ஜூன் 7
‘நீங்கள் எனக்குச் சாட்சிகளென்று கர்த்தர் சொல்லுகிறார்‘
ஏசாயா 43:12
கிறிஸ்துமார்க்கத்தின் சத்தியத்திற்கும், வல்லபத்திற்கும், பாக்கியத்திற்கும் நாம் சாட்சிகள். தேவனுடைய தயவுக்கும், பரிசுத்தத்திற்கும், உண்மைக்கும் நாம் சாட்சிகள். நம்முடைய குணத்தினாலும். நடக்கையினாலும், வார்த்தையினாலும், நாம் உலகத்திற்குச் சாட்சி பகரவேண்டும். பயப்பட்டு சந்தேகங்கொண்ட ஏழை ஆத்துமாக்களுக்குச் சாட்சி பகரவேண்டும். நம்முடைய சாட்சி தெளிவாயும், தைரியமுள்ளதாயும், உறுதியும் அன்புமுள்ளதாயும் இருக்கவேண்டும். நாம் சொல்லும் சாட்சி அனுபவத்திலிருந்து பிறக்கவேண்டும். நாம் கர்த்தரை அறிந்தவர்களா? சத்தியம் நம்முடைய இருதயத்தில் பலன் செய்து வருகிறதென்று தினந்தோறும் அனுபவத்தால் கண்டறிகிறோமா? அது நம்மை அடிமைக்குரிய பயத்தினின்றும், உலக நேசத்தினின்றும், பாவத்தின் வல்லமையினின்றும் விடுவித்துவருகிறதா? ‘தேவன் எங்கள்மேல் வைத்த அன்பை நாங்கள் அறிந்து விசுவாசிக்கிறோம். தேவன் அன்புமயந்தான்’ என்று நாம் சொல்லக்கூடியவர்களா? நம்மைச் சூழ்ந்திருக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் நல்லவர் என்கிறதை ருசித்துப் பாருங்கள்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு ஒரு குறைவுமில்லை என்று சொல்லுகிறோமா? நியாயாதிபதிகள் ராஜாக்களுக்கு முன்பாக, சிறைச்சாலையிலேயும் மரணப்படுக்கையிலும் நாம் சாட்சி சொல்லவேண்டியவர்களாய் இருப்போமானால், நாம் எப்படிச் சாட்சியிடுவோம். தேவன் நல்லவர், தயவுள்ளவர், அவர் நம்மைப் போதுமானபடி பாக்கியராக்கத் தக்கவர். உள்ளது உரியதையெல்லாம் யோபை விட்டெடுத்ததுபோல நம்மை விட்டு எடுத்தாலும், பவுலைச் சோதித்ததைப்போல் நம்மைச் சோதித்தாலும், நாம் அவருக்குச் சாட்சி சொல்ல ஆயத்தப்பட்டிருக்கிறோமா? நீங்கள் எனக்குச் சாட்சிகளென்று அவர் சொல்லுகிறாரே.
உமது நுகம் தாங்கவும்
விழித்து ஜெபிக்கவும்;
நித்தியத்தை முன்னே வைத்து
அதற்குத் தீவிரித்து,
நான் உமது சாட்சியாக
காத்தேயிருப்பேனாக.