மெய்யான மதிப்பு

மே 27

எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? (மத்.23:17)

தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தனது ஆணையை நிறைவேற்ற வேண்டியதில்லையென்றும், தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தனது ஆணையை நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்றும் இயேசு கிறிஸ்து கிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த வேதபாரகரும் பரிசேயரும் கற்பித்தனர். பலிபீடம் மற்றும் காணிக்கை ஆகியவற்றின்பேரில் சத்தியம் பண்ணுகிறதிலும் இதேபோன்று தவறான போதனையை அவர்கள் கற்பித்தனர். பலிபீடத்தின்பேரில் இடுகிற ஆணையைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் காணிக்கையின் பேரில் இடுகிற ஆணையைத் தவறாமல் நிறைவேற்றவேண்டும் என்பது அவர்கள் வாதம்.

அவர்கள் மதிப்பிடும் முறை முற்றிலும் தவறானது என்று கர்த்தர் எடுத்துரைத்தார். தேவாலயமே பொன்னிற்குச் சிறப்பளிக்கிறது. அதுபோலவே பலிபீடமே காணிக்கைக்கச் சிறப்பளிக்கிறது.

இவ்வுலகில் தேவன் வாசம்செய்யம் இடமாக தேவாலயம் இருந்தது. அவ்விடத்தில் பயன்படுத்தப்பட்ட பொன்னோ எல்லாப் பொன்னிலும் மிகவும் மேன்மையான கனத்தைப் பெற்றது. அது தேவனுடைய வீட்டோடு கொண்டிருந்த சம்பந்தத்தினால், அத்தனிச் சிறப்பைப் பெற்றது. அதுபோன்றே காணிக்கை பலிபீடத்தினால் சிறப்பு பெற்றது. பலிபீடம் தெய்வீக ஆராதனையின் அங்கமாகத் திகழ்ந்தது. எந்தவொரு விலங்கும் அதில் பலியிடப்படுவதைப் பார்க்கிலும் மேலான கனத்தைப் பெறமுடியாது. விலங்குகள் அவற்றின் வாழ்க்கையில் சில நோக்கங்களை உடையவையாக இருந்திருக்குமானால் அவ்வாறு பலியிடப்படுவதையே விரும்பியிருக்கும்.

பாரிஸ் நகரக் கடைவீதியில் மஞ்சள் நிறக் கற்கள் பதித்த பழைய ஆரம் ஒன்றைக் குறைந்த விலைக்கு ஒரு பயணி வாங்கினான். தனது நாட்டிற்குத் திரும்பிச் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நியூயார்க் சுங்க அதிகாரிகள் பெரும் பணத்தை வரியாக வசூலித்தனர். அந்த ஆரத்தின் மதிப்பை அறிய விரும்பினபோது அதன் மதிப்பு 25000 டாலர் என்று ஒரு நகைக்கடையிலும் அடுத்த கடையில் 35000 டாலர் என்றும் கூறினர். “ஜோசபைனுக்கு நெப்போலியன் போனபார்ட்டின் அன்பளிப்பு” என்று கண்ணுக்குப் புலப்படாத சிறிய எழுத்துக்கள் அந்த ஆரத்தில் பொறிக்கப்பட்டிருந்ததே அதன் விலைமதிப்பிற்குக் காரணம் என்பதை அவன் பின்னரே அறிந்துகொண்டான். நெப்போலியனுடன் கொண்ட தொடர்பினால் அந்த ஆரம் சிறப்பு பெற்றது.

இதிலிருந்து நாம் அறிவது யாது? நாம் ஒன்றிற்கம் தகுதிபடைத்தவர் அல்லர். ஒன்றையும் நாமாகச் செய்ய இயலாதவர். கர்த்தரோடு நாம் கொண்டிருக்கிற ஐக்கியமும், அவருடைய உழியத்தோடு நாம் வகிக்கும் பங்கும் நம்மைத் தனிச் சிறப்பு அடையச்செய்கின்றன. “கல்வாரியோடு நீங்கள் கொண்டுள்ள தொடர்பு உங்களைப் பற்றிய மிகவும் வியத்தகு மேன்மையாகும்” என்று ஸ்பர்ஜன் கூறியுள்ளார்.

அசாதாரண வகையில் நீங்கள் புத்திகூர்மை உடையவராக அருக்கலாம். அதற்காக நீங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர் ஆவீர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்காக நீங்கள் அதனைப் பயன்படுத்தாதவரை, அதனுடைய மிக உயர்ந்த மேன்மையை அது அடையாது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். கிறிஸ்துவே உங்களுடைய அறிவைப் பரிசுத்தப்படுத்துகிறார்.

உங்களுடைய திறமையைப் கண்டு இவ்வுலகம் அதற்குப் பெரிய விலையைக் கொடுக்கலாம். இவ்வுலகம் சபையை அறியாது. ஆனால் அந்தச் சபையே உங்களது திறமையைப் பரிசுத்தப்படுத்தகிறது. உங்களது திறமை சபையைப் பரிசுத்தப்படுத்துவதில்லை.

