June

வேத அறிவின் மேன்மை

2024 ஜூன் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,12 முதல் 13 வரை)

  • June 2
❚❚

“தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன்” (வசனம் 13).

கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பியதைக் கண்ட சாலொமோன், அவர் ஒரு சிறப்பான வழியில் இந்த ஆலயத்தில் தங்குகிறார் என்பதை உணர்ந்து கொண்டான். இவ்வாறு கூறுவதற்கு முந்தையை காலத்தில் நிகழ்ந்த அவருடைய பிரசன்னத்தின் வெளிப்பாட்டைக் குறித்த அறிவு முக்கியமானது. ஆகவேதான், அவனால் “காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்” (வசனம் 12) அவனால் முந்தைய நிகழ்களை நினைவுகூர்ந்து கூறமுடிந்தது. குறிப்பாக, “இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்” (சங்கீதம் 18,11) என்னும் தனது தந்தை தாவீதின் வார்த்தைகளை அவன் கற்றுக்கொண்டதாலே இவ்விதமாகக் கூறினான். ஆகவே புதிய ஏற்பாட்டுத் திருச்சபையில் எந்தவொரு புது அனுபவமும் காணப்பட்டாலும், அவற்றை வேத வசனத்தோடும், முந்தைய வரலாற்று நிகழ்வுகளோடும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதன் முதலாக திருச்சபை உருவானபோது, “அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று” (அப்போஸ்தலர் 2,2). மேலும் ஆவியானவரின் வல்லமையினால் நிரப்பப்பட்டு, வெவ்வேறு பாஷைகளில் விசுவாசிகள் பேசத் தொடங்கினர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம். ஆனால் பேதுரு இந்நிகழ்வை யோவேலின் தீர்க்கதரிசனத்தோடு பொருத்திப் பார்த்தான் (அப்போஸ்தலர் 2,16 முதல் 18). ஆகவே வேதத்தைக் குறித்த பரந்த அறிவு நமக்கு இருந்தால் மட்டுமே,   ஒரு புதிய அனுபவத்தையும் பழைய காரியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, இது வேதத்தின்படியானதா இல்லையா என்பதை நிதானித்து அறிந்துகொள்ள முடியும். இல்லையேல் பலவித பொய்யான, வேதத்திற்கு புறம்பான அனுபவங்களுக்கு சபையில் இடம் கொடுக்க நேரிடும். இன்றைய நாட்களில் உலாவருகிற பெரும்பாலான தவறான அனுபவங்களுக்கு வேதவசனங்களைக் குறித்த அறிவின் குறைபாடே ஆகும்.

சாலொமோன், “தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி” மக்களை ஆசீர்வதித்தான்.  யாக்கோபு பதான் அராமுக்குச் செல்லும்வழியில் இரவில் தூங்கிய இடத்தில் கர்த்தர் அவனுக்கு தரிசனமானார். இந்த இடத்தில் கர்த்தர் இருக்கிறார் என்பதை அறியாதிருந்தேனே என்று சொல்லி, பின்பு அந்த இடத்திற்கு தேவனுடைய வீடு என்னும் பொருளில் பெத்தேல் என்று பெயரிட்டான் (காண்க: ஆதியாகமம் 28,11 முதல் 19). ஆகவே தேவனுடைய வீடு என்பது அவர் வாசம்பண்ணுகிற ஸ்தலம் மட்டுமின்றி, அவர் தன்னை வெளிப்படுத்துகிற இடமாகவும், மக்களைச் சந்திக்கிற இடமாகவும், அவர் பேசுகிற இடமாகவும் இருக்கிறது. இன்றைய காலத்தில் தேவனுடைய வீடாயிருக்கிற திருச்சபையில் கர்த்தர் தங்கியிருக்கிறாரா? அவரது பிரசன்னத்தை நாம் உணருகிறோமா, அவர் மக்களைச் சந்திக்கிறாரா? அவர் நம்மோடு பேசுகிறாரா? என்பதைக் குறித்துச் சிந்திப்போம். பிதாவே, எங்களுக்கு இருக்கிற கொஞ்சப் பெலத்திலே, உமது நாமத்தை மறுதலியாமல், உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டு அதன் வெளிச்சத்திலே வாழ உதவி செய்யும். ஆமென்.