ஜனுவரி 4
தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்
லூக்கா 6:20
கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் ஏழைகள்தான். பாவம் எந்த நன்மையும் தங்களிடத்திலிருந்து உரிந்து போட்டுத் தங்களை நிர்ப்பாக்கியரும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும் ஏழைகளும், குருடரும், நிருவாணிகளுமாக்கினதென்று அவர்கள் காண்கிறார்கள். தங்களால் ஒன்றும் செய்ய ஏலாது ஒன்றைச் சம்பாதிக்கவுங் கூடாது. இலவசமான தேவகிருபை தங்களுக்கு வேண்டியதெல்லாம் சம்பாதித்ததென்றும், தங்களுக்கு வேண்டியதெல்லாம் இயேசுவினிடமிருக்கிறதென்றும், அவரிடமிருக்கிறதெல்லாம், தங்களுக்காகத்தானென்றும், சுவிசேஷம் அவர்களுக்குத் தெரிவிக்கிறது. தங்களைத் தாங்களே பார்க்கும்போது அதைரியமடைகிறார்கள். இயேசுவை நோக்கிப் பார்க்கும்போதோ சந்தோஷமடைகிறார்கள். அவரிடத்தில் கிருபையின் ஐசுவரியமுமுண்டு, மகிமையின் ஐசுவரியமுமுண்டு. கேட்கிற எவனும் வாங்குகிறானென்றும் சொல்லுகிறார். அவர் சம்பூரணமாய்க் கொடுக்கிறார்; கடிந்துகொள்ளுகிறதே இல்லை. கர்த்தருடைய ஏழை ஜனங்களுக்குத் தற்காலத்தில் கிடைக்கும் பாக்கியம் இதுவே. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் இயேசுவினிடத்திலுண்டு. அவர்களுக்கு அவர் சிநேகிதன். அவரைத் தேடுகிறவர்களுக்கு எந்த நன்மையும் குறைவுபடாது. நான் தரித்திரனா? அப்படியானால் இயேசு தன்னிடம் வந்து பொன்னையும், வஸ்திரத்தையும், திராட்சைரசத்தையும், பாலையும் வாங்கிக்கொள்ளச் சொல்லுகிறார். இம்மையில் என்னை ஆறுதல்படுத்த, என்னை ஆதரிக்கவேண்டியதெல்லாவற்றையும், மறுமையில் என்னைப் பாக்கியசாலியாக்கக்கூடிய சகலத்தையும் வாங்கிக்கொள்ளச் சொல்லுகிறார். என்னில் நான் தரித்திரன், இயேசுவில் நான் திரவிய சம்பன்னன். இப்போது ஏழை, கொஞ்சம் பொறுத்தால் ஐசுவரியவான். பரலோகராஜ்யம் அவர்களுடையது. ‘சகலமும் உங்களுடையது. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள், கிறிஸ்து தேவனுடையவர். சகலமும் உங்களுக்காகவே இருக்கிறது.’
நமக்குத் தேவை யாவும்
அவர் பொக்கிஷம் தாரும்,
சர்வவல்லவர் கரம்
வற்றா ஊற்றைப் பாய்ச்சிடும்.

