1 கொரிந்தியர் – அதிகாரம் 5
1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
2 இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
3 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
4 நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
6 நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
7 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
9 விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
10 ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
12 புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
13 புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.
1 கொரிந்தியர் – அதிகாரம் 6
1 உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?
3 தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?
4 இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.
5 உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?
6 சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான்.
7 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?
8 நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே.
9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
12 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
13 வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.
14 தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.
15 உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
16 வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
17 அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
18 வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
20 கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் – அதிகாரம் 7
1 நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.
2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவனவன் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் சφய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.
4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.
6 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.
7 எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.
8 வரமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.
10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
11 பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.
12 மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.
13 அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.
14 என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.
15 ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
16 மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?
17 தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.
18 ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம்பெறாதிருப்பானாக.
19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
20 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.
21 அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ சுயாதீனனாகக்கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள்.
22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.
23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
24 சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.
25 அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
26 அதென்னவெனில் இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.
27 நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் மனைவியைத் தேடாதே.
28 நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல, கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.
29 மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,
30 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும்,
31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலத்தின் வேஷம் கடந்துபோகிறதே.
32 நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைளுக்காகக் கவலைப்படுகிறாள்.
35 இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
36 ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.
37 ஆயினும் அதற்கு அவசியத்தைக்காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.
38 இப்படியிருக்க, அவளை விவாகம்பணணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.
39 மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.
40 ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.