நோவாவின் திராட்சத் தோட்டம்

நோவா ஒரு திராட்சத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். காம் அதைக் கண்டு, தன் சகோதரருக்கு அறிவித்தான். இதினிமித்தம் காம் சபிக்கப்பட்டான். பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. இவர்களால் பூமி எங்கும் ஜனங்கள் பெருகினார்கள் (ஆதி 9:20-27).

இதுமுதல் மனித ஆளுகையின் காலம் ஆரம்பமாறிற்று.

நோவாவின் பலி

நோவா தேவனுக்குப் பலி செலுத்தினான். கர்த்தர் நோவாவோடு உடன்படிக்கையை ஏற்படுத்தி, பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்று சொல்லி வானவில்லை அடையாளமாக வைத்தார். நோவாவோடு பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பக் கட்டளையிட்டார். (ஆதி 8:20, 9:1-17)

அழைப்புக்குச் செவிகொடாதோர் அழிவு

நோவா ஜனங்களைப் பேழைக்குள் செல்லுமாறு அழைத்தான். ஜனங்கள் செல்லவில்லை. நோவாவின் வீட்டாரான 8 பேர் மட்டும் பேழைக்குள் ஏறினார்கள். நோவா தேவ கட்டளைப்படி குறிக்கப்பட்ட மிருகங்களை ஜோடு ஜோடாகப் பேழைக்குள் சேர்த்தான். 40 நாள் இரவும் பகலும் மழை பெய்தது. 150 நாள் ஜலம் பூமியின் மேலெங்கும் பிரவாகித்துக் கொண்டிருந்தது. சகல ஜீவ ஜந்துக்களும் அழிந்தன. பின்பு பேழை அரராத் மலையில் தங்கிற்று. தேவ கட்டளைப்படி நோவாவும் குடும்பமும் ஜீவ ஜந்துக்களும் பேழையிலிருந்து வெளியே வந்தார்கள் (ஆதி 6:18,7:1-24,8:4,14-19)

நோவாவின் பேழை

நோவா ஆதாமுக்கு பின் 10ஆவது தலைமுறை. அவனுக்குத் தேவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது. தேவன் அன்றைய பொல்லாத சந்ததியை ஜலப்பிரளயத்தால் அழிக்கத் திட்டமிட்டார். தமது திட்டத்தை நோவாவுக்கு வெளிப்படுத்தினார். ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிக் கொள்ள ஒரு பேழையைச் செய்ய நோவாக்குக் கட்டளையிட்டார். பேழையின்; நீளம்  300 முழம், அகலம் 50, உயரம் 30 முழும். அதற்கு 3 தட்டுகளும் அதன் பக்கத்தில் ஒரு கதவும், மேல் தட்டில் ஒரு ஜன்னலும் இருந்தன (ஆதி 6:8, 13:17)

மனுக்குலம் பாவத்தில்

ஆதாம் ஏவாள் துரத்தப்பட்ட பின், காயீன், ஆபேல் என்பவர்கள் பிறந்தார்கள். காயீன் ஆபேலைக் கொன்றான். பின்பு ஆதாமுக்குச் சேத் என்ற மகன் பிறந்தான். அதன்பின் ஆதாம் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். ஆதாமின் சந்ததி உலகில் பெருகிற்று. பாவமும் பெருகிற்று. மனிதனைப் படைத்ததற்காக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். பாவத்தின் மிகுதியால் தேவன் மனுக்குலத்தை அழிக்கச் சித்தமானார். (ஆதி.4:1-10,  6:1-7,11,12, 5:3-4)

தேவனின் இரட்சிப்பின் திட்டம்

தேவக்கட்டளையை மீறிச் சாபத்திற்குள்ளாகி நித்திய ஜீவனை இழந்த மனிதனை மீட்டெடுத்து அவனை மறுபடியும் தன்னோடு சேர்த்துக் கொண்டு நித்திய கால வாழ்வை அளிக்கும்படி தேவன் சித்தமானார். அதற்கான தமது திட்டத்தை ஏதேன் தோட்டத்தில் வெளிப்படுத்துவதை ஆதி 3:15ல் காண்கிறோம். பாவம் ஒரு ஸ்திரீயால் பிரவேசித்தது. எனவே, மீட்புக்காக ஒரு ஸ்திரி தெரிந்தெடுக்கப்படுவாள். தேவன் தாமே அந்த ஸ்திரியீன் வித்தாகப் பிறப்பார். அதாவது வார்த்தையாகிய தேவன் ஒரு ஸ்திரீயின் வயிற்றில் மாம்சமாவார். ஸ்திரீயின் வித்தாகப் பிறக்கும் தேவன் ஆதாமின் பாவத்தால் ஏற்பட்ட மரணத்திலிருந்து அவன் சந்ததியை மீட்டுக்கொண்டு, சாத்தானின் தலையை நசுக்குவார். இந்த இரட்சிப்பின் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதைப் பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கமுடிகிறது. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டுத் துரத்தப்பட்டார்கள்.

இது முதல் மனச்சாட்சியின் காலம் ஆரம்பிக்கிறது.

ஏதேனின் ஜீவ விருட்சக் கனி இழப்பு

கர்த்தர் மனிதனுக்காகச் சகலவித கனி விருட்சங்களையும் ஏதேனில் வைத்திருந்தார். தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சமும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் இருந்தது. ஆனால் முதல் மனிதன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் விலக்கப்பட்ட கனியைப் புசித்தபடியால் அவன் ஏதேனை விட்டுத் துரத்தப்பட்டான். அவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனி மறுக்கப்பட்டது. (ஆதி.3:22-24)

மனிதனின் வீழ்ச்சி

சாத்தான் ஏதேன் தோட்டத்தில் புகுந்து சர்ப்பத்தின் மூலமாய் ஏவாளை வஞ்சித்தான். விலக்கப்பட்ட கனி புசிப்பதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதும், இச்சிக்கப்படத்தக்கதாயும் இருக்கிறது என்று கண்டு, ஏவாள் அதைப் பறித்து, புசித்து தன் கணவனுக்கும் கொடுத்தாள். தேவக்கட்டளையை மீறினபடியால் அவர்கள் வீழ்ச்சியடைத்தார்கள். பாவத்தின் சம்பளமாகிய மரணம் அவர்களை ஆட்கொண்டது. ஆதாமின் சந்ததி ஜன்ம பாவத்திற்குள்ளானார்கள்.

வீழ்ச்சியடைந்த அதாமும் ஏவாளும் அவர்களை வஞ்சித்த சாத்தானும் சபிக்கப்பட்டார்கள். அவர்களினிமித்தம் பூமியும் சபிக்கப்பட்டது (ஆதி.3:1-7, 14.19).

ஆதிக் குடும்பம் தேவனோடு

பகலில் குளிர்ச்சியான நேரங்களில் தேவன் ஆதாம் ஏவாளோடு உலாவிக்கொண்டிருந்தார். இந்த உறவுக்காகவே அவர்கள் படைக்கப்பட்டார்கள். இந்தக் காலம் பாவம் இல்லாத காலம் என்று அழைக்கப்படுகிறது. (ஆதி.3:8)

ஆதாமின் படைப்பு

தேவன் முதல் மனிதனாகிய ஆதாமைத் தமது சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டித்தார். பூமியிலே மண்ணினாலே மஷனை உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். அவன் ஜீவாத்துமாவானான். ஆதாம் முதல் இயேசு வரை 64 தலைமுறைகள் என்று காணப்படுகிறது. ஆதாமின் எலும்பிலிருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள். (ஆதி.1:26,  2:7,23).