மே 25
‘நான் உன்னோடு இருப்பேன்‘
யாத்திராகமம் 3:12
ஏகோவாவின் சமுகம் கிடைக்கிறது பெரிய கனம். அவருடைய மகிமைக்காக நாம் செய்யும் எந்தப் பிரயத்தினங்களிலும், அவருடைய வசனத்தில் கண்டிருக்கும் எந்தக் கடமையை நிறைவேற்றுதலிலும், பரதேசியாய் நாம் கடக்கும் பாதையில் நேரிடும் எந்த மோசத்திலும், அன்னிய நாடாகிய இந்த உலகத்தில் உண்டாகும் எந்தத் துன்பத்திலும் நம்மோடிருப்பேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். அவருடைய சமுகம் நம்மை தைரியப்படுத்தும், பெலப்படுத்தும், ஆதரிக்கும், நமக்கு வாழ்வுண்டாக்கும். இந்த வாக்கு எந்த பயத்துக்கும் நாம் நீங்கியிருக்க நம்மை ஆயத்தப்படுத்தும்; விரோதமுண்டாகும்போது மனதை உற்சாகப்படுத்தும்; நல்ல காரியத்துக்கு நம்மை எழுப்பிவிடும். சிநேகிதரே, தேவன் நம்மோடிருப்பதாக வாக்குக்கொடுத்திருக்கிறார். அப்படியானால் அவருடைய சமுகம் நம்மோடிருக்கிறதாக எண்ணவேண்டும். கர்த்தருடைய சமுகம் இல்லாவிட்டால், எதுவும் நம்மைத் திருப்தியாக்கக்கூடாது. தேவன் நம்மோடிருந்தால் நமக்கு காரியம் வாய்க்கும். நம்மிடத்தில் என்ன கேட்கிறாரோ அதை அவர் தருவார். அவருடைய கிருபையின் மிகுந்த ஐசுவரியத்தில் நமக்கிருக்கும் அனுபவத்தை வெளிப்படுத்துவோம். அவருடைய சமுகம் அவருடைய ஜனங்களுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும். புலன்களால் அவரை அறியாவிட்டாலும் அவர் இருப்பது நிச்சயம். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், அவருடைய வார்த்தையின் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாமல் சகலமும் நிறைவேறும். இன்றைக்கு இயேசுவின் சமுகத்தைத் தேடி அதை எதிர்பார்ப்போமாக. நான் உன்னைவிட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவோமாக, நாம் அவரைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்போமாக.
நம்பி நீ இளைப்பாறு
அவர் வழி காட்டுவார்;
அவர் உண்மையில் தேறு
உன் குறைவை நீக்குவார்;
அவர் உண்மையைப் பிடி
பின்செல் அவர் காலடி.