எசேக்கியேல்

எசேக்கியேல் – அதிகாரம் 27

அதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48

  • Ezekiel-27
❚❚

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின்பேரிலே புலம்பி,
3 சமுத்திரக் கரைதுறையிலே குடியிருந்து அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரணசொந்தரியவதி என்கிறாய்.
4 கடல்களின் நடுமையத்திலே உன்தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள்.
5 சேனீரிலிருந்து வந்த தேவதாரு மரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
6 பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.
7 எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாயிருந்தது; தீவுகளின் இளநீலமும் இரத்தாம்பரமும் உன் விதானமாயிருந்தது.
8 சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டுவலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்.
9 கேபாரின் முதியோரும் அதின் சாஸ்திரிகளும் உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களாயிருந்தார்கள்; சமுத்திரத்தின் சகல கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
10 பெர்சியரும், லுூதியரும், பூத்தியரும் உன் இராணுவத்தில் யுத்தவீரராயிருந்து உனக்குள் கேடகமும் தலைச்சீராவும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.
11 அர்வாத் புத்திரரும் உன் இராணுவ மனுஷரும் உன் மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர் உன் கொத்தளங்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன் மதில்கள் சுற்றிலும் தங்கள் பரிசைகளைத் தூக்கிவைத்து, உன் வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள்.
12 சகலவித பொருள்களின் திரளினாலும் தர்ஷீஸ் ஊரார் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன் சந்தைகளில் விற்க வந்தார்கள்.
13 யாவன், தூபால், மேசேக் என்னும் ஜாதியார் உன் வியாபாரிகளாயிருந்து மனுஷர்களையும் வெண்கலப்பாத்திரங்களையும் உன் தொழில்துறைக் கொண்டுவந்தார்கள்.
14 தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறுகழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
15 தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள்; அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக் கொண்டுவந்தார்கள்.
16 சீரியர் உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தம் உன்னோடே வியாபாரம்பண்ணி, மரகதங்களையும், இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையாலாடைகளையும், உயர்ந்த வஸ்திரங்களையும், பவளங்களையும், பளிங்கையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள்.
17 யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணி, மின்னீத் பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
18 தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும், சகலவிதப் பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே வர்த்தகம்பண்ணி, கல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள்.
19 தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வம்பையும் உன் சந்தைகளில் கொண்டுவந்து உன் தொழில்துறையில் விற்றார்கள்.
20 இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக்கம்பளங்களை தேதானின் மனுஷர் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
21 அரபியரும், கேதாரின் சகல பிரபுக்களும் உனக்கு வாடிக்கையான வர்த்தகராகி ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
22 சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னோடே வர்த்தகம்பண்ணி, மேல்தரமான சகலவித சம்பாரங்களையும், சகலவித இரத்தினக்கற்களையும் பொன்னையும் உன் சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.
23 ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும் அசீரியரும் கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
24 இவர்கள் சகலவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த வஸ்திரங்கள் வைக்கப்பட்டு கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
25 உன் தொழில்துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப் பாடினார்கள்; நீ சமுத்திரத்தின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.
26 தண்டுவலிக்கிறவர்கள் ஆழமானதண்ணீர்களில் உன்னை வலித்துக்கொண்டு போனார்கள்; நடுச்சமுத்திரத்திலே கொண்டற்காற்று உன்னை உடைத்துப்போட்டது.
27 நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும், உன் சந்தைகளோடும், உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும் உன் மாலுமிகளும் உன்னிலுள்ள கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும் உன்னிலுள்ள எல்லா யுத்தவீரரும், உன் நடுவிலிருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்.
28 உன் மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.
29 தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்கள் கப்பல்களை விட்டுஇறங்கி, கரையிலே நின்று,
30 உன்னிமித்தம் சத்தமிட்டுப்புலம்பி, மனங்கசந்து அழுது, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
31 உனக்காக மொட்டையிட்டு இரட்டுடுத்திக்கொண்டு, உனக்காக மனங்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள்.
32 அவர்கள் உனக்காத் தங்கள் துக்கத்திலே ஓலமிட்டு, உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: சமுத்திரத்தின் நடுவிலே அழிந்துபோன தீருவுக்குச் சமான நகரம் உண்டோ?
33 உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.
34 நீ சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும் உன் நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோயின என்பார்கள்.
35 தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.
36 சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் உன்பேரில் ஈசல்போடுவார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.