ஜனுவரி 27
ஏதாவது உங்களுக்குக் குறைவாயிருந்ததா?’
லூக்கா 22:35
தேவனைத் தேடி, அவருடைய சித்தத்தின்படி செய்து, அவரது மகிமையை நாடுகிற அவரது சொந்த ஜனங்களுக்குத் தேவையானதெல்லாம் தேவன் எப்போதும் சவதரித்துக் கொடுப்பார். அவர் நம்மை அனுப்பும்போது, பை சுமக்கிற வேலையை நமக்குக் கொடுத்தாலும், நமக்கு வேண்டிய ஆகாரம் நமக்குக் கிடைக்கும். தண்ணீர் நமக்கு நிச்சயமாய்க் கிடைக்கும். சீஷர்கள் ஒன்றுமில்லாமற் போனார்கள். அவர்களை அனுப்பினவர் இயேசு. அவர்கள் திரும்பி வந்து தங்களுக்கு ஒரு குறைவுமில்லையென்று அறிக்கையிட்டார்கள். தேவன் தமது திவ்விய செயலால் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து வந்தார். நாம் கர்த்தர் காட்டும் வழியில் நடப்போமானால், கர்த்தருடைய தூதர் நமக்கு வேண்டிய பதார்த்தங்களை நம்மிடம் கொண்டுவருவார்கள். கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. நமது குறைவுகளைக் கவனிக்கிறார். தமது வாக்குத்தத்தங்களை நினைக்கிறார், சரியான வேளையில் நமக்கு இரங்குகிறார், நாம் உண்மையுள்ள தேவனென்று நமக்குத் திருஷ்டாந்தப்படுத்துகிறார். சரீரத்துக்காவது, ஆத்துமத்துக்காவது உங்களுக்கு ஏதாவது குறைவு நேரிட்டதுண்டா? இதுவரையில் கொடுத்து வந்தவர் இனிமேலும் கொடுத்துவருவார். இயேசு கிருபை நிறைந்தவர். உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும் பொருட்டு, போய்ப் பெற்றுக்கொள்ளுங்கள். திவ்விய செயலால் நம்மை நடத்துகிறவர் இயேசுதாம். அவரை நோக்குங்கள், அவரை நம்புங்கள், அவரைப் பார்த்துக் கெஞ்சுங்கள், நீங்கள் ஆதரவற்றவர்களாகமாட்டீர்கள். அவர் வார்த்தையை நம்புங்கள், அவர் தமது வாக்கை மறுதலிக்கமாட்டார். அவர் அவர் உண்மையை நம்புங்கள், உங்கள் விசுவாசத்தைக் கனப்படுத்தி தமது வாக்கை நிறைவேற்றுவார். உன் அப்பம் உனக்குக் கொடுக்கப்படும், உன் தண்ணீர் உனக்கு நிச்சயமாயிருக்கும்.
இம்மட்டும் அவரன்பு;
அது நீங்காது நம்பு;
எம் நேசர் ஒவ்வொன்றும்
அவரைப் பற்றும் என்றும்.


