February

கிருபையும் சத்தியமும்

2024 பிப்ரவரி 7 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,2 முதல் 22 வரை)

  • February 7
❚❚

“நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மைவிட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்” (வசனம் 14).

யோவாப் தாவீதுக்கு விசுவாசமாக இருந்த ஓர் அமைச்சர். அப்சலோமுக்கும் தாவீதுக்கும் உறவு சரியானதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டவன். அப்சலோம் நீண்ட நாட்கள் நாட்டை விட்டு வெளியே இருப்பது நல்லதன்று கருதி அவனை இங்கே அழைத்து வர முடிவு செய்தான். இந்தப் பணிக்காக, யோவாப் தெக்கோவா ஊரைச் சேர்ந்த ஒரு புத்திசாலிப் பெண்ணை அழைத்து வந்து ஒரு உவமைக் கதையின் மூலம் தன் எண்ணத்தை ராஜாவின் முன் வைத்தான். இவனுடைய எண்ணங்களும் நோக்கமும் சரியானதுதான். நாட்டின் தலைமை நீதிபதி என்ற முறையில் நீதி செய்யாமல் எவ்வாறு தன் மகனை தன்னுடன் சேர்த்துக்கொள்வது? செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்காமல் எவ்வாறு மன்னிப்பை வழங்குவது? தண்டனை வழங்காமல் ஒரு குற்றவாளியை மன்னித்து ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையே யோவாப் அந்த பெண்மணியின் மூலம் கூறச் சொன்னான். நம்முடைய இயற்கைச் சுபாவம் இவ்வாறு இருக்கும்போது, நாம் கர்த்தருடைய ஆலோசனையை நாடுவதே நலம். இதுவே “சுயமுடிவெடுத்தல்” என்னும் அபாயத்தில் இருந்து நம்மைத் தடுக்கும்.

தாவீது பாவம் செய்தபோது, கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார். நாத்தானின் பேச்சில் கடவுளின் கோபமும் இருந்தது, அதே வேளையில் அவருடைய இரக்கமும் வெளிப்பட்டது. மக்களால் விபசாரம் செய்தாள் என்று பிடித்துக்கொண்டுவரப்பட்ட பெண்ணிடம், “நானும் உன்னைத் தண்டிக்கிறதில்லை, ஆனால் இனி பாவம் செய்யாதே” என்ற பதிலையே ஆண்டவர் கூறினார். நானும் உன்னைத் தண்டிக்கிறதில்லை என்று கிருபையை வெளிப்படுத்திய அதேவேளையில் இனிப் பாவம் செய்யாதே என்ற சத்தியத்தையும் வெளிப்படுத்தினார்.  அவர் அவளை மக்களுடைய கோபத்தில் இருந்தும் காப்பாற்றினார், தேவ கோபத்தில் இருந்தும் காப்பாற்றினார். ஆயினும் இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ளாதே என்ற அறிவுறுத்தலோடு நம்பிக்கையையும் வழங்கி அவளை மீட்டுக்கொண்டார். இதுவே கடவுளின் மறுசீரமைப்பின் முறையாக இருக்கிறது. ஆனால் இந்த தெக்கோவா ஊர் பெண்மணியின் பேச்சில், எவ்வித நெறிகளுக்கும் அப்பாற்பட்டு ராஜா அப்சலோமை மன்னிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

கிருபை வெளிப்படுகிற இடத்தில் சத்தியமும் இருக்க வேண்டும். “கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்” (சங்கீதம் 85,10) என்று வாசிக்கிறோம். இது கல்வாரியில் சாத்தியமானது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவ கோபத்தின் தண்டனையை சிலுவையில் சந்தித்தார். பின்பு அங்கிருந்து நமக்கு கிருபையை வழங்கினார். கீழ்ப்படிதலுள்ள மகனாக, கடவுளின் அன்பின் குமாரனாக நமக்கான தண்டனையை அவர் சிலுவையில் ஏற்றுக்கொண்டார். கடவுளின் கோபம் சிலுவையில் திருப்தியடைந்தது. நாம் செய்த குற்றத்தை உணர்ந்து உண்மையான மனந்திரும்புதலுடன் அவரிடத்தில் வருவோமானால், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறதில்லை” என்ற வாக்கின்படி நம்மை அன்புடன் சேர்த்துக்கொள்கிறார். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, தவறுகள் நடக்கும் இடங்கள்தோறும் கிருபையும் சத்தியமும் நடைமுறைப்படுத்த ஆண்டவர் உதவி செய்வாராக.