April

உடன்படிக்கையின் வாழ்க்கை

2024 ஏப்ரல் 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,5 முதல் 7 வரை)

  • April 6
❚❚

“சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்” (வசனம் 5).

“என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ?” (வசனம் 5) என்பது தன் வீட்டில் நடைபெற்ற சோகமானதும் வருத்தமானதுமான காரியங்களின் பிரதிபலிப்பாகும். அதாவது தேவனுடைய முழுமையான ஆசீர்வாதம் தன் குடும்பத்தின்மேல் இல்லையோ என்று ஐயம் கொண்டான். தன்னுடைய தீமையான செயலின் காரணமாக இரண்டு மகன்கள் கொலை செய்யப்பட்டார்கள். தன்னைப் போல அவர்களை ஆவிக்குரியவர்களாக வளர்க்க முடியவில்லை என்பது அவனுக்கு வருத்தம். இவனுடைய செயலின் விளைவாக உள்நாட்டுப் போர் மூண்டு, பிரிவினை உண்டானது. அவன் விரும்பியபடி காரியங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஒரு விசுவாசியாக நாமும் பல தருணங்களில் தாவீதைப் போல சிந்தித்திருப்போம். நம்முடைய வீடுகளில் பிரச்சினைகளும் துன்பங்களும் வரும்போது கர்த்தரைப் பின்பற்றியதற்கான முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கவில்லையே, இன்னும் நான் குறைச்சல் உள்ளவனாகவே இருக்கிறேனே என்று அங்கலாய்ப்போம்.

இது எல்லாருக்கும் வருகிற உணர்வுதான். ஆனால் தாவீது இத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. இதற்கு அப்பாலும் சென்று, “சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்” (வசனம் 5) என்று கர்த்தர் அவனுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தான். இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியவர் கர்த்தரே ஆவார். ஆகவே அந்த உடன்படிக்கையை ஏற்படுத்திய கர்த்தருடைய உண்மைத் தன்மையை நினைத்துப் பார்த்தான். இந்த உடன்படிக்கை தாவீதின் தவறுகளையோ அல்லது அவனது தோல்விகளையோ சார்ந்தது அல்ல. ஆகவே கர்த்தர் நிச்சயமாக தன் சந்ததியை ஆசீர்வதிப்பார் என்னும் நம்பிக்கை கொண்டான். இன்றைக்கு தாவீதின் குமாரனாக வந்த கிறிஸ்துவின் மூலம் முழு உலகமும் ஆசீர்வதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கிறிஸ்து ராஜாவாக வரும்போது தாவீதுக்கு வாக்குப்பண்ணின அத்தனை ஆசீர்வாதங்களும் முழுமையாக நிறைவேறும்.

“என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை, அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்” (சங்கீதம் 89,28) என்று கர்த்தர் சொன்னபடியே காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நம்முடைய பாவங்களாலும் அதன் விளைவுகளாலும் நம் வாழ்க்கையில் வெளிச்சம் மங்கி இருள் உண்டாவதுபோல தோன்றலாம். ஆனால் அவர் மங்கியெரிகிற தீயை ஒரு நாளும் அணைந்துபோகச் செய்யமாட்டார் என்பதைப் புரிந்துகொள்வோம். நம்முடைய வாழ்க்கையின் பிரச்சினைகளால் நாணலைப் போல வளைந்து போய் நிமிர முடியாமல் தவிக்கலாம். ஆனால் அவர் ஒருபோதும் அதைப் முறித்துப் போடமாட்டார். தாவீது இறுதியில் வெற்றி பெற்று தேவனுடைய நாமத்துக்குப் புகழ் சேர்த்ததுபோல நம்மையும் மாற்றுவார். நம்முடைய வாழ்க்கையைச் சீர்தூக்கிப் பார்த்து, நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்கிக்கொண்டால் அவர் நம்மையும் பிரகாசிக்கச் செய்வார். “ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு” என்று புதிய ஏற்பாடு தொடங்குவதுபோல நமக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவார். பிதாவே, நாங்கள் எங்கள் பிரச்சினைளினிமித்தம் எங்கள் முடிவைச் சிந்திக்காமல், உம்முடைய வாக்குறுதிகளை நம்புவதற்கு பெலன் தாரும், ஆமென்.