2024 மே 9 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 4,1 முதல் 20 வரை)
- May 9
“ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாயிருந்தான்” (வசனம் 1).
சாலொமோனின் அரசாட்சி ஸ்திரப்பட்டது. அவனுடைய ஆட்சிக் காலத்தில் செல்வமும் செழிப்பும் பெருகி, அமைதியும், சமாதானமும் உண்டாகியது. அவன் ஆண்டவர் அருளிய ஞானத்தால் ஆட்சிபுரிந்தான். இந்த ஆட்சி இஸ்ரவேல் நாட்டுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தது. போரற்ற அமைதியும், அநீதியற்ற ராஜ்யமும் ஸ்தாபிக்கப்பட்டது. பல்வேறு தீமைகளுக்கும், எண்ணற்ற மனித உயிர்களைப் பழிவாங்கிய போர்களுக்கும் காரணமாக இருக்கிற சாத்தான் ஆயிரமாண்டுகள் கட்டப்பட்டிருக்கும்போது, இந்தப் பூமி இருக்கப் போகிற சூழ்நிலையை சாலொமோனின் ஆட்சி பிரதிபலிக்கிறது. சாலொமோனிலும் பெரியவர் அப்பொழுது ராஜாவாயிருப்பார், அப்பொழுது மெய்யான சமாதானமும், மகிழ்ச்சியும் வெளிப்படும்.
இந்த அதிகாரத்தின் முதல் ஆறு வசனங்கள் சாலொமோனின் அமைச்சரவையின் மந்திரிகளைப் பற்றியும், அடுத்துள்ள வசனங்கள் இஸ்ரவேல் நாட்டைப் பன்னிரண்டு மாநிலங்களாகப் பிரித்து அங்கு பதவி வகிக்கிற ஆளுநர்களைப் பற்றியும் பேசுகிறது. இவர்கள் உணவுப் பொருட்களை சேகரித்து அனுப்பும் அதிகாரிகளாயிருந்தார்கள். தங்களுக்கு ராஜா வேண்டும் என்று இஸ்ரவேலர் முதலாவது கேட்டபோது, தீர்க்கதரிசி சாமுவேல் கூறியது நிறைவேறியது (1 சாமுவேல் 8,10 முதல் 18). தாவீது தனக்கான சேவகர்களையும், வரிவசூலிக்கும் அதிகாரிகளையும் நியமித்தான். மக்கள் புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள் (வசனம் 20). மக்கள் எப்பொழுதெல்லாம் செழிப்போடு வாழ்ந்தார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் கர்த்தரை மறந்தார்கள் என்பதே வரலாறு. உலகப் பொருட்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் அடையாளம் அல்ல. ஆகவே செழிப்பான நாட்களில் கர்த்தரை விட்டு விலகிச் செல்லாதிருக்க ஜெபித்துக்கொள்வோம்.
பன்னிரண்டு ஆளுநர்களும் தங்களுடைய வரிசைப்படி சாலொமோனுக்குத் தேவையான பொருட்களை ஒவ்வொரு மாதமும் கொண்டு வந்து சேர்த்தார்கள். இது சுழற்சி முறை பணி. ஒருவர் மீது எல்லாப் பாரங்களும் எல்லா நாளும் இராதபடிக்கு செய்யப்பட்ட சாலொமோனின் ஏற்பாடு இது. கிறிஸ்துவே சபையின் தலைவராயிருந்தாலும், அதைப் பராமரிப்பதற்கும், வழிநடத்துவதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர்களை அருளியிருக்கிறார். ஒருவர்மீதே அனைத்துப் பாரங்களும் சேராதபடிக்கு கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட பகிர்ந்தளிக்கும் முறையே சபையின் மூப்பர்கள் பொறுப்பாகும். நாம் சரியான விதத்தில் இதை நடைமுறைப்படுத்த வேண்டியது அந்தந்த உள்ளூர் சபையின் பொறுப்பாகும்.
ஏற்ற வேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான் (மத்தேயு 24,45 முதல் 46). மூப்பர்கள், உதவிக்காரர்கள், சுவிசேஷகர்கள் மட்டுமின்றி, சபையின் ஒவ்வொரு விசுவாசிகளும் உக்கிராணக்காரர்களாக இருக்கிறார்கள். நம்முடைய எஜமானராகிய கிறிஸ்து வரும்போது, வழங்கப்பட்ட பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுவதிலேயே நமது சிறப்பும் அடங்கியிருக்கிறது. ஆகவே உண்மையுள்ள வேலைக்காரர்களாக எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்வோம். பிதாவே, நாங்கள் நன்றாய் இருக்கும்போது உம்மை மறந்துவிடாமல் இருக்கவும், எங்களுடைய பொறுப்பை சரியாய் நிறைவேற்றவும் உதவியருளும், ஆமென்.