ஜூன் 17
‘இரட்சிப்பு கர்த்தருடையது‘
யோனா 2:9
பிதாவின் அன்பு, குமாரனுடைய செய்கை, பரிசுத்த ஆவியின் தொழில், இவ்வளவும் ஒன்றாய்க்கூடி ஆத்துமாவை ரட்சிக்கிறது. இந்த ஏற்பாட்டை ஒழுங்குபடுத்தினவர் பிதா, மீட்கும் பொருளைத் தந்தவர் குமாரன், தேவ ஆசீர்வாதத்தைச் சொந்தமாக்குகிறவர் பரிசுத்த ஆவி. தேவன்தான் இதற்குக் காரணர். கிருபையினால், விசுவாசத்தின் மூலமாய் இது முடிகிறது. மோசங்கள் துன்பங்கள், குறைவுகள், இவைகளில் நின்று நம்மை விடுவிக்கிறவர் தேவன்தான். யோனா கெஞ்சினபோது அவனை விடுவித்தார்; அவன் ஏழை. பெருமை கொண்ட, மூர்க்கனான, எரிச்சலடைந்த, முறுமுறுத்த கெட்ட பாவியாயிருந்தும், அவனை விடுவித்தார்; நம்மையும் விடுவிப்பார். என்னை நோக்கி ரட்சிக்கப்படுங்கள், நான் தேவன்; என்னைப் பாருங்கள் என்று உங்களுக்குக் கட்டளையிடுகிறார். என்னைப் பாருங்கள், நீங்கள் சொல்லுகிறதை நான் கேட்பேன். என்னைப் பாருங்கள். உங்களை விடுவிப்பார் என்கிறார். ஆறு துன்பங்களில் உங்களை விடுவிப்பார்; ஏழிலும் உங்களைக் கைவிடார். நம்முடைய ஆத்துமாவை மரணத்திற்கும், நம்முடைய கண்ணைக் கண்ணீருக்கும் நம்முடைய கால்களை விழுதலுக்கும் விளக்கிக் காப்பார். வறுமையுள்ளவன் கெஞ்சும்போது அவனை விடுவிப்பார். ஏழைக்கும், உதவியற்றவனுக்கும் அவர்தான் ஒத்தாசை. மற்றவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயோ? மனந்தளர்ந்து பயந்து அவநம்பிக்கைக்கு இடங்கொடுக்கிறாயோ? இப்படி செய்வது உன் தேவனுக்கு ஆயாசமாகும். அவர் சொல்லுகிறதைக் கேள். ரட்சிக்கக்கூடாதபடிக்கு என் கை குறுகிப்போயிற்றோ? விடுவிக்க என்னால் ஆகாதோ? கர்த்தரால் கூடாதது ஒன்றுண்டோ? நான் செய்கிறதைத் தடுப்பவன் எவன் என்று கேட்கிறார். நான் உன்மேல் கோபமாயிரேனென்று ஆணையிடுகிறார்.
ஏகோவாவின் கிரீடம்
ரட்சிப்பென்பதருமை,
அவர்க்கிருக்கும் பேர்களில்
இம்மானுவேல் மகிமை,
ரத்தத்தால் ரட்சிக்கிறார்,
வல்ல தேவனென்கிறார்.