ஜனுவரி 15
‘நீரோ மாறாதவராக இருக்கிறீர்‘
சங்கீதம் 102:27
பூமியிலுள்ளதெல்லாம் மாறுந் தன்மையுள்ளது. சுகம் வியாதியாய் மாறும். இன்பம் துன்பமாய்விடும்; நிறைவுபோய் குறைவு வரும்; அன்பு பகையாகவும், கனம் கனவீனமாகவும், பெலன் பெலவீனமாகவும், ஜீவன் மரணமாகவும் மாறிப்போகும். அந்தகாரத்தின் நாட்களை நினை, அவைகள் அநேகம். நம்முடைய நிலைமையும் நமது சிநேகிதரும் சகலமும் மாறினாலும், ஒருபோதும் மாறாத ஒருவருண்டு. அவர் ஒரே மனமுள்ளவர்; அவரை ஒருவரும் மாற்றக்கூடாது; அவரிடத்தில் வேற்றுமை இல்லை. அவர் நேற்றும் இன்றும் அப்படியே இருக்கிறவர். அவர்தான் மிகவும் உத்தம சிநேகிதன், மிகவும் கிட்டின இனத்தான், கிருபை நிறைந்த ரட்சகன். அவருடைய பேர் இயேசு: அவரது சுபாவம் அன்பு. நமக்கு நன்மை செய்வதே அவருடைய முழு இருதயத்தின் வாஞ்சையும் நோக்கமுமாய் நேற்றும் இருந்தது; இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. அவருக்கு முன்பாக மாத்திரம் நாம் தாழ்மையாக நடப்போமானால், ஒன்றிலும் நமக்குக் குறைவு வைக்கமாட்டாரென்று நாம் முழு நிச்சயமாயிருக்கலாம். அவர் நமக்குத் தேவனாக இருப்பார்; நாம் அவருக்கு ஜனங்களாக இருப்போம். அவரோடு நெருங்கி அதிகமாய்ச் சாவகாசஞ் செய்து அவர் பேரில் சார்ந்திருக்கவேண்டும். அவரைப் பிரியப்படுத்துவது நமது கவலையும், அவரை விசனப்படுத்துவது நமக்குப் பயமும், அவரை மகிமைப்படுத்துவது நமது வைராக்கியமுமாயிருக்கவேண்டும். அப்படியிருக்குமானால் சுகமாயிருந்தாலும் வியாதியாயிருந்தாலும், நிறைவாயிருந்தாலும் குறைவாயிருந்தாலும், உயிரோடிருந்தாலும் செத்துப்போனாலும் நாம் நன்றாயிருப்போம். அவர் மாறாதவர், நமக்கு நன்மை செய்வதைவிட்டு மாறமாட்டார். அன்புக்கும் பரிசுத்தத்துக்கும் ஊற்றாக இருப்பார். கர்த்தரைத் துதியுங்கள்.
நாம் வணங்கும் தேவனிவர்,
உத்தம சிநேகிதர்,
இவரன்பு மாபெரிது,
பெலன் குறையாதது.