நீங்கள் பணத்தைச் சேமித்து வைக்கலாம். அல்லது உங்களுடைய சொந்த நலனுக்காகச் செலவிடலாம். அல்லது இறை அரசிற்காகச் செலவிடலாம். கிறிஸ்துவின் நோக்கம் நிறைவேறுவதற்காக நீங்கள் அதைப் பயன்படுத்துவதே அதன் மிகச்சிறந்த பயனாகும். இறை அரசே அச்செல்வத்தைப் பரிசுத்தப்படுத்துகிறது. செல்வம் இறை அரசைப் பரிசுத்தப்படுத்துவதில்லை.

உண்மையான கீழ்ப்படிதல்

மே 26

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். (1.சாமு.15:22).

அரசனாகிய சவுலுக்கு தேவன் கொடுத்த கட்டளைகள் மிகத்தெளிவாக இருந்தன. அமலேக்கியரும் அவர்களுடைய உடமைகள் யாவும் அழிக்கப்படவேணஇடும். அந்த உடமைகளைக் கொள்ளைப் பொருட்களாகக் கொள்ளாமல், ஒன்றுவிடாமல் எலஇலாம் அழிக்கப்படவேண்டும். ஆனால் நடந்தது என்ன? அரசனாகிய ஆகாகையும் முதல் தரமான மந்தையையும் கொல்லாமல் சவுல் விட்டுவைத்தான்.

அடுத்தநாள் காலையில் சாமுவேல் சவுலைக் கில்காலில் சந்தித்தபோது, தான் கர்த்தருடைய சொற்களின்படி அனைத்தையும் செய்துமுடித்ததாக சவுல் உறுதியுடன் பதிலுரைத்தான். ஆனால் அதே நேரத்தில் கொல்லைப்புறத்திலிருந்து இன்னிசைப்பாடல் ஒலித்தது. ஆடுகளும் மாடுகளும் சத்தமிட்டன. சவுலுக்கு இக்கட்டான சூழ்நிலை.

எல்லா மந்தையையும் சவுல் கொன்றுபோட்டிருந்தால், எங்ஙனம் ஆடு சத்தமிடும் என்பதே சாமுவேலின: கேள்வி. சவுலோ, தனது கீழ்ப்படியாமையை மறைக்க முயற்சி செய்தான், மக்களைக் குறைகூறினான், சமயப்பற்றின் அடிப்படையில் காரணங்கள் கூறினான். “ஜனங்கள் ஆடுமாடுகளில், நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்” என்பதே அவன் உரைத்த பதில்.

அதன்பிறகே, “பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம் பண்ணுதல் பில்லி சூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது” என்று தேவனுடைய தீர்க்கதரிசி இடிமுழக்கமெனக் கடிந்துரைத்தான்.

சடங்குகள், பலிகள், காணிக்கைகள் யாவற்றையும் விடக் கீழ்ப்படிதல் மிகவும் இன்றியமையாதது. தங்களுடைய தாயார் வாழ்ந்த நாட்களில், அவருக்குக் கீழ்ப்படியாமல் ஏளனமாய் நடத்தின பிள்ளைகள் சிலரை எனக்குத் தெரியும். அவர்கள் தங்களுடைய தாயைப் பல ஆண்டுகள் எதிர்த்து நின்று அவமதித்தனர். ஆனால், அந்தத் தாய் இறந்தபோது, சரீரத்தை ஆடம்பரமாக அலங்கரித்தனர். அவர்கள் செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேடி அவர்கள் செய்த இச்செய்கை பயனற்றதும் வெறுக்கத்தக்கதுமாயிருக்கிறது.

வேதத்திற்க முரணான பதவியையும், நண்பர்களையும் கொண்டிருப்போர் அது சரியானதே என்றும், அதன் வாயிலாக பரந்த செல்வாக்கை அடையலாம் என்றும் வாதிடுவார்கள். பகுத்திறவுபோலத் தோன்றும் இப்படிப்பட்ட வாதங்களால் தேவன் ஏமாறமாட்டார். நமது கீழ்ப்படிதலையே அவர் விரும்புகிறார். நமக்கு எங்கே செல்வாக்கு வேண்டும் என்பதை அவர் அறிவார். உண்மை யாதெனில் நமது கீழ்ப்படியாத செயல்கள், நமது செல்வாக்கு ஆகியவை எதிரான விளைவுகளையே உண்டாக்கும். நமது கர்த்தரோடு ஐக்கியம் கொண்டவர்களாக நாம் நடப்பது மற்றவர்களிடம் தெய்வீகத் தன்மையுள்ள விளைவுகளை உண்டாக்கும்.

“கீழ்ப்படியாமல் செலுத்துகிற காணிக்கைகள் தீட்டானவை” என்று வில்லியம் கார்னர் என்பார் கூறியுள்ளார். பக்தி, சமயம் ஆகிய காரணங்களைக் கூறி நமது கீழ்ப்படியாமையை மறைக்க முயன்றால் நமது பலிகள் இன்னும் கீழ்த்தரமானதாகக் காணப்படும். தேவன் கண்களை மூடிக்கொள்வதில்லை.

உண்மையான ஒப்புரவு

மே 25

அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. (மத்.18:15)

உன்னைப் புண்படுத்தும் வகையில் ஒருவர் ஏதாவது சொல்லியிருந்தாலோ, செய்திருந்தாலோ அவரிம் சென்று அவருடைய குற்றத்தை நீங்கள் கூறவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. அது மிகவும் சிரமமானது, ஆகவே நாம் அவ்வாறு செய்ய விரும்புகிறதில்லை.

