ஜூன் 11
‘கர்த்தர் என் பங்கு‘
புலம்பல் 3:24
கிறிஸ்தவனுடைய பங்கோடு உலகத்தானுடைய ஆஸ்தியை ஒத்துப்பார்த்தால் அது எவ்வளவு அற்பமாய்த் தோன்றும். அது கொஞ்சநாள்தான் இருக்கும், திருப்தியாக்கவுமாட்டாது; ஆசீர்வதிக்கவுமாட்டாது. சிநேகிதரே, ஏகோவா தம்மைத் தாமே நமக்குக் கொடுத்திருக்கிறார்; நான் உங்கள் சுதந்தரம் என்கிறார்; நாம் எப்பொழுதும் அவரோடிருக்கிறோம்; அவருடையதெல்லாம் நம்முடையது. அவருடைய வல்லமை நம்முடையது; அது நம்மை ஆதரிக்கும். அவருடைய ஞானம் நம்முடையது; அது நம்மை நடத்தும். அவருடைய அன்பு நம்மை ஆற்றித்தேற்றும். அவருடைய இரக்கம் நம்மை விடுவிக்கும். அவருடைய தயவு நமக்கு வேண்டியதைத் தரும், அவருடைய நீதி நம்மைப் பாதுகாக்கும்; அவருடைய உடன்படிக்கை நம்மைப் பத்திரப்படுத்தும்; அவருடைய மோட்சம் நம்மை ஏற்றுக்கொள்ளும். அவர் தகுதியான, போதுமான, மாறாத பங்கு; அவரைப்பற்றி நாம் ஜீவனம்பண்ணவேண்டும். அவர் கொடுக்க வாங்கி, அவரில் சந்தோஷப்பட்டு; நமக்குத் தேவையான யாவற்றிற்கும் அவரையே நோக்கிப் பார்க்கவேண்டும்; அவருக்காக, மற்ற யாவற்றையும் தள்ளவேண்டும்; அவருடைய மகிமைக்கென்று நாம் சகலத்தையும் செய்யவேண்டும்; அவரோடு நாம் எப்போதும் நடக்கவேண்டும். மனிதர் நம்முடைய பங்கைப் பறித்துக்கொள்ளமாட்டார்கள். அக்கினி அதைப் பட்சிக்கமாட்டாது; துரு அதைக் கெடுக்கமாட்டாது. இங்கே நடக்கிற எந்தக் காரியத்தினாலும் நாம் வருத்தமடையக்கூடாது. வாய்க்கால்கள் வற்றிப் போனாலும், ஊற்று இன்னும் இருக்கிறது; சிருஷ்டிகள் நம்மை மோசம்போக்கினாலும், நமக்கு உதவாமல் போனாலும், நம்முடைய தேவன் நம்முடைய சுதந்தரத்தின் பங்கும், நம்முடைய பத்திரமுமானவர். நம்முடைய சுதந்தரத்தை இவர் காப்பாற்றுகிறார்; அவர் நம்முடைய பெலன், என்றுமுள்ள பங்கு.
லோக கேளிக்கையும் பொன்னும்
மினுக்கும் எனக்குவேண்டாம்
தேவ நன்மை தயவென்னும்
நல்லாஸ்தியே எனக்குண்டாம்
தேவா, உமது அன்பு என் பங்கு
ஆவியே என்னிலே தங்கு.