ஜூன் 1
‘நம்முடைய நீதியாயிருக்கிற கர்த்தர்‘
எரேமியா 23:6
இயேசு ஏகோவா, தாமாயிருக்கிறவர், நித்தியர், மாறாததேவன். அவர் நம்முடைய நீதி; இதற்கென்று அவர் நம்முடைய தன்மையைத் தரித்துக்கொண்டார். நமக்குப் பதிலாக வந்து, பிரயாசப்பட்டு, துன்பமடைந்து; ரத்தஞ்சிந்தி மரித்தார். இயல்பாய் நமக்கு நீதியில்லை; கிருபையினால் தேவநீதி கிடைத்திருக்கிறது. அவர்களுடைய நீதி என்னிலிருந்து உண்டானது என்று கர்த்தர் சொல்லுகிறார். நம்மை நீதிமான்களாக்கத் தேவையானதெல்லாம் கிறிஸ்து நமக்காக முடித்தார். அவர் பாவத்தைத் தொலைத்தார்; நியாயப்பிரமாணத்தை மேன்மையாக்கி அதைத் கனப்படுத்தினார்; நித்திய நீதியைக் கொண்டுவந்தார். ரட்சிப்பின் வஸ்திரத்தால் நம்மை இப்போது உடுத்தி, நீதியின் வஸ்திரத்தால் நம்மை மூடுகிறார். நீதிக்குத் தேவையானதெல்லாம், நம்முடைய நிறைவான நித்திய ரட்சிப்புக்கு தேவன் கேட்பதெல்லாம் அவரிடத்தில் நமக்கு உண்டு. இது ஒரு நாளைக்கு மாத்திரமல்ல, தினந்தோறும் நமக்கு வேண்டியது. இது குற்றஞ்சாட்டுகிற மனச்சாட்சியை வாயடைத்து, சாத்தானைக் கலங்கப்பண்ணி, ஆத்துமாவைப் பலப்படுத்தி, தேவனை மகிமைப்படுத்துகிறது. இன்றைக்கு, நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் இயேசுவை நம்முடைய நீதியாயிருக்கிற கர்த்தராகப் பார்ப்போமாக. கர்த்தருடைய வல்லமையைக்கொண்டு நம்முடைய கடமையை நிறைவேற்றி, போராட்டத்திற்கும் துன்பத்திற்கும் அவருடைய நீதியை மாத்திரம் சொல்லிக்கொண்டு போவோமாக. கிருபாசனத்தண்டையில் இதுவே நமக்கு ஆதரவு, பாதேசியாய்த் தங்கும் இந்த வீட்டில் இதுவே நம்முடைய பாட்டு. மரண பயங்கரத்தில் இதுவே நம்முடைய நம்பிக்கை.
இரட்சகா நினது நாமம்
அறிந்ததை நம்புவோம்,
நீர் என் நீதியின் கர்த்தர் தாம்
சந்தோஷித்து மகிழ்வோம்.