மார்ச் 11
எதிராளி… நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும்… நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடன் நல்மனம் பொருந்து. (மத்.5:25)
உரிமைகோரும்படி நீதிமன்ற வழக்குகளில் கிறிஸ்தவர்கள் வயப்பட்டு விடலாகாது என்னும் அடிப்படைப் பாடம் ஒன்றினை இப்பகுதியில் கற்றுக்கொள்கிறோம். நமக்கு எதிராக விளைவிக்கப்படும் குற்றங்களுக்கும், சேதங்களுக்கும் பரிகாரம் தேடி நீதிமன்றத்திற்கு ஓடுவது இயற்கையே. இயற்கையின் வித்திற்கு அவ்வப்போது தேவனுடைய சித்தம் எதிர்மறையாகச் செயல்புரிகிறது.
விபத்துகளில் உண்டான இழப்பிற்கு நஷ்டஈடு கோரி தொடுக்கப்பட்ட வழக்குகள், சட்டவிரோதமான செயல்களுக்கு எதிரான வழக்குகள், விவாகரத்து வழக்குகள், சொத்துரிமை வழக்குகள் ஆகியவற்றால் நமது நீதிமன்றங்கள் நிறைந்து கிடக்கின்றன. குறுகிய காலத்திற்குள் பெருஞ்செல்வந்தராக வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்கள் வழக்குரைஞர்களை நாடி ஓடுகின்றனர். ஆனால், அன்பின் வல்லமையால் கிறிஸ்தவர்கள் வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும், சட்டத்தை நாடிச் செல்லுதல் நன்றன்று. “நீதிமன்றத்தை நாடிச்செல்பவன் அதன் இழுபறியில் சிக்கிக்கொள்கிறான். அதில் உனது கடைசிப்பணத்தையும் செலவிட வேண்டியதாகும்” என்று ஒருவர் கூறியுள்ளார்.
வழக்கறிஞர்கள் ஒருவரே நிச்சயமாக வெற்றியடைகிறார். அவருடைய கட்டணத்தை அவர் அடைவது உறுதி. இதை எடுத்துக்காட்டும் கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். “வழக்கு தொடுத்தவர் பசுவின் தலையை இழுக்கிறார், எதிராளி வாலைப்பிடித்து இழுக்கிறார். வழக்கறிஞர் பாலைக் கறந்துகொண்டிருக்கிறார்”.
ஒரு கிறிஸ்தவன் மற்றெரு கிறிஸ்தவன் மீது வழக்கு தொடுக்கக்ககூடாது என்று 1.கொரிந்தியர் 6வது அதிகாரம் தெளிவுறக் கூறுகிறது. அவர்களுக்குள்ளாக இருக்கும் வழக்குகளைத் தீர்க்க, சபையில் ஞானமுள்ள ஒருவனை நியமித்துக் கொள்ளவேண்டும். அதற்கு மேலாக, அவர்கள் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளலாம், நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளலாம். இவ்விதியை மேற்கொண்டால், விசுவாசத் தம்பதிகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும். விவாகரத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட வாய்ப்பேதும் ஏற்படாது.
ஒரு விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் இடையில் ஏற்படும் வழக்குகளை எப்படித் தீர்ப்பது? தன்னுடைய உரிமைகளுக்காக கிறிஸ்தவன் எதிர்த்து நிற்கவேண்டாமா? ஒருவருடைய வாழ்க்கையில் கிறிஸ்து மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறார் என்பதே அதற்கு விடையாகும். தனக்கு எதிராகக் குற்றம் இழைத்தவர்மீது வழக்குத் தொடர தெய்வீக வாழ்க்கை தேவையில்லை. தன்னுடைய வழக்கைத் தேவனிடத்தில் ஒப்புவித்து விட்டு, இரட்சிக்கும் மற்றும் மறுரூபப்படுத்தும் கிறிஸ்துவின் வல்லமையைக்குறித்துச் சாட்சிபகர அத்தகைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவே, தெய்வீக வாழ்க்கை தேவை. கூடுமானவரை எல்லா மனிதரோடும் சமாதானமாய் வாழவேண்டும்.
“தன் நிலத்திற்கும், அயலானுடைய நிலத்திற்கும் இடையில் ஒரு மனிதன் வேலி கட்டத்தொடங்கினான். அங்கு வந்த அடுத்த வீட்டுக்காரன், “இந்த இடத்தை நீர் வாங்கும்போதே, நீதிமன்ற வழக்கு ஒன்றைச் சேர்த்து வாங்கியிருக்கிறீர். நீர் கட்டும் வேலி 5 அடி என் நிலத்திற்குள் இருக்கிறது” என்று கூறினான். அதற்கு, அருமையான அயலகத்தாரைப் பெற்றுள்ளேன் என்பதை அறிவேன். நான் ஒரு ஆலோசனை கூறுகிறேன். எங்கே வேலி அமைக்கவேண்டுமோ அங்கே நீங்கள் வேலிகட்டி அதற்குரிய தொகையை என்னிடத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று முதல் மனிதன் பதில் கூறினான். அங்கே வேலி கட்டப்படவே இல்லை. அதற்குத் தேவையும் இல்லாது போயிற்று.
