1 சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். 2 அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள். 3 ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். 4 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து; 5 இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். 6 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். 7 அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள். 8 நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின் படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். 9 இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். 10 அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி: 11 உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான். 12 ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான். 13 உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். 14 உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். 15 உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான். 16 உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். 17 உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள். 18 நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான். 19 ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். 20 சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள். 21 சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான். 22 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.