April

ஏப்ரல் 17

ஏப்ரல் 17

……. நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவன் இன்னார் என்று அறிவேன் (2.தீமோ.1:12).

நான்… அறிவேன் என்று பவுல் மிகுந்த நிச்சயத்தோடு இங்கு கூறியுள்ளார். இதில் எவ்வித சந்தேகத்தின் நிழலையும் காணமுடியாது. இப்படிப்பட்ட நிச்சயத்தோடு உள்ள பலரை நாம் வேதாகமத்தில் முழுவதுமாகக் காணமுடிகிறது. தன் வேதனையிலும், பாடுகளிலும் உறுதியாக நின்ற யோபு, என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார். மிகுந்த இக்கட்டில் சிக்கிக்கொண்ட பவுல் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என சாட்சி கூறுகிறார். யோவான், அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாக நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இரட்சகரை அறிந்து அவரோட உறுவுகொண்டமையால் பவுல், அதைப்பற்றி தான் வெட்கப்படவேண்டியதில்லை என்று நம்பிக்கை கொண்டுள்ளார். தன் விசுவாசத்தைக் குறித்து அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். சவிசேஷத்தைக் குறித்து தெளிவாக அவர் அறிந்திருந்தார். அதோடு தான் விசுவாசிக்கிறவர் இன்னாரென்றும் தெளிவாக தெரிந்திருந்தார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாம் தெளிவாக அறிந்துகொண்டுள்ளோம். நம்பிக்கைக்குரிய அவரை நாம் முழுவதுமாக சார்ந்துள்ளோம். வானத்தையும், பூமியையும் படைத்த தேவனிடத்தில் நம் முழு நம்பிக்கையையும் வைத்துள்ளோம். பவுலைப்போல் நமக்கும் வாழ்க்கை வேதனையாகத் தோன்றலாம். ஆயினும் இரட்சகர் நம்மோடிருப்பதினால் நாம் வெட்கப்படுவதில்லை. இம்மையிலும், மறுமையிலும், அவர் நம்மை வெட்கப்படுத்தமாட்டார்.