் இல்லை, இவர்கள் இல்லாமல் தாவீது இல்லை. கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமான உறவு இவ்விதமாக இருக்கிறது என்பது நாம் நினைவில் நிறுத்த வேண்டிய சத்தியம். எல்லாவற்றையும் தம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினவருக்கு நாம் நிறைவாய் இருக்கிறோம் என்று பவுல் விவரிக்கிறார். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” (எபேசியர் 1,23). ஆம், கிறிஸ்து தம்முடைய திருச்சபை இல்லாமல் பூரணமடைகிறதில்லை. ஆகவே கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் ஒவ்வொரு நாளும் பலப்படுவோம்.

கிறிஸ்துவின் நம்பிக்கைக்குரியவராகவும், எத்தகைய பாடுகளும் எதிர்ப்புகளும் வந்தாலும் விசுவாசத்தை விடாதவர்களுமாக வாழுவோம். “கிறிஸ்துவுக்காக முற்றிலும் அர்ப்பணித்த மக்களைக் கொண்டு அவர் என்னவெல்லாம் செய்வார் என்பதை இந்த உலகம் இன்னும் அறியவில்லை” என்ற வார்த்தை டி எல் மூடியின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கியதுபோல நம்மையும் மாற்றமடையச் செய்யட்டும். “தைரியமாயிருங்கள்; நம் மக்களுக்காகவும், நம் தேவனுடைய நகரங்களுக்காகவும் பலமாக இருப்போம்” (வசனம் 12) என்று கூறி யோவாப் வீரர்களை உற்சாகப்படுத்தினான். இந்தப் போரில் தோற்றால் அவர்கள் தங்கள் மக்களையும் நகரங்களையும் இழப்பார்கள். சத்துருவின் சேனை பெரியதுதான். நம்மைக் காட்டிலும் வலிமைமிக்க படைதான், ஆயினும் கர்த்தர் நம்மோடிருக்கிறார். நாம் கடினமாக உழைப்போம். வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனையோடு நாம் எதிர்த்து நிற்கிறோம். ஆனால் முடிவு நம்முடைய கர்த்தரின் கையில் உள்ளது, அவர் தமது பார்வைக்கு நலமானபடிச் செய்வார். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். தாவீது பெற்ற வெற்றியைப் போல நாமும் வெற்றி பெறுவவோம்.