மே 28
‘உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்‘
நீதிமொழிகள் 3:6
சிநேகிதரே, நாம் கர்த்தருடையவர்கள்; அவருடைய வல்லமையால் உண்டான சிருஷ்டிகள்; அவருடைய ரத்தத்தால் கொள்ளப்பட்டவர்கள்; அவருடைய கிருபையைப் பெற்றவர்கள். அவர் நமதுமேல் தமது அன்பை வைத்தார்; நமக்காகத் தமது ஞானத்தை உபயோகித்தார்; நம்முடைய காரியங்களில் மனம் வைத்திருக்கிறார். நாம் செய்கிறதெல்லாம் அவர் மகிமைக்கென்று இருக்கவேண்டும். எல்லாவற்றையும் ஜெபத்தோடும், நன்றியறிதலோடுகூடிய விண்ணப்பத்தோடும், நமக்கு வேண்டிய சகலத்தையும் அவருக்குத் தெரியப்படுத்தவேண்டும். ஒவ்வொரு காரியத்தையும் அவருடைய கிருபாசனத்தண்டைக்குக் கொண்டுபோய், நம்மைச் சேர்ந்த ஒவ்வொரு சங்கதியையும் அவருக்கு முன் வைத்து, நம்மை நடத்தி ஆசீர்வதிக்கக் கேட்கவேண்டும். நம்முடைய நிர்ப்பாக்கியம் அவருடைய கிருபாசனத்தண்டையில் போகும்போது அவருடைய செவி நமக்குத் திறந்திருக்கும். அவர் தகப்பனானபடியால் நாம் அவரைக் கனப்படுத்தவேண்டும். முழு இருதயத்தோடு அவரை நோக்கிக் கெஞ்சவேண்டும். கேட்கிறதில் நம்முடைய இருதயம் பின்வாங்குமானால், கொடுக்கிறதில் அவருடைய கை பின்வாங்கும். சகலத்திலும் அவரை அறிக்கையிடுவோமானால், மனதில் சமாதானம் தங்கும். அநேக சோதனைகளுக்குக் காக்கப்படுவோம். நம்முடைய விசுவாசம் அவரால் பலப்படும். தேவனை எப்பொழுதும் அறிக்கையிடுகிறவன், தன்னைத் தேவன் அறிக்கையிடுகிறதைக் காண்பான்.
ராஜாதி ராஜா கர்த்தாவே!
நின் செட்டைகளால் மூடுமே;
நீர்தான் என் பெலன் கேடகம்
என் ஆத்துமாவுக்குச் சுகம்;
என் ஜீவன் பாதை சத்தியம்
என் அடைக்கலம் நித்தியம்.