October

இளைப்பாறுதல் தரும் தேவன்

2024 அக்டோபர் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,6 முதல் 7 வரை)

  • October 21
❚❚

“அப்பொழுது அவன் (எலியா), புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்” (வசனம் 6).

தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்ததையும் எலியா கண்டு, அவற்றைப் புசித்துக் குடித்துத் திரும்பவும் படுத்துக் கொண்டான். ஒரு தேவனுடைய மனிதனின் யதார்த்தமான செயல்களை எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி இருக்கிற வண்ணமாக வேதாகமம் பதிவு செய்திருக்கிறதைக் காண்கிறோம். வேதம் உண்மையை மட்டுமே பதிவு செய்து நமக்கு வழங்கியிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் இதுவாகும். தேவ ஆவியானவரின் துணையின்றி ஒரு நபரால் எழுதப்பட்டிருக்குமானால் எலியாவின் நற்குணங்கள் மட்டுமே நமக்கு வழங்கப்பட்டிருக்கும். இது ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டதாகையால்தான், எவ்வித மிகைப்படுத்துதலும் இல்லாத தேவனுடைய வரலாற்றை நாம் படித்துக்கொண்டிருக்கிறோம்.

நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, சபைக் கூடுகைகளிலோ அல்லது ஊழியங்களிலோ பங்குபெறாமல் சோம்பேறித்தனமாக எத்தனையே முறைகள் நாம் படுத்து உறங்கியிருக்கிறோம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறதில்லையா? யாக்கோபு தன் நிருபத்தில் எலியாவைக் குறித்து, “நம்மைப் போல பாடுள்ள மனிதன்” என்று சொல்லியிருப்பது எத்தனை உண்மையான வார்த்தைகள். நம்முடைய தேவன் நம்முடைய பலவீனங்களைக் குறித்து, இகழ்ச்சியாகப் பார்க்காதவராயிருக்கிறார். இத்தகைய கிருபையும் இரக்கமும் நிறைந்த தேவனை நாம் பெற்றிருப்பதற்காக நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருப்போம்.

எலியா, தன்னைத் தட்டி எழுப்பியவரைத் தேடியதாகவோ, உணவு எங்கிருந்து வந்தது என்று எண்ணியதாகவோ ஒரு குறிப்பையும் காணோம். தன் தலைமாட்டில் வைக்கப்பட்ட உணவுக்காக எவ்வித நன்றியையும் அவன் தேவனுக்குச் செலுத்தவில்லை. தேவனோடு ஐக்கியத்தில் இல்லாமல், அவரைவிட்டுத் தூரமாயிருக்கிற எந்த மனிதனும் செய்யக்கூடிய காரியங்களே இவை. எவ்வளவு பெரிய அற்புதங்களைச் செய்திருந்தாலும், வேதத்தைக் குறித்த எவ்வளவு அறிவைப் பெற்றிருந்தாலும், மனிதர்களால் இவர் எவ்வளவு பெரிய நபர் என்று போற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் தேவனோடு ஐக்கியத்தில் இல்லையென்றால் தனிமையில் இருக்கும்போது இவ்வாறுதான் நடந்துகொள்வார்கள். தேவன் நம்மை மீண்டும் ஐக்கியத்தில் கொண்டுவருவதற்காகவும் புதுப்பிப்பதற்காகவும் ஏறெடுக்கிற முயற்சிகளை இவ்விதமாகத்தான் பார்க்க நேரிடும். ஆகவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.

எலியா மீண்டும் படுத்துக்கொண்டான். தேவன் அவனுக்கு மீண்டும் தூக்கத்தை அருளினார். அவனுக்கு இன்னமும் தூக்கமும் ஓய்வும் தேவை என்பதை அவர் உணர்ந்தார். எலியாவின் தவறான பயத்தையும், சோர்வையும் போக்குவதற்காக தேவன் இன்னும் சில மணி நேரங்கள் காத்திருந்தார். ஆகவே மீண்டும் அவனுக்கு உணவளித்தார். ஆவிக்கு உணவளிக்க வேண்டும், அவ்வாறே உடலுக்கும் உணவளிக்க வேண்டும். இந்த இரண்டு காரியங்களையும் நாம் மறந்துவிட வேண்டாம். உணவும் ஓய்வும் சிலருக்கு அற்பமான விஷயங்களாகத் தோன்றலாம், ஆனால் இவை நம்மைப் போன்ற பாடுள்ள மனிதர்களுக்கும், மனச்சோர்வடைந்த தேவனுடைய ஊழியருக்கும் உதவி செய்யக்கூடிய முதன்மையான காரியங்களாக இருக்கலாம். ஆகவேதான், “பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” (ரோமர் 12,13) என்று புதிய ஏற்பாடு நமக்குப் போதிக்கிறது. இந்த உண்மைக்கு ஏற்ப நாமும் நடந்துகொள்வோமாக.