ஜூன் 3
‘தம்முடைய கிருபையின் மிகவும் அதிகமான ஐசுவரியம்‘
எபேசியர் 2:6
ஏகோவா தம்முடைய கிருபையில் மகிமை அடைகிறார். அது அவருடைய ஐசுவரியம், அவருடைய ஆஸ்தி. அதின் ஐசுவரியமெல்லாம் நமக்காகத்தான், நம்முடைய விஷயத்தில் செலவழிக்கத்தான், நாம் பெற்றுக்கொள்ளும்படிதான் இயேசுவில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது. நமக்கு வாக்களித்து இலவசமாய்த் தருகிறார். நம்முடைய நினைப்பிற்கும், விருப்பத்திற்கும், விசுவாசத்திற்கும் அது அதிகம். தேவன் அவ்வளவாய் நம்முடைய நன்மைக்கென்று வாக்களித்து சேர்த்து வைத்திருக்கிறாரென்று நாம் விசுவாசிக்கிறதில்லை. ஆதலால் அவ்வளவாய் நாம் கேட்கிறதுமில்லை, எதிர்பார்க்கிறதுமில்லை. கிருபையின் மிகவும் அதிகமான ஐசுவரியத்தைக்குறித்து இன்றைக்குச் சிந்திப்போமாக. இயேசு நமக்குக் கிருபையாக கிடைத்த ஈவு, பரிசுத்த ஆவியும் அப்படியே, ஆவிக்குரிய நன்மைகளெல்லாம் அப்படியே சபைக்குக் கிடைத்தால், இப்பொழுது கிடைக்கிறதும், நித்தியமாய்க் கிடைக்கக்கூடியதுமான சகலத்திற்கும் ஊற்று கிருபையில் அடக்கம். கிருபை இலவசமாய்க் கொடுக்கிறது; விற்கிறதில்லை. அதினுடைய பார்வை தயாளமுள்ளது, மனது இளகினது, கை உதாரமுள்ளது. நாம் நம்மில் நெருக்கமுள்ளவர்களே ஒழிய, தேவனில் நெருக்கமுடையவர்களல்ல. கிருபையின் ஐசுவரியத்தைப் பற்றி தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறதை விசுவாசித்து, அவர் தாராளமாய் வாக்கருளியபடி பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போமானால் எத்தனை நல்லது. அளவற்ற கிருபை இருக்கிறது; அது நமக்குத்தான்; இந்தக் காலையில் நமக்குக் கிடைக்கும்; கேட்கும்போதெல்லாம் பெற்றுக்கொள்ளலாம். நாம் பயத்தோடும், பக்தியோடும், தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பெற்றுக்கொள்ளக்கடவோம்.
க்ருபை என்னும் சத்தம்
எவ்வளவோ இன்பம்,
கெட்டும் என்னை மீட்ட ரத்தம்
நீக்கும் எந்த துன்பம்.