ஆகவே அதைக்குறித்து ஆழ்ந்த சிந்திக்கத் தொடங்குவீர்கள். அவர்கள் என்ன செய்தார்கள். அது எவ்வளவு தவறானது என்று மீண்டும் மீண்டும் சிந்திக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய அலுவலைச் செய்துகொண்டிருக்கும்போது என்னென்ன நடந்தது என்பதெல்லாம் உங்கள் நினைவிற்கு வருகிறது. உங்களுடைய வயிற்றில் அமிலம் சுரக்கிறது. உறங்கும்போதும் அந்த நிகழ்ச்சி உயிர்கொண்டு எழுகிறது. கொதிக்கும் தொட்டியில் அழுத்தம் அதிகரிக்கிறது. நீங்கள் அந்த மனிதனிடம் சென்று அவருடைய குற்றத்தைச் சொல்லுங்கள் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அதை உங்களால் செய்யமுடிகிறதில்லை.

உங்களுடைய பெயர் அறிவிக்கப்படாமல் அந்தச் செய்தி அவரிடம் சென்றடைய வேண்டுமென்று நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். செய்த தவறுக்கு அவர் மனம் வருந்தத்தக்கதாக ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், அவ்வாறு எதுவும் நடப்பதில்லை. நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவீர்கள். ஆனாலும் நேருக்கு நேராகச் சந்திக்கிறதைப் பற்றிய நினைவு உங்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணுகிறது.

இவ்வாறு நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காலத்தில் அந்நிகழ்ச்சி அவருக்கு ஊறுவிளைவிக்கிறதைக் காட்டிலும் உங்களுக்கு அதிகமான ஊறுவிளைவித்துவிடுகிறது. உங்களுடைய முகம் வாடலாக இருப்பதைக் காண்போர் ஏதோ ஒன்று உங்களை வருத்துகிறது என்பதை அறிந்துகொள்வார்கள். அவர்கள் உங்களோடு உரையாடும் வேளையில் உங்களுடைய உள்ளம் வேறுறொரு உலகத்தில் இருக்கும். நீங்கள் வேறொரு சிந்தனையில் ஆழ்ந்திருப்பதால் உங்களுடைய வேலை கெடுகிறது. பொதுவாகச் சொல்லப்போனால், இந்த இடையூறுகளினால் உங்கள் வேலையனைத்தும் பயனற்றுப்போய்விடுகின்றன. வேதம் உங்களிடம் தொடர்ந்து சொல்லுகிறது. “நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து.” உங்களுடைய மனோதிடத்தின் வலிமையால், இதுவரை அதைக்குறித்து யாரிடமும் பேசவில்லை. முடிவில் உங்களால் தாங்கமுடியாமல் ஜெபத்திற்காகவும், ஐக்கியத்திற்காகவும் நடந்த நிகழ்ச்சியைப்பற்றி ஒருவரிடம் கூறுகிறீர்கள். நீங்கள் எதிர்பாராவண்ணம், உங்களிடம் பரிவோடு பேசுவதற்குப் பதிலாக, “உங்களுக்கு எதிராகக் குற்றம் இழைத்தவரிடம் சென்று நேரடியாக இதைக்குறித்து ஏன் பேசக்கூடாது?” என்று அவர் கூறுவார்.

நீங்கள் நேரடியாக அவரைச் சந்திக்க ஆயத்தமாகிவிட்டீர்கள். நீங்கள் என்னபேசவேண்டுமென்று பலமுறை நினைத்துப் பின்னர் திருமறைக்குக் கீழ்ப்படிந்து அவரிடம் சென்று அதைக் கூறுகிறீர்கள். அதைக்கேட்டு அவர் வியப்படைகிறார், மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறார். உங்களுடைய சந்திப்பு ஜெபத்தோடு முடிவடைகிறது.

நீங்கள் அங்கிருந்து வெளியே செல்கிறபோது உங்களுடைய தோளிலிருந்து பெரிய பாரம் இறக்கப்பட்டதாக உணர்க்கிறீர்கள். வயிற்று எரிச்சல் நின்றுபோகிறது. உங்களுடைய சரீர இயக்கம் இயற்கையான நிலைக்குத் திரும்புகிறது. உடனடியாக வேதத்திற்குக் கீழ்ப்படியவில்லையே என்ற எண்ணமே உங்களைக் குறைகூறும்.

சூதாட்டம்

மே 24

வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம் (நீதி 13:11)

நீங்கள் ஒருகோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி. சூதாட்டத்தில் கலந்துகொள்ள இதைப்போன்ற விளம்பர அழைப்புகள் நம்மை நோக்கி அம்புகள் போல எய்யப்பட்ட வண்ணமாயிருக்கின்றன. அங்காடிகளுக்குச் செல்லும் குடும்பத் தலைவிகளைக் கவர்ந்திழுக்கும் பரிசுத்திட்டங்கள் பல புது வடிவத்தில் வருகின்றன. பலகோடி ரூபாய்கள் பரிசாக அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய விளம்பரங்களைக் கண்டு பணம் அனுப்ப சராசரி மனிதர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சில பத்திரிக்கைகளுக்குச் சந்தா அனுப்புவதற்குப் பரிசுத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வெற்றி பெறுவது உறுதி என்பதுபோல சில திட்டங்கள் காணப்படும். சில செயல்கள் மிகத் தெளிவானமுறையில் சூதாட்டங்களாகக் காணப்படும். சுழற்சக்கரம், குதிரைப் பந்தயம், நாய் பந்தயம், அதிர்ஷ்ட எண் விளையாட்டு ஆகியவை அந்த ரகத்தைச் சார்ந்தவை.

