2024 மே 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,1)
- May 15
“இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்” (வசனம் 1).
இந்த அதிகாரத்தின் முதல் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஆண்டு விவரங்கள் நமக்குப் பல்வேறு விதமான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. வேதாகமம் ஒரு புனை கதையோ அல்லது புராணக் கதையோ அன்று. அது வரலாற்றை இயக்குபவரின் நிஜமான கதைப் புத்தகம். அதில் சொல்லப்பட்டவை ஒவ்வொன்றும் உண்மையாக நடந்தவை. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் ஆண்டில் சாலொமோன் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான். இந்தக் குறிப்பு இஸ்ரவேலர் புத்திரர் எகிப்துக்கும் பார்வோனுக்கும் அடிமைகளாயிருந்தார்கள் என்பதையும், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, வாக்குத்தத்த நாடாகிய கானானில் குடியேறினார்கள் என்பதையும் நமக்கு அறியத்தருகிறது. நாம் எகிப்து என்னும் உலகத்தில் குடியிருந்தாலும், இது நமது சொந்த தேசம் அல்லவென்றும், தேவன் நமக்கு வைத்திருக்கிற செழிப்புள்ள நாட்டிற்குப் போகவிருக்கிறோம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இதைக் குறித்துப் பவுல், “நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது” என்று பிலிப்பியர் நிருபத்தில் சொல்லியிருக்கிறார்.
இந்த நானூற்று எண்பது ஆண்டுகளாக இஸ்ரவேலர் எவ்வாறு கடவுளைத் தொழுதுகொண்டார்கள்? இந்த நாட்களில் அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்தின் வாயிலாகக் கர்த்தருக்குப் பலி செலுத்தி அவரைத் தொழுது கொண்டார்கள் என்பதையும் இது நமக்குத் தெரிவிக்கிறது. மேலும் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் ஆலயம் இல்லாமல் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பதையும் நமக்கு அறிவிக்கிறது. ஒரே தேவன், ஆசரிப்புக்கூடாரத்தின் வாயிலாகவும் தொழுதுகொள்ளப்பட்டார், ஆலயத்தின் வாயிலாகவும் தொழுதுகொள்ளப்படப்போகிறார். பிதாவை எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வரப்போகிறது என்று ஆண்டவர் சமாரியப் பெண்ணிடம் கூறினார். அது இப்பொழுது உண்மையாக நடந்துகொண்டிருக்கிறது. நாம் இப்பொழுது சபையாகிய தேவனுடைய ஆலயத்தின் வாயிலாக எல்லா இடங்களிலும் அவரைத் தொழுதுகொண்டு வருகிறோம்.
இத்தனை ஆண்டு காலமாக ஆலயம் கட்ட வேண்டும் என்னும் உந்துதல் தாவீதைத் தவிர வேறு யாருக்கும் எழவில்லை. அல்லது சாமுவேல் போன்ற தேவ மனிதர்களிடம் ஆண்டவர் அதைக் குறித்துப் பேசவில்லை. இதற்கான பதில் நமக்கு நேரடியாகத் தெரியாது. ஆனால் இறையாண்மையுள்ள கர்த்தர் தனக்கென்று ஒரு காலத்தை வைத்திருக்கிறார், அவர் தன்னுடைய திட்டத்தின்படியும் காலத்தின்படியும் காரியங்களை நடப்பிக்கிறார் என்பது மட்டும் தெரியும். கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற பிறகு, இந்த உலகத்தில் திருச்சபை ஆரம்பிக்கப்பட்டாலும், அதைக் குறித்த சிந்தை உலகத்தோற்றமுதலே தேவனுக்கு இருந்தது என்று பவுல் கூறுகிறார் (எபேசியர் 1,4). ஆசரிப்புக் கூடாரத்தின் வாயிலாகவும், ஆலயத்தின் வாயிலாகவும் பிரசன்னமளித்த தேவன், இந்தக் கடைசிக் காலத்தில் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் கூடியிருக்கிற சபையிலே அவர் பிரசன்னமாயிருக்கிறார். நாம் ஒவ்வொரு முறை கூடிவரும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தின் மையத்திலே கூடிவருகிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். பிதாவே, நீர் எங்கள் நடுவில் பிரசன்னராயிருக்கிறதற்காக நன்றி, இதிலே நாங்கள் களிகூர்ந்து உம்மைத் தொழுதுகொள்ள உதவி செய்யும், ஆமென்.