Skip to content
►❚❚
1 பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
2 பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள்.
3 அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.
4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.
5 ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை.
6 அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும் படிக்கு கர்த்தருடைய கை அவர்கள் மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
7 இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது; இஸ்ரவேலின் தேவனுடைய கை நமது மேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி;
8 பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக் கொண்டுபோனார்கள்.
9 அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.
10 அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.
11 அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடி வரும் படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
12 செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.