இவையாவற்றையும் குறித்துத் திருமறை கூறுவது யாது? இத்தகைய எதுவும் நல்லது அல்ல என்பதே அதன் விடையாகும்.
வஞ்சனையால் தேடினபொருள் குறைந்துபோம். கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான் என்று திருமறை விளம்புகிறது (நீதி 13:11). வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகினான். வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான் என்றும் அது கூறுகிறது (நீதி 28:22). அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சு பொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான். அவன் தன் பாதிவயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான் என்பது திருமறைவாக்காகும் (எரே 17:11).
நீங்கள் சூதாடக்கூடாது என்று பத்துக்கட்டளைகள் வெளிப்படையாகக் கூறப்படவில்லையெனினும், பத்தாவது கற்பனை, நீங்கள் இச்சியாதிருப்பீர்களாக என்று சொல்லுகிறது (யாத் 20:17). சூதாட்டம், இச்சையின் ஒரு வகையல்லாமல் வேறென்ன? நமது இரட்சகர் சிலுவையில் அறையப்பட்டிருந்த வேளையில் அவருடைய தையலில்லாத ஆடைக்காக உரோம நாட்டுப் படைவீரர்கள் சீட்டுப்போட்ட நிகழ்ச்சி, விசுவாசிகளுக்குச் சூதாட்டம் பொல்லாங்கானது என்பதை எப்பொழுதும் நினைவுகூரச்செய்யும்.

சூதாட்டத்திற்கு அடிமைப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களுக்கு கொண்டுவரும் வறுமையையும் துக்கத்தையும் எண்ணிப்பாருங்கள். இழந்த பணத்தை ஈடுகட்டச் செய்யப்படும் குற்றங்கள் ஏராளம். பெரும்பாலும் சூதாட்டம் துன்மார்க்கரின் நட்பைக் கொண்டுவருகிறது. இவையாவும், கிறிஸ்தவ வாழ்வில் சூதாட்டத்திற்கு இடமேயில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. உண்ண உணவும், உடுக்க உடையும் போதுமென்றிருப்பதே விசுவாசிக்கு அழகு என்று தீமோத்தேயுவிற்கு நினைவ+ட்டியவின் பவுல், செல்வந்தனாக வேண்டுமென்ற விரும்பத்தை எச்சரித்து, பண ஆசை எல்லாத் தீமைக்கும் பேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுதியுள்ளார் (1தீமோ 6:9)

மெய்யான ஐக்கியம்

மே 23

அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காகவும், நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல, அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ.17:21)

மகாபிரதான ஆசாரியர் என்னும் நிலையில், நமது கர்த்தர் ஏறெடுத்த ஜெபத்தின் மூலமாக இரண்டுமுறை தமது மக்கள் ஒன்றாயிருக்க வேண்டுமென்று மன்றாடினார் (21,22,23 ஆகிய வசனங்கள்). கிறிஸ்துவை அறிக்கைசெய்கின்ற அனைத்து உலகசபைகளும் ஒன்றாக ஐக்கியங்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிற இயக்கத்தினர் இந்த வசனங்களைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தகின்றனர். ஆனால் அந்த ஐக்கியத்தை அடைவதற்கு அந்த இயக்கத்தார் அடிப்படைக் கிறிஸ்தவ உபதேசங்களைக் கைவிட்டுவிடுகின்றனர். அல்லது மாற்றிப் பொருள் கூறுகின்றனர். “உலகமெங்கும் இயங்கும் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு வெற்றிபெற்றுவிட்டது என்று இக்காலங்களில் சொல்லப்படும் கூற்று உண்மைக்கு முற்றிலும் மாறான வஞ்சப்புகழ்ச்சியாம். அங்கு உலக ஐக்கியம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களிடத்தில் விசுவாசம் ஏதும் இல்லை. கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆகவே அவர்கள் ஒன்றுகூடுவதில் எச்சிறப்புமில்லை” என்ற மால்கம் முகரிட்ஜ் என்பார் கருத்துரை வழங்கியுள்ளார்.

இப்படிப்பட்ட ஐக்கியத்தை நாடி கர்த்தர் யோவான் 17ல் மன்றாடினார் என்று நாம் எண்ணுவதற்கில்லை. உண்மையான ஒரு ஐக்கியம் ஏற்படுமாயின் அதன் விளைவாக, இவ்வுலகம் முழுவதும், தேவன் அவரை அனுப்பினார் என்று நம்பவேண்டும். வெளித்தோற்றத்தின்படி, கூட்டமைப்பாக விளங்கும் எந்த நிறுவனத்தினாலும் இத்தகைய விளைவு உண்டாகவில்லையே.

“நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் என்றாயிருக்கவும்… ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கு… நான் அவர்களிலும் நீர் என்னிலம் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்” என்று ஒருமைப்பாட்டைக் கர்த்தர் வரையறுத்துக் கூறியுள்ளார். நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளத்தக்கவகையில், பிதாவும் குமாரனும் பகிர்ந்துகொள்ளும் ஒற்றுமை யாது? அவர்களது தெய்வீக ஒற்றுமையில் நமக்குப் பங்கில்லை. நன்னெறி ஒழுங்கில் அவர்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையை விசுவாசிகளாகிய நாம் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டுமென்று அவர் மன்றாடுகின்றார். அஃதாவது, நீதி, பரிசுத்தம், கிருபை, அன்பு, தூய்மை, நீடியபொறுமை, தன்னடக்கம், சாந்தம், மகிழ்ச்சி, பெருந்தன்மை என்னும் நற்குணங்களுடைய வாழ்க்கையை அது குறிக்கிறது. ஆதிக்கிறிஸ்தவர்கள் சகலத்தையும் ஒன்றாக அனுபவித்துச் சமுதாய ஒருமைப்பாட்டின் ஆவியை வெளிப்படுத்தினர்.

“இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கிடையில் காணும் ஒருமனப்பாட்டால் அவர் பிதாவினால் அனுப்பப்பட்டதை இவ்வுலகம் அறியவேண்டும் என்று அவர் செய்த விண்ணப்பம் உண்மையாகவே நிறைவேறிற்று. அதனை எருசலேம் சபையில் நடந்த நிகழ்ச்சியில் காண்கிறோம். அப்பொழுது அசாதாரண வகையில் அப்போஸ்தலரது பிரசங்கங்களில் வல்லமை வெளிப்பட்டது (அப். 2:45-47, 4:32-35).

அப்படிப்பட்ட ஐக்கியம் இந்நாளில் இருக்குமாயின், அது மிகுதியான ஆழ்ந்த விளைவை இவ்வுலகில் ஏற்படுத்தும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவர்களது ஒருமைப்பாட்டின் சாட்சி வெளிப்படுத்துமாயின், அவிசுவாசிகள் தங்களது பாவத்தைக் குறித்துக் கண்டித்துணர்ந்தும் ஜீவதண்ணீரை நாடி ஏங்குவார்கள். இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்களுக்கும், உலகீய நிலையில் வாழும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் எவ்வித வேறுபாடும் காணப்படுவதில்லை. இச்சூழ்நிலையில் அவிசுவாசிகள் மனந்திரும்ப எவ்விதத் தூண்டுதலும் இல்லையே.

மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை

மே 22

நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள். எண்ணப்படுவதற்க அவன் எம்மாத்திரம். (ஏசா.2:22)

நமது வாழ்க்கையில் தேவனுக்கு அளிக்கவேண்டிய இடத்தை நாம் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கொடுப்போமாயின் பெருத்த ஏமாற்றத்தை அடைவது உறுதி. மனிதர்களில் சிலர் என்னதான் சிறந்தவர்களாக இருப்பினும் மனிதர்களாகத்தான் இருக்கமுடியும் என்பதை விரைவில் கற்றிடுவோம். அவர்கள் மிகச் சிறந்த குணநலன்களைக் கொண்டிருப்பினும், இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களை உடையவர்களாகவே இருப்பர். ஒருவேளை இதனை வெறுக்கும் மனப்பான்மை என்று நினைக்கலாம். எனினும் அவ்வாறு அல்ல. உள்ளதை உள்ளவாறு கூறுவதாகவே இது இருக்கிறது.

எருசலேம் நகரத்தின்மீது எதிரிகள் போர்தொடுத்தபோது, அச்சமுற்ற மக்கள் விடுதலைக்காக எகிப்தை நோக்கிப்பார்த்தனர். தவறான இடத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்ததை, “இதோ, நெரிந்த நாணல் கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய். அதின் மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம். எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவரும் அப்படியே இருப்பான்” என்று கூறி ஏசாயா கண்டித்துணர்த்தினான் (ஏசா.36:6). சிலகாலம் கழித்து, அதேபோன்ற சூழ்நிலையில், “மனிதர்கள்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என எரேமியா கூறினான்.

இந்தப் பொருள் பற்றிய தெளிவான கருத்தைச் சங்கீதப்பாடகன், “மனிதனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் நம்பிக்கையாயிருப்பதே நலம்” என்றும் (சங்.118:8-9), “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான். அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என்று எழுதியுள்ளான் (சங்.146:3-4).

சில காரியங்களில் நாம் ஒருவரையொருவர் நம்பவேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை அறிந்து செயல்ப்படவேண்டும். ஓரளவு நம்பிக்கையும், மதிப்பும் இல்லாத திருமண ஒப்பந்தம் எப்படிப்பட்டதாயிருக்கும்? தொழிற்துறையில் காசோலையானது பணம் என்றே கருதப்படுகிறது. நோயைச் சரியாகக் கண்டறிந்து மருந்துகளைத் தருவார் என்றே மருத்துவரை நம்புகிறோம். கடைகளில் வாங்கும் உணவுப்பொருட்கள் அடங்கிய பொட்டலங்களில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளை நம்புகிறோம். எந்தச் சமுதாயத்திலும் பிறர்மனிதர்கள்மீது கொஞ்சமாவது நம்பிக்கையில்லாமல் வாழ்வது முடியாத ஒன்றாகும்.

