மே 7
இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை‘
ஏசாயா 44:21
இது எவ்வளவு உருக்கம் இரக்கம் அன்பு நிறைந்த வாக்கு. சிநேகிதர் நம்மை மறந்துபோகிறார்கள், பந்து ஜனங்கள் நம்மை அசட்டை செய்கிறார்கள், தேவனும் நம்மை மறந்துபோவாரென்று பயப்படுகிறோம். அவர் நம்மை மறப்பதில்லை என்று இங்கே நமக்கு நிச்சயமாகச் சொல்லுகிறார். நம்முடைய பேர் அவருடைய புஸ்தகத்திலே இருக்கிறது. நம்முடைய பிணையாளி அவருடைய சிம்மாசனத்திற்கு முன்னே எப்பொழுதும் நிற்கிறார். அவர் நம்மைக் குறித்து எப்பொழுதும் கவலைகொள்ளுகிறார். இயேசுவானவர் நமக்காகப் பரிந்துபேசும்பொழுது, தேவன் நம்மை மறக்கமாட்டார். மறவாவிட்டால் அசட்டை செய்யவுமாட்டார். ஒன்றை அவர் எப்பொழுதும் மறக்கிறதாய்ச் சொல்லியிருக்கிறார்; அது நம்முடைய பாவந்தான். அவர் தம்முடைய உடன்படிக்கையை எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கிறார்; நம்முடைய நிலைமையையாவது, நமக்கு வருத்தத்தைக் கொடுக்கிற குறைகளையாவது, அவருடைய சிம்மாசனத்தண்டையில் நாம் செய்யும் விண்ணப்பங்களையாவது மறக்கமாட்டார். தேவன் நம்மை மறவாமல் இருக்கிறது நிச்சயமாய் இருந்தாலும், பரிசுத்தாவி தம்மைத் தாழ்த்தி வெறுமையாக்கி, கிறிஸ்துவை நமக்கு முன்பாக உயர்த்தி, நம்முடைய மன்னிப்பு, சமாதானம்; ரட்சிப்பு ஆகிய இவைகள் அவருடைய ஜீவனிலும் மரணத்திலும் நமக்காக வேண்டுதல் செய்வதிலும் இருக்கும் என்று காண்பித்தாலொழிய, நமக்குத் திருப்தியுண்டாகமாட்டாது. நேசரே, ஆவிக்குரியவைகளைக் கவனித்து, நம்மைத் தாழ்த்தி, சீர்ப்படுத்திக் காக்கிற கிருபையை நித்தம் தேடுவோமாக.
என் தேவா உமதன்பு,
மாறாததெக்காலமும்,
‘உடன்படிக்கை நம்பு,
நானே உன் தேவன், என்றும்
என்னை நினை’ என்றீரே,
முற்றும் நீர் நேசிப்பீரே.