ஜனுவரி 30
‘நீ தப்புவாயோ?’
ஏசாயா 37:11
கோபங்கொண்ட சத்துரு இப்படித்தான் பேசுவான். அவன் ஜெயங்கொண்டான், ஆதலால் பெருமையாய்ப் பேசுகிறான். அவன் வல்லமை மட்டுப்படுத்தப்பட்டது. அவன் பெருமையால் விழுந்தான். கஸ்திப்பட்டு துன்பத்தில் அகப்பட்டிருக்குஞ் சமயத்தில், பாவஞ்செய்தேனென்றும், அபாத்திரனானேன் என்றும், மனதில் துயரப்படும் சமயத்தில், அவிசுவாசமும் சாத்தானும் ஒன்றாய்ச் சேர்ந்து விழுந்து கெட்ட மற்றவர்களைச் சுட்டிக்காட்டி, நம்முடைய அபாத்திரத் தன்மையையும் நமக்குமுன் வைத்து, பரியாசமாய் நீ தப்புவாயோவென்று கேட்கிறதுண்டு. ஆம், சாத்தானே! நாங்கள் தப்புவோம், எசேக்கியாவின் தேவன் எங்கள் தேவன். ஆறு துன்பங்களில் உன்னை விடுவிப்பேன், ஏழாவதிலும் உன்னைக் கைவிடமாட்டேனே என்று அவர் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். அவர் வார்த்தையை நம்புகிறோம்; அவர் உண்மையின்பேரில் சார்ந்திருக்கிறோம்; அவருடைய கிருபாசனத்தண்டையில் வந்து கெஞ்சுகிறோம்; விடுவிக்க எவ்வளவு சமர்த்தரோ அவ்வளவாய் மனமுள்ளவரென்றும் நிச்சயமாய் நம்புகிறோம். கடந்த காலங்களில் அடிக்கடி விடுவித்தார்; ஜெபிக்கிற தமது ஜனங்களை இப்போதும் விடுவிக்கிறார்; இன்னும் விடுவிப்பாரென்று நம்பிக்கையாயிருக்கிறோம். எங்களிடமிருக்கின்ற ஏதோ ஒரு காரியத்தினிமித்தமல்ல, அல்லது நாங்கள் செய்த ஒரு நன்மையினிமித்தமுமல்ல, அவர் சொல்லினிமித்தமே நம்புகிறோம். ‘துன்பத்தில் நான் அவனோடிருந்து அவனை விடுவித்துக் கனப்படுத்துவேன். அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன். ஏனென்றால் அவன் என் நாமத்தை அறிந்திருக்கிறான்’ என்பது அவருடைய வாக்கு. அவர் உண்மையுள்ளவர், அவர் வார்த்தை தவறாது. நம்முடைய விசுவாசமும் குறையக்கூடாது, விடுதலை வருமென்பது நிச்சயம். வாக்குக்கொடுத்தவர் தேவன், அவர் உண்மையுள்ளவர்.
அவரின் அன்பு வல்லமை
ப்ரகாசிக்குதவர் வாக்கல
அவர் நாமத்தின் மகிமை
அதை மூடும் சத்தியத்தால்.


