April

இருமனதின் தீமைகள்

2024 ஏப்ரல் 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,38 முதல் 53 வரை)

  • April 25
❚❚

“இதோ, அதோனியா … பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, இருக்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.” (வசனம் 51).

தாவீது ராஜாவின் ஒப்புதலுடன், அவனுடைய பிரதான அதிகாரிகள் மற்றும் மெய்க்காவலர்களின் தலைமையில், மக்களின் ஆதரவுடன் விமர்சையான வகையில் அடுத்த மன்னராக சாலொமோன் முடிசூட்டப்பட்டான். “மன்னர் வாழ்க”, “கர்த்தர் மன்னரை ஆசீர்வதிப்பாராக” என்னும் கோசங்கள் விண்ணையும் மண்ணையும் பிளந்தன. இந்தச் சத்தம் போலி ஆதரவாளர்களுடன் தனக்குத் தானே, மன்னராக முடிசூட்டிக் கொண்ட அதோனியாவின் கனவைத் தகர்த்தது. கர்த்தரால் ஏற்படுத்தப்படாத சுயமேன்மை மன்னர்களால், சோதனை என்னும் வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது. அவனுடைய பொய்யான நண்பர்கள் அவனை நிராயுதபாணியாய் கைவிட்டு ஓடி விட்டார்கள். திருச்சபையின் தலைமைத்துவப் பதவியை உலகத்தாரைப் போல அடைகிறவர்கள் ஒரு நாளில் அதை இந்த உலகத்தாரைப் போலவே இழந்து கலங்கி நிற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

சாலொமோன் மன்னராக்கப்பட்ட செய்தியை, அதோனியாவுக்கு ஆதரவளித்த ஆசாரியனாகிய அபியத்தாரின் மகன் யோனத்தான் தெரிவித்தான். முடிசூட்டு விழாவின் நிகழ்வை யோனத்தான் விவரித்த வகையைக் காணும்போது, அவனும் அதில் பங்குபெற்றவனாகத் தெரிகிறது. ஆயினும் உடனடியாக இச்செய்தியை அதோனியாவிடம் தெரிவிக்க வந்த செயல், மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காண்பித்த செயலைப் போலவே இருந்தது. தந்தையின் இருமனமுள்ள தன்மை மகனையும் தொற்றிக்கொண்டது வியப்பளிக்கிறது. இரண்டு எஜமான்களுக்கு ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது என்று ஆண்டவர் கூறினார். தந்தையும் மகனும் சாலொமோனைப் பகைத்து அதோனியாவைத் தெரிந்துகொண்டது அவர்களது தோல்வி வாழ்க்கைக்கு வித்திட்டது. வாழ்வாயினும், சாவாயினும் நாம் உறுதியுடன் கர்த்தரையும் அவரால் அபிஷேகம் செய்யப்பட்ட தலைவர்களின் பக்கமும் நிற்போம்.

அதோனியா சாலொமோனுக்குப் பயந்து, பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். பலிபீடம் பாவத்திற்கான பரிகாரம் செலுத்தக்கூடிய இடம். நம்முடைய மனபூர்வமான பாவஅறிக்கையை தம்முடைய ஒரேபலியினால் நமக்கு விமோசனத்தைக் கொண்டுவந்த ஆண்டவரை பற்றிக்கொள்வது நமக்கும் நல்லது. நம்முடைய ஆண்டவர் தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு இரக்கத்தையும் கிருபையையும் அளிக்கிறார். அதேவேளையில் அதோனியா பலி செலுத்துவதற்காகச் செல்லவில்லை. மாறாக, தன்னுடைய தவறுகளிலிருந்து விடுபடுவதற்காக, அல்லது சாலொமோனின் கோபத்திற்குத் தப்பித்துக்கொள்வதற்காக பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக்கொண்டான். இவனைப் போலவே இன்றைய நாட்களிலும் பலர், தங்களுடைய தவறுகளையும், குற்றங்களையும் மறைத்து வாழ்வதற்காக மதங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்தவத் தலைவர்களும் பணம், பதவி, புகழ் ஆகியவற்றைச் சம்பாதிப்பதற்காக மதமென்னும் போர்வைக்குள் ஒளிந்துகொள்கிறார்கள். இது நீண்ட நாட்களுக்கு அவர்களைக் காப்பாற்றாது, ஒரு நாளில் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும். கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன்பாக, போலிப் பக்தியும், கபட நாடகமும் வைக்கோலைப் போலவும் புற்களைப் போலவும் பற்றியெறியும். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்து ஆண்டவரின் பாதங்களைப் பற்றிக்கொண்டு வாழுவோம். ஏற்ற பிரதிபலன்களை அருளிச் செய்வார். பிதாவே, எப்பொழுதும் உம்மையே முழுமனதுடன் பின்வாங்காமல் விசுவாசிப்பதற்கு உதவி செய்யும், ஆமென்.