நாள் 293 – மத்தேயு 16-19

மத்தேயு – அதிகாரம் 16

பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.
உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
10 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
11 பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
12 அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச்சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
13 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18 மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
19 பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
22 அப்பொδுது, பேதுரு அவரைத் தனிϠχ அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்
25 தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்.
26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு – அதிகாரம் 17

ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,
அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
சீஷர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள் என்றார்.
அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேரொருவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.
11 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
12 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
13 அவர் யோவான் ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
14 அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
15 ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.
16 அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
17 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
18 இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.
19 அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்து வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.
20 அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21 இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
22 அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
23 அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
24 அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
25 அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
26 அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
27 ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து, அதன் வாயைத் திறந்துபார். ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.

மத்தேயு – அதிகாரம் 18

அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து: அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆகையால் இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவது அவனுக்கு நலமாயிருக்கும்.
இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
10 இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11 மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.
12 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
13 அவன் அதைக்கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப் பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
16 அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
17 அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.
18 பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
20 ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
22 அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
23 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
24 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்.
25 கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விட்டு, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
26 அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
27 அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
28 அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
29 அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
30 அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.
31 நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
32 அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35 நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

மத்தேயு – அதிகாரம் 19

இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்த பின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார்.
திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரதினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
அதற்கு அவர்கள் அப்படியானால், தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை.
ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.
11 அதற்கு அவர்: வரம் பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
13 அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் கைகளை வைத்து ஜெபம்பண்ணுபடிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14 இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
15 அவர்கள் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போனார்.
16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;
17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
18 அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக;
19 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.
20 அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
23 அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டபொழுது மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
27 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.
28 அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
30 ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.

Recommended For You

நாள் 16 – யாத்திராகமம் 1-4

தகனபலிகளுக்குரிய பலிபீடம் 27 கர்த்தர் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். அப்பலிபீடம் சதுர வடிவமாக இருக்கவேண்டும். 5 முழ நீளமும், 5 முழ அகலமும், 3 முழ உயரமும் இருக்கட்டும். 2 பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளைப்...

Read moreDetails
நாள் 16 – யாத்திராகமம் 1-4

23 “பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள். 2 “பிறர் செய்கிறார்கள் என்பதால் மட்டுமே நீங்கள் சிலவற்றைச் செய்யாதீர்கள். ஒரு கூட்டம் ஜனங்கள் தவறு செய்தால்...

Read moreDetails
நாள் 16 – யாத்திராகமம் 1-4

22 “ஒரு மாட்டையோ, ஆட்டையோ திருடுகிற மனிதனை நீ எவ்வாறு தண்டிக்க வேண்டும்? அம்மனிதன் அந்த மிருகத்தைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ, அதனைத் திரும்பக் கொடுக்க முடியாது. எனவே, அவன் திருடிய மாட்டுக்குப் பதிலாக ஐந்து மாடுகளைக் கொடுக்க வேண்டும்....

Read moreDetails
நாள் 365 – வெளிப்படுத்தின விசேஷம் 19-22

வெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 19 1 இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். 2 தன் வேசித்தனத்தினால்...

Read moreDetails
நாள் 365 – வெளிப்படுத்தின விசேஷம் 19-22

வெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 16 1 அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன். 2 முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்;...

Read moreDetails
Next Post
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?