June

தாழ்மையின் மேன்மை

2024 ஜூன் 12 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:54)

“அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து” (வச. 54).

சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து தன்னுடைய ஜெபத்தைத் தொடங்கினான் (வசனம் 22). ஆனால் அவன் தன்னுடைய நீண்ட ஜெபத்தை முடிக்கும்போது, “முழங்கால்படியிட்டிருந்ததை விட்டெழுந்தான்” (வசனம் 54) என்று வாசிக்கிறோம். தம்முடைய மக்களுக்காக ஏறெடுத்த ஜெபம் கேட்கப்படும்படியாய் ராஜாவாகிய சாலொமோன் எவ்வளவாய் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினான் என்பதை எண்ணிப்பார்ப்போம்.

நாம் எத்தகைய சரீர நிலையில் இருந்து ஜெபித்தாலும் கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார். முழங்கால்படியிட்டு ஜெபித்தால்தான் பதில் கிடைக்கும் என்று வேதத்தில் எங்கும் எழுதப்படவில்லை. ஆயினும் அவருடைய பரிசுத்தவான்கள் இவ்விதமாக தங்களைத் தாழ்த்தி ஜெபம் செய்ததை ஆங்காங்கே வாசிக்கிறோம். பழைய ஏற்பாட்டில் எஸ்றாவும் (எஸ்ரா 9:5), தானியேலும் (தானி. 6:10), புதிய ஏற்பாட்டில் பேதுருவும் (அப். 9:40), ஸ்தேவானும் (அப். 7:60), பவுலும் (அப். 20:36, எபே. 3:14), திருச்சபையின் தொடக்க கால விசுவாசிகளும் (அப். 21:5) முழங்கால்படியிட்டு கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டார்கள். பொதுமக்கள் முன்னிலையிலும், இறக்கும் தருவாயிலும், சிறைச்சாலையில் முதிர் வயதிலும் இவர்கள் முழங்கால்படியிட்டு ஜெபித்தது, நம்மை உற்சாகம் அடையச் செய்கிற காரியம் அல்லவா?

திரித்துவத்தில் மூன்றாம் நபராகிய நம்முடைய ஆண்டவரும், தம்மைத் தாழ்த்தி, தம்முடைய நேசப் பிதாவை நோக்கி, முழங்கால்படியிட்டு ஜெபித்தார் (லூக்கா 22:41) என்பது முக்கியமான காரியம். எப்பொழுதும் கர்த்தரைச் சார்ந்து வாழ வேண்டிய அவசியத்தில் இருக்கிற நாம் கர்த்தருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு நம்மைத் தாழ்த்தி ஜெபிக்க வேண்டியது எத்தனை அவசியம் என்பதை இது வலியுறுத்துகிறது அல்லவா? தற்கால நவீன உலகில், முழங்கால்படியிடுவது அநாகரிகமாகப் பார்க்கப்படுவது நமது ஆவிக்குரிய வீழ்ச்சியின் அடையாளமேயன்றி வேறன்று. ஆகவே நம்மால் இயலும்பட்சத்தில், நம்முடைய சரீரம் ஒத்துழைத்தால் “நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள்” (சங். 95:6) என்னும் சங்கீதக்காரனின் அழைப்புக்கு இணங்கி முழங்கால்படியிட்டு ஆராதிக்கவும் ஜெபிக்கவும் செய்வோம்.

இந்தியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் வாழுகிற விசுவாசிகளுக்கு முழங்கால்படியிட்டுச் ஜெபிப்பது அந்நியமான காரியமன்று. ஆனால் திருச்சபைகளில் இடநெருக்கடி, அதிகப்படியான மக்கள் கூட்டம், சுற்றியிருக்கிற மக்களின் பார்வை ஆகியவற்றை முன்னிட்டு இது வழக்கொழிந்து வருகிற ஒரு பழக்கமாக மாறிவிட்டது. திருவாளர் ஜார்ஜ் முல்லர் இருநூறு தடவைகள் வேதாகமத்தை வாசித்திருக்கிறார். அவற்றில் நூற்றிருபது முறை முழங்காலில் நின்று வாசித்தார் என்பது அவருடைய வரலாற்றைப் படிக்கும்போது தெரிகிற செய்தி. முழங்கால்படியிடுதல் நம்முடைய தாழ்மையைத் தெரிவிக்கும் ஒரு உடல் மொழி. நாமும் நம்முடைய பிள்ளைகளும் இத்தகைய ஒரு நல்ல பழக்கத்தை கடைப்பிடிப்பதற்கு உரிய காரியங்களைச் செய்வோமாக. பிதாவே, நீர் மகா பெரிய கடவுள், உமக்கு முன்பாக நாங்கள் எம்மாத்திரம்? உம்முடைய சமூகத்தில் வரும்பொழுதெல்லாம், மனத்தாழ்மையோடு மட்டுமின்றி, சரீரத்தாழ்மையோடு வருகிறதற்கு உதவி செய்யும், ஆமென்.