ஆனால், தேவன் செய்யவேண்டியதை மனிதன் செய்வான் என்று நம்பி, கர்த்தருக்குரிய சிங்காசனத்திலிருந்து அவரை அகற்றிவிட்டு, அங்கே அந்த மனிதனை வைப்பது ஆபத்தை விளைவிக்கும். கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய நேசத்தை வேறோருவர்மீது செலுத்தினாலோ, அவர்மீது வைத்திருக்கவேண்டிய நம்பிக்கையை வேறொருவர்மீது வைத்தாலோ, அவருக்குக் கொடுக்கவேண்டிய உரிமையை வேறொருவருக்குக் கொடுத்தாலோ அந்த மனிதனால் நாம் ஏமாற்றப்படுவது நிச்சயம். அது கசப்பு நிறைந்த அனுபவமாக இருக்கும். நம்முடைய நம்பிக்கைக்கு மனிதன் தகுதிபடைத்தவன் அல்லன் என்பதை நாம் காலம் கடந்தே உணர்கிறவர்களாயிருக்கிறோம்.

நிலத்தில் விழுந்த கோதுமை மணி

மே 21
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். (யோ.12:24)

ஓர் உயர்ந்த வேண்டுதலோடு சில கிரேக்கர்கள் ஒருநாள் பிலிப்புவிடம் வந்தனர். “ஐயா, இயேசுவைக் காணவிரும்புகிறோம்” என்பதே அவர்கள் விண்ணப்பம். ஏன் அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் காணவேண்டும்? அவரை ஏதென்ஸ் பெருநகரத்திற்கு அழைத்துச் சென்று, புதிய தத்துவஞானியாக அங்கு அறிமுகப்படுத்த விழைத்தனர் போலும். ஒருவேளை தவிர்க்க இயலாது என்று தோன்றும் சிலுவை மரணத்தினின்ற அவரை அவர்கள் காக்க விரும்பியிருக்கக் கூடும்.

அறுவடையில் பயன்படுத்தவேண்டிய ஒரு தலையாய விதியை இயேசு கிறிஸ்து விடையாக மொழிகிறார். தானியத்தின் ஒரு மணி, நிலத்தில் விழுந்து சாகுமென்றால் அது மிகுந்த விளைச்சலைத் தரும். தமக்கு வரவிருக்கும் மரணத்தை அவரால் தவிர்க்கமுடியும். ஆனால், அவர் தனித்திருக்க வேண்டும். விண்ணுலக மகிமையை அவர் தனித்து அனுபவிப்பார். அவருடைய மகிமையைப் பகிர்ந்தளிக்க மீட்கப்பட்ட பாவிகள் அங்கு இருக்கமாட்டார்கள். ஆனால் அவர் இறந்தால், இரட்சிப்பின் வழி திறந்து, பலர் வானுலகின் நிலைபேறான வாழ்வை அடைந்து களிகூருவர். பலியாக அவர் சாவைத் தழுவிக்கொள்வதைத் தவிர்த்து, தனித்து சுகமாக வாழ்வதை அவரால் தெரிந்துகொள்ளமுடியாது.

இதனை அழகுற விளக்குகிறார் ராக்லேண்ட்: “வெற்றியைக் பின் விளைவாகக் கொண்ட திட்டங்களில் மிகவும் நிச்சயமானது இயேசு கிறிஸ்துவின் திட்டமேயாகும். கோதுமை மணியாக அவர் நிலத்தில் விழுந்து செத்தார். நாம் கோதுமை மணியாக மாற மறுப்போமாயின்… வாய்ப்பு மிகுந்த வாழ்க்கையை விடுவித்து நம்மை ஒப்புவிக்கவில்லையெனில், நமது குணநல மேன்மைக்கும், உடல்நலத்திற்கும், செல்வத்திற்கும் வரும் ஆபத்தை ஏற்றுக்கொள்ளாவிடில், அழைக்கப்படும்போது வீட்டையும், குடும்ப உறவுகளையும் கிறிஸ்துவுக்காக இழக்க முன்வரவில்லையெனில், நாம் தனித்திருப்போம். நமது மகிமையுள்ள கர்த்தரைப்போல கனிகொடுக்க விரும்பி நாம் கோதுமை மணியாக மாறி, நிலத்தில் விழுந்து செத்தோமென்றால் மிகுந்த பலன் அளிப்போம்.

வெகு காலத்திற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி: சில ஊழியர்கள் ஆப்பிரிக்கா சென்றனர். பல ஆண்டுகள் இடைவிடாது அயராது உழைத்தும் தேவனுக்காக பலன் ஒன்றையும் அவர்கள் காணவில்லை. நம்பிக்கையை இழந்து, கடைசியில் ஒரு மாநாடு நடத்த விரும்பினர். அங்கு தேவனுக்குமுன் ஒன்றுகூடி உபவாசித்து மன்றாட முடிவுசெய்தனர். அப்பொழுது மிஷனறி ஒருவர், “ஒரு கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகும்வரை எந்த ஆசீர்வாதத்தையும் நாம் காணப்போவதில்லை என்றே நினைக்கிறேன்” என்று கூறினார். சில நாட்களுக்குள்ளாக அந்த மிஷனறி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். பின்னர் அவர் முன்னுரைத்த அறுவடை தொடங்கியது.

நொடிப்பொழுது வேட்கை

மே 5

ஒருவேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட (எபி.12:16)

 

சில நொடிப்பொழுது சரீர வேட்கையின் மனநிறைவிற்காக வாழ்வின் மிகச்சிறந்த மேன்மைகளை விற்றுவிடக் கூடிய அவலநிலை மனிதனுக்கு அவ்வப்போது ஏற்படுவது சாத்தியமே.

