ஜனுவரி 21
‘தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது‘
மத்தேயு 6:24
நம்முடைய தேவன் வைராக்கியமுள்ளவர். இருதயம் அவருக்குக் கொடுக்கப்படவேண்டும்; நமக்குள்ள சகலமும் அவருக்கு ஆதீனமாகவேண்டும்; அவர் கேட்கிறது இதுதான். இது இல்லாவிட்டால் கிறிஸ்துமார்க்கம் திருப்தி கொடாது. தேவனை உலகத்தோடு சேர்த்து, தேவனுக்கு ஊழியஞ்செய்தலையும் பாவத்துக்கு ஊழியஞ்செய்தலையும் ஏகமாக்கப் பார்க்கிறவர்கள் பாக்கியராயிருக்கமாட்டார்கள். நாம் தீர்மானமாய் நடக்கவேண்டும். இன்றைக்கு யார் எனக்குத் தேவன்? இன்றைக்கு நான் யாருக்கு என் மனதையும் என் திறமையையும் என் ஆசையையும் கொடுக்கவேண்டும்? இன்றைக்கு நான் லோக ஆதாயத்தை, மாம்ச இன்பத்தை, உலகத் தோழமையை எனக்கு விக்கிரகமாக வைத்துக்கொள்வேனா? அல்லது இயேசுவுக்கு என் ஆசைகள் விருப்பங்கள் சகலத்தையும் கொடுப்பேனா? அவருடைய மகிமையையும் கனத்தையும் தேடுவேனா? அல்லது ஏதுமற்ற ஒரு முட்செடியைப் பார்த்து: நீ எனக்கு ராஜனாயிரு என்று சொல்லுவேனா? யாரைச் சேவிக்கிறதென்று தெரிந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கொன்று விகற்பமானதை ஒன்றுபடுத்தப் பார்க்கவேண்டாம். உன்னை முழுவதும் தேவனுக்குக் கொடு, அல்லது மம்மோனுக்குக் கொடு, இயேசுவே! நான் உம்முடையவன், உம்மையே சேவிப்பேனென்று நிச்சயமாய்ச் சொல்லுவாய். அவர் கொடுக்கிற கிருபையைக்கொண்டு அவரைச் சேவித்தால் அவருக்குப் பிரியமான ஊழியஞ்செய்வீர்கள். இந்தக் கிருபையை அவர் வைத்திருக்கிறார், கொடுப்போமென்கிறார், பெற்றுக்கொள்ள அழைக்கிறார். ஆதலால் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனைசெய்யக் கிருபையைப் பெற்றுக் கொள்ளக்கடவோம். புத்திர சுவிகார ஆவியோடு அவருக்கு ஊழியஞ்செய்வதே மெய்ப் பர்க்கியம்.
உமதன்பு அனல் தந்து
உமதூழியம் செய்ய,
எனதுள்ளம் எங்கும் பாய்ந்து
என்னிலுள்ள எத்தீய
குணங்களை நீக்கட்டுமேன்?
உம்முடையவனாவேன்.


