December

தூண்டிவிட வேண்டாம்

2024 டிசம்பர் 10 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,25 முதல் 26 வரை

  • December 10
❚❚

 “தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப் பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை” (வசனம் 25).

கர்த்தர் ஆகாபின்மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அவன் தன் மனைவியாகிய யேசபேலின் தூண்டுதலுக்குச் செவிசாய்த்தான். குடும்பம் என்னும் நிறுவனத்தில் கணவனே தலைவனாக இருக்கிறான். குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அவனிடத்திலேயே உள்ளது. ஆனால் இந்த ஆகாப் அதைச் செய்யத் தவறிவிட்டான். அவன் இந்த ஆகாப் எவ்வித மறுப்பும், பரிசீலனையும் இன்றி அவள் சொன்னபடியே காரியங்கள் அனைத்தையும் செய்தான். ஆதியிலேயே ஆதாம் பாவம் செய்தபோது, அவனிடம் தேவன் கூறிய வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. “நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்” (ஆதியாகமம் 3,17) என்று தேவன் கூறினார். இந்த உலகத்தின் முதல் பாவம் மனைவியின் சொல்கேட்டு செய்த பாவமாகும். ஆதாமின் இந்தப் பாவத்தில் மொத்த பூமியுமே சபிக்கப்பட்டதாக மாறியது.

ஒருவனைப் பாவம் செய்யத் தூண்டுவது மிகவும் தீமையான ஒரு செயலாகும். பிறர் பாவம் செய்வதற்கு நேரடியாகவே மறைமுகமாகவே நாம் ஒருபோதும் காரணமாக இருந்துவிடக்கூடாது, ஆனால் யேசபேல் தன் கணவனுக்கு ஏற்ற துணையாக இருந்து ஒத்தாசை செய்வதற்குப் பதிலாக, அவனைப் பாவம் செய்வதற்கு நேராகத் தூண்டிவிட்டாள். “இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” (லூக்கா 17,1) என்று ஆண்டவர் கூறியிருக்கிறார். ஆகவேதான், உணவு உண்ணும் காரியத்தில் கூட, ஒரு பெலவீனமான எளிய விசுவாசி தன் விசுவாசத்தில் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காகவே முதிர்ச்சியடைந்த விசுவாசிகள் கவனமாயிருக்க வேண்டும் என்று பவுல் கொரிந்து சபைக்கு எழுதுகிறார்.

ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவியாகிய பெண் எவ்வித ஆலோசனையும் கூறக்கூடாது என்பதல்ல இதன் பொருள். ஆனால் முக்கியமான முடிவெடுக்கும் காரியங்களில் அவர்கள் அமைதியாக இருந்து, கணவனுக்கு வழிவிடுவதே சிறந்த செயலாக இருக்க முடியும். சிருஷ்டிப்பில் ஆண் பெண் என்ற பாகுபாடு எதுவும் இல்லை, ஆனால் தேவனால் நிறுவப்பட்ட குடும்பத்தில் கணவர்களுக்கு என்று சில பொறுப்புகளும், மனைவிக்கு என்று சில பொறுப்புகளும் உள்ளன. அவரவர் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றும்போது மட்டுமே குடும்பம் தழைத்தோங்கும். சபைகளில் மூப்பர்களின் மனைவிகளோ அல்லது போதகர்களின் மனைவிகளோ தங்கள் கணவர்களை தவறான வழியில் நடத்த வாய்ப்புகள் உள்ளன. தலைமைப் பொறுப்பில் இருக்கும் கணவன்களிடத்தில் மனைவிகளின் தலையீடும் குறுக்கீடும் இருக்குமாயின் அது முழுச் சபையையுமே பாதிக்கும். ஆகவேதான் பவுல், “சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்” (1 கொரிந்தியர் 14,34) என்று எழுதுகிறார்.

பிறர் தூண்டுதலின் பேரில் ஆகாப் பொல்லாப்பானதைச் செய்தது மட்டுமின்றி, பக்கத்து நாட்டு மக்களையும் பார்த்து விக்கிரக ஆராதனையில் பங்கெடுத்தான். கர்த்தர் இதை அருவருப்பு என்று கூறுகிறார். விசுவாசிகளாகிய நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உலகமும் உலகத்தின் முறைமைகளும் நமது இருதயத்திலும், வழிபாட்டிலும் கலந்துவிடக்கூடாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.