July

பரிசுத்தத்தில் கலப்படம்

2024 ஜூலை 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,21 முதல் 31 வரை)

  • July 26
❚❚

“சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்” (வசனம் 18).

இப்பொழுது கதை இஸ்ரவேல் நாட்டிலிருந்து யூதா நாட்டிற்குத் திரும்புகிறது. இங்கே சாலொமோனின் மகன் ரெகொபெயாம் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கிறான். இவனுடைய தாயின் பெயர் அம்மோனிய இனத்தைச் சேர்ந்த நாமாள். இவளுடைய பெயர் இந்தப் பகுதியில் இரண்டு முறை சொல்லப்பட்டுள்ளதன் வாயிலாக (வசனங்கள் 21, 31), இவளது தாக்கம் மகன் மீது இருந்தது மட்டுமின்றி, யூதா நாடெங்கிலும் பிரதிபலித்தது. யெரொபெயாமின் தலைமையிலான இஸ்ரவேல் நாட்டைக் காட்டிலும், நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் யூதா மக்கள் விக்கிரக ஆராதனையில் ஈடுபடுவதற்கு இது காரணமாயிற்று.

“யூதா ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்” (வசனம் 22) என வாசிக்கிறோம். சபையின் தலைவர்கள் குடும்ப உறுப்பினர்களாலோ, உலகத்தாலோ, அந்நிய காரியங்களாலோ ஆட்கொள்ளப்பட்டால், அதனுடைய தாக்கம் சபையிலும் நிச்சயமாகவே பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. “சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு” (1 தீமோத்தேயு 4,7) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை சொல்கிறார்.

“கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்து கொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்” (வசனம் 21) என்று வாசிக்கிறோம். சரியான இடத்தில் தவறான ஒரு நபர் ஆட்சிக்கு வந்திருந்தான். கர்த்தருடைய நாமத்தின் மகிமை வெளிப்படுகிற இடத்தில், தவறான காரியங்களைப் பின்பற்றுகிற ஓர் அரசனாக ரெகொபெயாம் மாறியிருந்தான். இன்றைக்கும் சபை மக்களின் பக்திவிருத்திக்காக ஏற்படுத்தி வைத்திருக்கிற வரங்களாகிய பொறுப்புகளில் தவறானதும், தகுதியற்றதுமான நபர்கள் அமரும்போது, அது ஆண்டவர் நியமித்த பாதையில் செல்லாமல் வழிவிலகிச் செல்ல நேரிடுகிறதைக் காண்கிறோம். கர்த்தருடைய சபை கர்த்தர் நியமித்த விதிகளின் அடிப்படையில் நடைபெற வேண்டும். இல்லையேல் அங்கே ஆண்டவரது நாமம் மகிமைப்படுவதற்குப் பதில் தூஷிக்கப்படுவதற்கு ஏதுவாகிவிடும்.

இந்தச் சமயத்தில் எகிப்தின் அரசன் படையெடுத்து வந்து, தேவாலயத்திலுள்ள பொன் பரிசைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டான். ரெகொபெயாம் அதற்குப் பதில் வெண்கலத்தால் ஆன பொருட்களைச் செய்துவைத்தான். சபைகளில் உலகம் உள்ளே நுழைந்தால் அதனுடைய மெய்யான பரிசுத்தம் போய்விடும், இன்றைக்கு வெண்கலம் போன்ற மாற்று ஆராதனைகள், மாற்று உபதேசங்கள், மாற்று முறைமைகள் சபைகளை ஆக்கிரமித்துள்ளன. ஆனால் நாங்கள் கர்த்தரை ஆராதித்துக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இப்படித்தான் இன்றைய சபைகள் அதனுடைய மெய்யான பரிசுத்தத்தை இழந்து, பெயரளவுக்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பிதாவே, சபைக்குள் எவ்விதத்திலும் கலப்படமான காரியங்கள் நுழைந்துவிடாதபடி இருக்க எங்களுக்கு உதவி செய்வீராக, ஆமென்.