2024 டிசம்பர் 5 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,19
- December 5
“நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்” (வசனம் 19).
நேற்றைய பகுதியில் இருந்தே இன்றைய தியானத்தையும் தொடருவோம். “நீ கொலைசெய்ததும், எடுத்துக்கொண்டதும் இல்லையோ” (வசனம் 19) என்று எலியா ஆகாபிடம் கூறினான். எலியா ஆகாபிடம், இரண்டு குற்றங்களை முன்வைத்தான். கொலை மற்றும் சொத்தை எடுத்துக்கொள்ளுதல். ஓர் அரசனைப் பார்த்து எலியா இவ்விரண்டு குற்றச்சாட்டுகளை தைரியமாக முன்வைத்தான். ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி எவ்விதத்திலும் முகதாட்சண்யம் பார்க்காமல், அவருடைய வார்த்தையை தைரியமாக எடுத்துக் கூற வேண்டியது அவசியம். ராஜாவாகிய தாவீது தன் நண்பனாயிருந்தாலும் நாத்தான் தீர்க்கதரிசி அவனுடைய குற்றத்தை உணர்த்தினான். யோவான் ஸ்நானகன் ஏரோதின் குற்றத்தை உணர்த்தினான். போதகர்கள் சபையில் பொதுவாக குற்றத்தை உணர்த்திப் பேசுவதைக் காட்டிலும், தனிப்பட்ட முறையில் பாவம் செய்தவர்களிடம் நேரடியாகவே பேசுவதே அவசியமானது.
“நீ கொலைசெய்ததும், எடுத்துக்கொண்டதும் இல்லையோ” (வசனம் 19) என்று நேரடியாகவே ஆகாபைக் குற்றவாளியாக்கினான். இந்தக் காரியத்தில் ஆகாப் நாபோத்தின் திராட்சை தோட்டத்தை இச்சித்தான். ஆனால் அவனுடைய மனைவியே இந்தக் குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டாள், நகரத்தின் அதிகாரிகளும் மூப்பர்களும் நாபோத்தின் கொலைக்கு உடந்தையாயிருந்தார்கள். ஆயினும் எலியா “நீ கொலை செய்தாய்” என்று முகத்துக்கு நேராகச் சுட்டிக்காட்டினான். இஸ்ரவேலின் நாட்டின் அரசன் (தலைவன்) என்ற முறையிலும், குடும்பத்தின் தலைவன் என்ற முறையிலும், அந்தக் குற்றத்தின் பயனாளி என்ற முறையிலும் கர்த்தர் அவனையே பொறுப்பேற்கச் செய்தார்.
ஏதேன் தோட்டத்தில் ஏவாளே முதலாவது விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்து பாவம் செய்தாள். ஆனால், ஆதாமே முதலாவது பாவம் செய்தான் என்று வேதம் பல்வேறு இடங்களில் கூறுகிறது. ஆகவே ஒரு நாட்டின் தலைவன் என்ற முறையிலும், குடும்பத்தின் தலைவன் என்ற முறையில் அங்கு நடைபெறும் குற்றச் செயல்களுக்கு அவனே பொறுப்பாளி. இந்தத் தியானத்தை வாசிக்கிற நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்தால் குடும்பத்தின் அனைத்து நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் நீங்களே பொறுப்பாளி. ஆகவே உங்கள் தலைமைத்துவத்தை சரியாக நிறைவேற்றுங்கள், அதைத் தட்டிக்கழிக்க முயலாதீர்கள். இதை வாசிக்கிற நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், நீங்கள் செய்கிற காரியங்கள் அனைத்துக்குமான விளைவுகள் உங்கள் குடும்பத்தின் தலைவர் மீதே சாற்றப்படும் என்பதை உணர்ந்து நிதானமாகச் செயல்படுங்கள்.
நான் அந்தத் தோட்டத்தின்மீது ஆசைப்பட்டது உண்மைதான், ஆனால் அந்தக் கொலைக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஆகாப் தப்பிக்க முடியாது. ஆகாப் இச்சித்தான், யேசபேல் பாவத்தை கர்ப்பந்தரித்தாள், இறுதியாக அது மரணத்தைப் பெற்றெடுத்தது. இங்கே பாவத்திற்கான சாக்குப்போக்குகளுக்கு இடமேயில்லை. நாம் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருந்தால், அது நம்மைத் தொடர்ந்து பிடிக்கும் (காண்க: எண்ணாகமம் 32,23). நீ நாபோத்தின் இரத்தம் சிந்தப்படுவதற்கு காரணமாக இருந்தபடியால் உன்னுடைய இரத்தமும் சிந்தப்படும் என்னும் கடுமையான ஒரு தீர்ப்பை ஆகாப் தீர்க்கதரிசியிடமிருந்து பெற்றான். நாம் விசுவாசியாக இருந்தால், நாம் பாவம் செய்திருந்தால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கிச் சுத்திகரிக்கிற பிதாவாகிய தேவனிடத்தில் அறிக்கையிட்டு ஒப்புரவாவோம்.