June

விசுவாசித்து அறிந்துகொள்ளுதல்

2024 ஜூன் 23 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:4-5)

“சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,… கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,” (வச. 4,5).

கர்த்தர் சாலொமோனுக்கு அருளிய ஞானத்தையும், அந்த ஞானத்தால் விளைந்த சகல திறமையான காரியங்களையும், அவனுடைய ஐசுவரியத்தையும் சேபாவின் ராஜஸ்திரீ கண்டபோது ஆச்சரியத்தால் நிறைந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பிரமை கொண்டவளைப் போல ஆனாள். இப்படியிருக்க சாலொமோனுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்த கர்த்தருடைய ஞானம் எவ்வாறு இருக்கும்? “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” (ரோமர் 11:33) என்று பவுல் வியந்து போற்றுகிறார்.

சாலொமோனிலும் பெரியவராகிய நம்முடைய ஆண்டவர் இந்தப் பூமியில் ஊழியம் செய்த நாட்களில், அவருடைய கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்தும், அவருடைய அதிகாரமுள்ள போதனைகளைக் குறித்தும், அவருடைய அற்புதங்களைக் குறித்தும், கேள்வி கேட்டவர்களுக்கு அவர் சொன்ன பதில்களைக் குறித்தும் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்று நற்செய்தி நூல்களில் பலமுறை வாசிக்கிறோம். “அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்” (லூக்கா 20:26) என்று வரலாற்று ஆசிரியரும் மருத்துவருமாகிய லூக்கா மக்களின் பிரமிப்பை விவரிக்கிறார்.

“பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” (லூக்கா 10:21) என்று தம்முடைய எளிமையான சீடர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றைக் கண்டு இயேசு ஆவியிலே களிகூர்ந்தார். சாலொமோனைப் போல நாம் ஞானிகளோ, கல்விமான்களோ அல்லர். கிறிஸ்துவை விசுவாசித்ததினிமித்தமாக மறுபிறப்படைந்த பாலகர்கள். ஏதுமறியாத பாலகர்களாகிய நாம் தேவகுமாரன் மூலமாக பிதாவை அறிந்துகொள்ளும்படியாக பெரிய சிலாக்கியம் பெற்றிருக்கிறோம்.

இந்த உலகத்தில் எத்தனையோ அறிவாளிகளும் அறிஞர் பெருமக்களும், பல்துறை வித்தகர்களும் இருக்கிறார்கள். ஆயினும் இவர்களில் பெரும்பான்மையோர் தங்களுடைய அறிவின் பெருமையினால் தேவனை அறிந்துகொள்ளும் சிலாக்கியத்தை இழந்துவிட்டார்கள். கிரேக்கர்களைப் போல ஞானத்தைத் தேடி கிறிஸ்துவை விட்டுவிட்டார்கள். இவர்கள் இந்தப் பிரபஞ்சத்துப் பிரபுக்கள். கிறிஸ்துவை அறியமுடியாதபடி இவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டுவிட்டன. எளிய விசுவாசிகளாகிய நமக்கு அருளப்பட்ட கடவுளைக் குறித்த அறிவைச் சிந்தித்துப் பார்ப்போம். ஆகவே நம்முடைய எஜமானரும், கர்த்தருமாகிய கிறிஸ்துவுடன் இணைந்து நாமும் பிதாவை ஸ்தோத்தரிப்போம். சிறு குழந்தைகளைப் போல தேவராஜ்யத்தை விசுவாசிப்பவர்களாக மட்டுமின்றி, அவருடைய வசனங்களுக்கு கீழ்ப்படிகிற பிள்ளைகளாகவும் இருப்போம்.

சேபாவின் ராஜஸ்திரீ எருசலேமுக்கு வந்து, சாலொமோனின் ஞானத்தையும், அவனுடைய அரண்மனை, ஊழியர்கள், உணவு, மண்டபம் ஆகியவற்றைக் கண்டு பிரமிப்படைந்தாள். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு” (யோவான் 5:24) என்று ஆண்டவர் கூறினார். தோமாவைப் போல கண்டால் மட்டுமே விசுவாசிப்பேன் என்று கூறாதபடி, காணாதிருந்தும் அவரை விசுவாசித்து பாக்கியம் பெற்றவர்களாக மாறுவோம். பிதாவே, உம்முடைய குமாரன் மூலமாக உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தியதற்காக நன்றி, ஆமென்.