ஏசா அதனையே நிறைவேற்றினான். வயல்வெளியிலிருந்து வந்த ஏசா களைப்படைந்தவனாய் பசியுற்றிருந்தான். அச்சமயத்தில் சிவப்பான பயற்றங்கூழை யாக்கோபு சமைத்துக்கொண்டிருந்தான். ஒரு கிண்ணம் “சிவப்புக் கூழ்” வேண்டுமென்று ஏசா கேட்டபோது, யாக்கோபு, “நிச்சயமாகத் தருவேன். ஆனால் நீ எனக்கு முதலில் அதற்குப் பதிலாக உன்னுடைய சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போடு” என்னும் பொருள்படப் பதில் கூறினான்.

ஒரு குடும்பத்தில் மூத்த மகனின் உயர்ந்த சிலாக்கியமே சேஷ்ட புத்திரபாகம். அந்த சிலாக்கியம் பிற்காலத்தில் குடும்பத்தின் தலைவன் என்ற சிறப்பையும், சொத்தில் இரண்டு பங்கைப் பெறுவதற்குரிய உரிமைகளையும் தரக்கூடிய மேன்மையான நிலையாகும்.

ஆனால், அத்தகைய ஒரு கட்டத்தில் சேஷ்டபுத்திரபாகம் தகுதியற்ற ஒன்று என்றே ஏசா கருதினான். “என்னைப் போன்று பட்டினியாய்க் கிடக்கிறவனுக்கு சேஷ்டபுத்திரபாகம் என்ன நன்மை பயக்கும்? என்றே அவன் எண்ணினான். தனது பசியை ஆற்றிக்கொள்வதற்காக அவன் எதையம் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் அளவிற்கு பசி அவனை ஆட்டிப்படைத்தது. ஒரு நொடிப்பொழுது வேட்கையைத் தணிக்க நிலைபேறான சிறப்பைத் தத்தம்செய்ய அவன் முன்வந்தான். ஆகவே அவன் தகாத பேரத்தில் ஈடுபட்டான்.

இதுபோன்றதொரு நாடகம் நாள்தோறும் பலருடைய வாழ்க்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக நற்சான்று மிக்கோனாய் வாழும் விசுவாசி, நல்ல குடும்பத்தின் அன்பையும், கிறிஸ்தவ ஐக்கியத்தின் நன்மதிப்பையும் உடையவனாக இருக்கிறான். அவன் பேசுகிறபோது, அவனுடைய சொற்கள் ஆவிக்குரிய அதிகாரம் உடையதாயிருக்கின்றன. அவனுடைய நற்பணி தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறது. விசுவாசிகளுக்கோர் அருமையான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறான்.

ஆனால், கடுமையான வெளி அவனுக்குள் கணநேரத்தில் உண்டாகிறது. காமவெறியில் சிக்குண்டவன் அந்த வெறியைத் தீர்க்காவிட்டால், தான் அழிந்துவிடுவோம் என்று எண்ணுகிறான். இந்தச் சரீர இச்சையைத் தீர்ப்பதைதத் தவிர வேறொன்றும் அவனுக்கு முக்கியமானதாகக் காணப்படுவதில்லை. விவேகமான சிந்தனை அவனைவிட்டு அகன்று போய்விடுகிறது. இந்த முறைகேடான உறவுக்காக எல்லாவற்றையும் இழந்துவிடத் துடிக்கிறான்.

ஆகவே அவன் மதியீனத்தில் பாய்ந்துவிழுகிறான். கணநேர எழுச்சிக்காக, தேவனுடைய புகழ்ச்சியையும், தன் சொந்த சாட்சியையும், குடும்பத்தின் மேன்மையையும், நண்பர்களின் நன்மதிப்பையும், அப்பழுக்கற்ற கிறிஸ்தவ குணநலன்களையும் விட்டொழிகிறான். “நீதியின்மேல் கொண்ட தாகத்தை மறந்துவிடுகிறான், தெய்வீக ஐக்கியத்தின் மகிழ்ச்சியை உதறி எறிகிறான், ஆத்துமாவை இருளடையச் செய்கிறான். வளம்பெற்ற வாழ்வை இழந்துபோகிறான். அவப்பேற்றின் பெருமழை அவனுடைய எஞ்சிய காலமெல்லாம் அவன் தலைமீது பொழிய இடங்கொடுக்கிறான். எள்ளி நகையாடுவோரின் இழிச்சொல்லிற்கு அவனுடைய பெயரும், அவனுடைய விசுவாசமும் ஆளாக இடங்கொடுக்கிறான்” என்று திருவாளர் அலெக்ஸாண்டர் மாக்லோன் கூறியிருப்பது எத்தனை, பொருத்தமாயிருக்கிறது.

இதனையே உன்ன வேதம், “ஒரு கலயம் கூழுக்காகத் தனது சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுவிட்டான்” என இடித்துரைக்கிறது.

