ஜனுவரி 3
மத்தியஸ்தர் ஒருவரே
1 தீமோ. 2:5
தேவன் பாவத்தை என்றும் பகைக்கவேண்டியவர். அவர் அதோடு ஒப்புரவாகவேமாட்டார். அவர் பகைக்கிற அருவருப்பான காரியம் அதுவே. வெறுப்பின்றி அவர் அதைப் பார்க்கிறதேயில்லை. அப்படியானால் தேவன் நம்மை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்து நம்மோடு ஐக்கியமாவதெப்படி? ஒரு மத்தியஸ்தன் மூலமாய்த்தான். இயேசுதான் மத்தியஸ்தன். அவர் தேவனுக்கும் மனிதனுக்கும் நடுவே நிற்கிறார். பிதாவின் இலக்ஷணங்களையெல்லாம் மகிமைப்படுத்துகிறார். தம்முடைய நீதியினாலும், விலையேறப்பெற்ற இரத்தத்தினாலும் நம்முடைய ஊழியத்தையெல்லாம் அவருக்குப் பிரியமானதாக்குகிறார். இயேசுவிலே மாத்திரம்தான் தேவன் நம்மை நேசிக்கலாம், ஏற்றுக்கொள்ளலாம், நம்மோடு ஐக்கியப்பட்டு நம்மை ஆசீர்வதிக்கலாம். நமக்குப் பதிலாக அவர் தேவனுக்கு முன்னிற்கிறபடியால், அன்பு நிறைந்த அவர் மூலமாய் நாம் அங்கீகரிக்கப்படுகிறோம். தேவனுக்குப் பதிலாக அவர் நமக்கிருக்கிறபடியால், அவரைத் தயவுள்ளவரென்று காண்கிறோம். கிருபாசனத்தண்டை சேரும்போது, இயேசுதான் மத்தியஸ்தன், நடுமனுஷன் என்பதை மறவாமல், உங்களையும், உங்கள் விண்ணப்பங்களையும், உங்கள் துதிகளையும் அவர் மூலமாய்த் தேவனுக்குச் செலுத்துங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் பயப்படவேண்டியதொன்றுமில்லை. அவர் உங்கள் சுபாவத்தைத் தரித்துக்கொண்டார். அவர் மனம் உங்கள் மனதுக்கொத்தது. உங்களைச் சகோதரரென்று அழைக்கிறார். தேவனிடத்தில் தமக்கிருக்கும் செல்வாக்கை யெல்லாம் உங்களுக்காகவே பிரயோகிக்கிறார். அவர் செய்தது சகித்ததெல்லாம் உங்களுக்காகவே. இந்த நிமிஷத்திலும் உங்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.
குற்றத்தால் மனம் நொந்தால்
ஏசு ரத்தம் நோக்கிப்பார்,
உன்னைச் சுத்தமாக்கி அதால்
சமாதானம் தருவார்
ஏசு ரத்தம்
மன்னித்தாற்றுவதினால்.


