மே 31
‘நீதிமான் நெருக்கத்தினின்று நீங்குவான்‘
நீதிமொழிகள் 12:13
கர்த்தருடைய ஜனங்கள் இயேசுவின் நீதியினாலே கிருபையைக்கொண்டு விசுவாசத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். அவ்விதமாய் நீதிமான்களாக்கப்பட்டு புதுசாய் சிருஷ்டிக்கப்பட்ட யாவரும் தங்கள் இருதயங்களில் பரிசுத்தமும், நீதிக்குரிய அழியாத பிரமாணங்களும், நாட்டப் பெற்றிருக்கிறபடியால் பாவத்தைப் பகைத்து வருகிறார்கள். பாவம் அவர்களை ஆளுகைசெய்கிறதே இல்லை. அவர்கள் தங்கள் இச்சைகளுக்கு அடிமைகளுமல்ல. அநேக துன்பங்கள் அவர்களுக்கு நேரிட்டாலும், தீய்க்கும் தண்ணீருக்கும் உள்ளானாலும், அவர்கள் நல்ல இடத்திற்குக் கொண்டுவரப்படுவார்கள். துன்பத்தினால் அழிந்துபோகமாட்டார்கள். ஏனென்றால் கர்த்தர் அவர்களைத் தம்முடைய கரத்தால் தாங்குவார். சிநேகிதரே, உங்கள் தற்காலத் துன்பங்களுக்கு அப்பால் பாருங்கள். கிறிஸ்தவனாகப் பாடுபட்டால் கிறிஸ்துவோடு பாடுபடுகிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள். அவரோடு பாடுபட்டால் அவரோடு ஆளுகை செய்வீர்கள். உங்கள் தேவன் உங்களை விடுவிக்க வல்லவர்; விடுவிப்பேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். அவரை உறுதியாய்ப் பிடியுங்கள்; சோதனைக்கு இடம்கொடாதிருங்கள்; பொல்லாங்கின் தோற்றத்தையும் தள்ளுங்கள். உங்கள் தேவன் பொல்லாங்கினின்று உங்களைக் கொண்டுவருவார். உங்கள் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உங்கள் நியாயத்தைப் பட்டப் பகலைப்போலவும் கொண்டுவருவார். நீங்கள் நிர்பபாக்கியத்தை மறந்துபோவீர்கள். அதை நினைத்தாலும் கடந்துபோகிற தண்ணீரைப்போல அதை நினைப்பீர்கள். தற்காலத் துன்பம் நித்திய சமாதானமாய் முடியும்.
அங்கே சேர்ந்த கூட்டத்தார்
இங்கவரைப் பிடித்தார்;
பயங்கள் அதட்டினார்
காயமெல்லாம் கட்டினார்;
தேவன் பட்சமுள்ளவர்
உனக்கும் இரங்குவார்.