ஜனுவரி 28
‘நமக்காகப் பரிந்துபேசுகிறவர்‘
1 யோவான் 2:1
இயேசு நமக்காக மோட்சத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் தமது சொந்த ரத்தத்தின் மூலமாய் மிகவும் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தார். அங்கே அவர் நமக்காகத் தேவனுடைய சந்நிதியில் பிரசன்னமாயிருக்கிறார். சாத்தான் நமக்கு விரோதமாகச் சாற்றுங் குற்றங்களுக்குப் பதில் சொல்லி, நமக்காகப் பரிந்துபேசி, நம்மைக் காக்கவும், நமக்கு வேண்டியதைத் தந்து, நம்மை மகிமைப்படுத்தவும் விரும்புகிறார். ஜெபம்பண்ணக்கூடாத சமயங்களில், குற்றத்தால் நம்முடைய வாய் அடைபட்டு சோதனையால் நமது ஆவி வருத்தப்பட்டு இருக்குஞ் சமயத்தில், இயேசு உன்னதத்தில் நமக்காகப் பரிந்துபேசும்படி இருக்கிறார் என்று அறிந்திருப்பது எவ்வளவு பெரிய ஆறுதல். நேசரே! இந்தக் காலையில் இயேசு உங்களுக்காகத் தேவனுக்கு முன்பாக நிற்கிறார். ஒவ்வொரு காலையிலும் நிற்கிறார். அவர் பரிந்து பேசுகிறதினாலும் உண்டாகும் பலனை நீ தினந்தோறும் அனுபவிக்கிறாய். சந்தேகப்பட்டுப் பயப்படும் சமயத்தில் உன் காரியத்தை இயேசுவுக்குச் சொல்லி, அவர் அதை நடத்தும்படி கேட்டுக் கொள். அவருடைய செயல், அவருடைய நாமம், இவைகளில் மகிழ்ந்து, அவர் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள். அவர் பரிந்து பேசுவார். அவர் சொல்லும் நியாயங்கள் பலத்தது. அவர் திவ்விய தன்மையுடையவர். இன்றைக்கு இயேசுவை உனக்கு முன்பாக உன் வக்கீலாக வைத்துக் கொள். ‘பிதாவே! நீர் எனக்குக் கொடுத்தவர்கள் என்னுடைய மகிமையைக் காணும்படியாக நான் எங்கே இருக்கிறேனோ, அவர்களும் அங்கே என்னோடு கூட இருக்க விரும்புகிறேன்.’ அவர் யாருக்காகப் பரிந்து பேசுகிறாரோ அவர்களுக்கு ஒரு குறைவுமில்லை: அவர்கள் பாக்கியராயிருப்பார்கள்.
ஆத்துமாவே, மேலே நோக்கி
நிற்கும் ரட்சகரைப் பார்,
வக்கீலாகக் கண் உயர்த்தி
தூபங் கையில் தாங்குகிறார்;
அதுவே உனக்காறுதல்
ரட்சிக்கும் அவர் செயல்.


