September

பாவத்தை வெளிப்படுத்துதல்

2024 செப்டம்பர் 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,19 முதல் 20 வரை)

  • September 18
❚❚

“இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்” (வசனம் 18).

ஆகாப் எலியாவின்மீது கூறிய குற்றச்சாட்டு உண்மையானதா? அல்லது எலியா ஆகாப்மீது கூறிய குற்றச்சாட்டு உண்மையானதா? இவற்றில் எது சரி என்பதை அரசனுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்திக்காட்டவே கர்மேல் மலைக்கு பாகாலின் தீர்க்கதரிசிகளை எலியா போட்டிக்கு அழைத்த செயலாகும். இந்த ஏற்பாட்டை எலியா தானாக முன்னெடுக்கவில்லை, மாறாக, கர்த்தர் அவனுக்குக் கொடுத்த வெளிப்பாட்டின்படியே அழைத்தான். அவன், “நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்” (வசனம் 36) என்னும் வார்த்தைகளின் வாயிலாக அதை உறுதிப்படுத்தினான்.

 

சிறிய காரியமோ அல்லது பெரிய காரியமோ எதுவாயினும் கர்த்தருடைய வார்த்தையின்படியே நாமும் செய்யப்பழகிக்கொள்ள வேண்டும். கர்த்தர் கூறாததையும், அவர் வெளிப்படுத்தாததையும் நமது பெருமைக்கும் பெயருக்குமாக பெரிய அளவில் செய்ய முற்படுவதாலேயே அவை பாதியிலேயும், அரைகுறையுடனும் முடிக்க முடியாமலும் நின்றுவிடுகின்றன. இத்தகைய காரியங்கள் ஒருபோதும் நம்முடைய தேவனுக்கு மகிமையைக் கொண்டுவராது. கர்த்தருடைய வார்த்தையின்படி தொடங்கப்படுகிற எந்தத் திட்டங்களும் ஊழியங்களும் வெற்றிகரமாக நடைபெறும். கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவராத எதுவும் வெற்றிகரமான ஊழியங்கள் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகாபின் தவறை சுட்டிக்காட்டுவது மட்டுமின்றி, அவனுக்கு உண்மையை உணரச் செய்து, அவனை ஒரு தீர்மானத்திற்கு நேராக வழிநடத்தும்படி ஆலோசனை கூறுவதற்கும் இந்த ஏற்பாட்டை எலியா செய்தான். மேலும் அவனுக்கு இதுவரையிலும் மனந்திரும்புவதற்குக் கொடுக்கப்பட்ட காலம் அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்பொழுது இஸ்ரவேல் மக்களை எல்லாம் கூட்டி ஆகாபின் பாவங்களையும் அவனுடைய பொல்லாத காரியங்களை பொதுவெளியில் வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாதவர்களையும், சபைக்கு இடறலாகப் பாவஞ்செய்தவர்களையும் எல்லாருக்கும் முன்பாக கடிந்துகொள்ள வேண்டும் என்று புதிய ஏற்பாடு நமக்குப் போதிக்கிறது (கலாத்தியர் 2,14; 1 தீமோத்தேயு 5,20).

பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி எலியா கட்டளையிட்டான். கேள்விக்கு இடமில்லாதபடிக்கு இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமமானதும், நியாயமானதுமான வாய்ப்பை அளிக்கும்படி இப்படிச் செய்தான். இன்றைக்கு கிறிஸ்தவத்திற்கு எதிரான பகைவர்கள் கிறிஸ்தவர்களைக் குற்றம் சாட்டும்போது, எலியாவைப் போலவே நாமும் அவர்களைப் போட்டிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இத்தகைய தருணங்களில் எலியாவின் ஆவியும் பலமும் உடையவர்களாய் பயப்படாமல் தைரியமாய்க் காரியங்களை எதிர்கொள்ள வேண்டும் (லூக்கா 1,17), மற்ற காரியங்களைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார்.