August

கண்ணீரின் பள்ளத்தாக்குகள்

2024 ஆகஸ்ட் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,17)

  • August 26
❚❚

“இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்” (வசனம் 17).

சாறிபாத் விதவை கர்த்தருடைய அற்புதமான பராமரிப்பை அனுபவித்துக்கொண்டிருந்த போதே அவளின் மகன் நோய்வாய்ப்பட்டான். கர்த்தருடைய அடைக்கலத்திலும், சித்தத்தின் மையத்திலும் இருக்கும் போது விசுவாசிகளுக்கு துன்பங்களும், குறைவுகளும், நோய்களும் ஏற்படுமா? நிச்சயமாக ஏற்படும் என்று இந்த சம்பவமும், இன்னும்பிற நிகழ்வுகளும் நமக்கு நினைவூட்டுகின்றன. பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த மார்த்தாள், மரியாள், லாசரு ஆகியோரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதிகமாக நேசித்திருந்தார். ஆயினும் லாசரு வியாதிப்பட்டான் என்று வாசிக்கிறோம். சில நேரங்களில் கர்த்தருடைய வழிகள் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவை. ஆயினும், அவற்றிற்குப் பின்னால் அவரது மகத்தான செயல்கள் இருக்கின்றன என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, இறைச்சி வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்குக் கர்த்தர் இறைச்சியைக் கொடுத்தார். ஆயினும் அவர்கள் அதை வாயில் மென்று கொண்டிருந்தபோதே அங்கே சாவு ஏற்பட்டன என்று வாசிக்கிறோம். இவற்றை ஏன் அனுமதிக்கிறார்? நாம் அவரது தயவையும், இரக்கத்தையும் அனுபவிப்பது மட்டுமின்றி, நமது குணமும் சீர்பட வேண்டும் என்று விரும்புகிறார். நம்மை விசுவாசத்தில் தைரியப்படுத்துவதற்காக, நாம் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கும்போதே கண்ணீரின் பள்ளத்தாக்கில் வழியாக நடத்துகிறார். இது அவருடைய அன்பின் ஏற்பாடேயன்றி வேறல்ல. ஆகவேதான் எபிரெயர் நிருபத்தின் ஆக்கியோன் இவ்விதமாகக் கூறுகிறான்: “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்” (12,6). நாம் தொடர்ந்து அவரது கிருபையைப் பற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக இவற்றை அனுமதிக்கிறார்.

இத்தனை நாட்களாக எலியாவும் அவர்களுடனே தங்கியிருக்கிறான் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய ஊழியர்களுடைய பிரசன்னம் நமக்கு முக்கியமானதுதான். ஆனால் அதைக் காட்டிலும் நாம் கர்த்தரையும் அவருடைய பிரசன்னத்தையும் அதிகமாக நாட வேண்டும். நாம் ஊழியக்காரர்களைப் பின்பற்றுவதைக் காட்டிலும் கர்த்தரைப் பின்பற்ற வேண்டியதே அவசியம். வரம்பெற்ற ஊழியர்களின் பழக்கம் இருந்தால் நமக்கு எத்தீங்கும் வராது என்று நினைக்கக்கூடாது. யோவானைப் போல நாம் கர்த்தருடைய சத்தமாக இருந்து, அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் எனச் சொல்லி, நமது சீடரை கிறிஸ்துவின் சீடராக அனுப்ப வேண்டும்.

நமது கிறிஸ்தவ விசுவாசப் பாதையில் செல்லும்போது, கடுமையான துன்பங்களைச் சந்திக்க நேர்ந்தால் நாம் தடுமாறக்கூடாது. பழைய ஏற்பாட்டு யோசேப்பு சந்திக்காத துன்பங்களையா நாம் சந்தித்துவிடப் போகிறோம் அல்லது தானியேலுக்கு நேர்ந்திடாத உபத்திரவங்களா நமக்கு வந்துவிடப் போகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய ஆண்டவரை நினைத்துக்கொள்வோம். அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் என்று வாசிக்கிறோமே. அவர் பாடுகளுக்குப் பின்னரே கிரீடத்தைச் சுதந்தரித்துக்கொண்டார். பேதுருவின் வார்த்தைகளோடு இன்றைய தியானத்தை நிறைவு செய்வோம். “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகைக்காதீர்கள்” (1 பேதுரு 4,12).