மாம்சீக வாழ்க்கை

மே 3

தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான் (கலா.6:8)

எவராக இருப்பினும் பாவத்தைச் செய்துவிட்டுத் தப்பிக்க முடியாது. பாவத்தினால் உண்டாகும் விளைவுகளிலிருந்து தப்பிகஇக முடியாது என்பது மட்டுமன்று. அவை கசப்பு மிகுந்தவை. ஊறுவிளைவிக்காத புழூனையைப்போன்று முதலில் தோற்றமளிக்கும் பாவம், கடைசியில் இரக்கமற்ற சிங்கத்தைப் பொன்று செயல்ப்பட்டு எல்லாவற்றையும் தின்றுவிடும்.

பாவத்தின் மாயக்கவர்ச்சி அதிக விளம்பரத்தைப் பெறுகிறது. அதனுடைய மறுபக்கத்தைக் குறித்து நாம் அதிகமாகக் கேள்விப்படுவதில்லை. தங்களுடைய வீழ்ச்சியைக் குறித்தும் அதற்குப்பின் ஏற்படும் மனவேதனையைப் பற்றியும் பலர் எழுதிவைப்பதில்லை.

மிகவும் அறிவுடைய அயர்லாந்து நாட்டைச் சார்ந்த எழுத்தாளர்களில் ஒருவர் தனது வீழ்ச்சியைக் குறித்து எழுதிவைத்துள்ளார். இயற்கைக்கு மாறான வகையில் பாவத்தில் பொழுதுபோக்குகிறவராக வாழ்ந்தார். ஒன்றன்பின் ஒன்றாகப் பாவத்தைச் செய்த அவர் கடைசியில் நீதிமன்ற வழக்குகளில் சிக்குண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வேளையில் அவர் எழுதியதாவது:

“தேவர்கள் யாவற்றையும் எனக்குத் தந்தனர். அறிவுமிக்கவனாக இருந்தேன், பேரும் புகழும் அடைந்தேன், சமுதாயத்தில் உயர்ந்தவர் என்று அறியப்பட்டேன், மேதையாக விளங்கினேன், அறிவுப்பெருக்கினால் துணிவுடன் செயல்பட்டேன். கலையைத் தத்துவமாகவும், தத்துவத்தைக் கலையாகவும் மாற்றினேன். மனிதர்களுடைய மனதை மாற்றினேன். பொருட்களின் நிறத்தை மாற்றினேன். நான் சொன்னதைக் கேட்டவர்கள், செய்ததைக் கண்டவர்கள் வியப்படையாது போனதில்லை. கலையைப் பிரதான உண்மையென்றும், வாழ்க்கையைப் புனைகதையென்றும் விரித்துரைத்தேன். என்னுடைய நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் கற்பனை வளத்தை தட்டியெழுப்பி, என்னைச் சுற்றிலும் கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் உருவாக்கினேன். வாழ்வின் எல்லா முறைமைகளுக்கும் ஒரு பெயர்சூட்டி ஒருங்கிணைத்தேன். எல்லாப் பொருட்களையும் சாதுரிய வாசகத்தால் விளக்கினேன்.

“இவற்றை மாறுபாடான செயல்களைச் செய்வதை என் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தேன். அறிவற்றதும் சிற்றினபச் சீரழிவுமான செய்கைகளில் கவர்ந்திழுக்கப்பட்டு நீண்ட காலமாக நிலையிழந்து திரிந்தேன். வீணான செயல்களைச் செய்பவனாகவும், பகட்டாய் ஆடை அணிபவனாகவும், நவநாகரீகத்தை நாடுகிறவனாகவும் விளங்கினேன். குறுகிய மனப்பான்மையோடும், இழிந்த உள்ளத்தோடும் இருந்தேன். என்னுடைய பேரறிவை வீணாக்கினேன். இளமையின் இன்பம் ஆர்வமிக்க இன்பத்தைத் தூண்டிவிட்டது. இன்பத்தின் உச்சியில் சென்று அதில் களைத்துப்போன நான், புதிய வகையில் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற கீழ்நிலைக்குச் சென்றேன். சிந்தனையில் ஏற்பட்ட முரண்பாடுகள் மகிழ்ச்சியை அளித்தன. தவறான செய்கைகள் எனது வெறித்தனத்தைத் தூண்டிவிட்டன. கடைசியில் எனது விருப்பங்கள் பிணியாகவும் மதியீனமாகவும் மாறின. மற்றவர்கள் எனது இன்பத்திற்காக இரையாவதைக் குறித்துக் கவலைகொள்ளவில்லை. எது எனக்கு இன்பமாகத் தோன்றியதோ அதையே தொடர்ந்து சென்றேன். மனிதர்கள் மறைவிடங்களில் செய்கிற தகாத செயல்களுக்காக ஒவ்வொருவரும் ஒருநாள் வீட்டின் உச்சியில் நின்று அழவேண்டியவராய் உள்ளனர் என்பதை மறந்துபோனேன். ஒவ்வொரு நாளும் ஒரு மனிதன் செய்கிற செயல்கள் அவனுடைய குணத்தை உருவாக்குகின்றன அல்லது உருவழிக்கின்றன என்பதை உணராதிருந்தேன். என்னுடைய வாழ்க்கை அவமானச் சின்னமாக முடிவடைந்து போயிற்று.”

தனது அறிக்கையை ஒரு கட்டுரையில் எழுதி அதற்கு ” ஆழங்களிலிருந்து” என்று அவர் பெயர் சூட்டியிருப்பது எத்தனை பொருத்தமாயிருக்கிறது.